வெளியிடப்பட்ட நேரம்: 13:10 (24/11/2017)

கடைசி தொடர்பு:13:10 (24/11/2017)

காணொளி மூலம் முதல்வர் திறந்த புதிய துணை மின்நிலையம்!

 

கரூர் மாவட்டம், கடவூர் வட்டம், சிந்தாமணிப்பட்டியில் புதிய துணை மின் நிலையத்தை காணொளி காட்சியின் வாயிலாக தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார்.

கரூர் மாவட்டம், கடவூர் வட்டம், சிந்தாமணிப்பட்டியில் 110/33 கி.வோ. துணை மின் நிலையத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி  காணொளி காட்சியின் வாயிலாக திறந்து வைத்ததையொட்டி, கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் கீதா, மாவட்ட வருவாய் அலுவலர் ச.சூர்யபிரகாஷ் ஆகியோர் பார்வையிட்டு, பொதுமக்கள் மற்றும் பணியாளர்களுக்கு இனிப்பு வழங்கினார்கள்.

சிந்தாமணிப்பட்டி 33/11 கி.வோ. துணை மின்நிலையத்திலிருந்து அருகே உள்ள கொசூர், தரகம்பட்டி, கடவூர், பாலவிடுதி ஆகிய 18 கிராமங்கள் மற்றும் 120 குக்கிராமங்கள் 28 கி.மீ. அப்பால் உள்ள அய்யர்மலை துணை மின் நிலையம் மூலம் மின் விநியோகம் வழங்கப்பட்டு வந்தது. இதனால், சுற்றியுள்ள பகுதிகளில் குறைந்த மின் அழுத்தம் நிலவியதன் காரணமாக விவசாய மோட்டார்கள், குடிநீர் பயன்பாட்டில் உள்ள மோட்டார்கள் அடிக்கடி பழுதடைந்து இயங்காமல் பாதிப்படைந்து வந்தது.

இதனால் இப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ரூ.1495.35 லட்சம் மதிப்பீட்டில் சிந்தாமணிப்பட்டியில் 110/33 கே.வி. புதிய துணை மின் நிலையம் அமைக்க அனுமதியளித்ததின் பேரில் பணிகள் தொடங்கப்பட்டு முடிவுற்றதையொட்டி, முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி காணொளி காட்சியின் வாயிலாக திறந்துவைத்தார்கள். இதையொட்டி இப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள், பணியாளர்களுக்கு கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் கீதா, மாவட்ட வருவாய் அலுவலர் ச.சூர்யபிரகாஷ் ஆகியோர் இனிப்பு வழங்கி பார்வையிட்டார்கள். இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு மின்சார வாரிய மேற்பார்வை பொறியாளர் ஸ்டாலின்பாபு, வருவாய் கோட்டாட்சியர் விமல்ராஜ், செயற்பொறியாளர் பூவராகவன், உதவி செயற்பொறியாளர்கள் வெங்கடேஷ், பன்னீர்செல்வம், மக்கள் தொடர்பு அலுவலர் சரவணபெருமாள், கடவூர் வட்டாட்சியர் புகழேந்தி ஆகியோர் கலந்துகொண்டனர்.