வெளியிடப்பட்ட நேரம்: 12:09 (24/11/2017)

கடைசி தொடர்பு:12:09 (24/11/2017)

“பள்ளி நேரத்துக்கு பஸ் வராது... அதனால டீச்சருங்க வரமாட்டேங்கிறாங்க” - கலெக்டரிம் மனு கொடுத்த பள்ளி மாணவர்கள்

தேனி மாவட்டம், கொம்பைத்தொழு அருகில் உள்ள ஒரு மலைக்கிராமம், மஞ்சனூத்து. 2006-ம் ஆண்டு இங்குள்ள ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளியில், 'அனைவருக்கும் கல்வி இயக்கம்' தொடங்கப்பட்டது. இதில், தற்போது 25 மாணவ, மாணவிகள் பயின்றுவருகிறார்கள். இங்கே ஈராசிரியர்கள் பணியாற்றிவந்த நிலையில், ஓர் இடைநிலை ஆசிரியை, கடந்த மாதம் உத்தமபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு மாற்றுப்பணியில் சென்றுவிட்டார். இதனால், மஞ்சனூத்துப் பள்ளியில் இருக்கும் ஓர் ஆசிரியர் நான்காம் மற்றும் ஐந்தாம் வகுப்புகளுக்குச் செல்லவே நேரம் சரியாக இருக்கிறது. முதலாம் வகுப்பிலிருந்து மூன்றாம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு ஒரு மாதமாக வகுப்பெடுக்கப்படவில்லை. இதனால், அந்த மாணவ, மாணவிகள் கையில் மனு ஏந்தி, மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்குச் சென்றனர். அவர்களுடன் ஊர்க்காரர்களும் வந்திருந்தனர். 

பள்ளி மாணவர்கள்

மஞ்சனூத்து கிராமத்தைச் சேர்ந்த பட்டதாரி தங்கப்பாண்டியன், “ ‘அனைவருக்கும் கல்வி இயக்கம்’ சார்பாக ஆரம்பிக்கப்பட்ட எங்கள் ஊர் பள்ளிக்கு நான்தான் முதல் ஆசிரியர். குறைந்த ஊதியத்தில் என்னை தற்காலிகமாகப் பணியில் அமர்த்தினார்கள். நான் எம்.ஏ. டி.டி.எட் படித்திருக்கிறேன். எங்கள் மலைக்கிராம மக்கள் தற்போதுதான் வெளி உலகத் தொடர்பை ஏற்படுத்திவருகிறார்கள். அதற்கு, கல்வி கற்க ஆரம்பித்ததே காரணம். ஆனால், தற்போது இரண்டு ஆசிரியர்களில் ஒருவர் சென்றுவிட்டார். அதனால் வகுப்புகள் நடக்கவில்லை. படிக்க ஆர்வமாக இருக்கும் குழந்தைகள், எத்தனை நாள்தான் வகுப்பறையில் சும்மாவே உட்கார்ந்திருப்பார்கள். அந்த ஆசிரியர் பணிமாறுதல் வாங்கிச்செல்லக் காரணம், எங்கள் ஊருக்கு இரண்டு கிலோமீட்டர் நடந்து வரவேண்டும். ஒரு நாளைக்கு மூன்று முறை பஸ் இருந்தாலும், பெரும்பாலும் பள்ளி நேரத்தில் பஸ் வராது. அதனால், நடந்துதான் வரவேண்டும். இதனால்தான் ஆசிரியர்கள் யாரும் எங்கள் பள்ளிக்கு வருவதில்லை. விளிம்புநிலை மக்கள் நாங்கள். எங்கள் குழந்தைகளுக்குக் கல்வி ஒன்றே ஆதாரம். அதுவும் கிடைக்காத சூழ்நிலை. மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்'' என்றார். 

மாவட்ட கலெக்டரிடம் தங்கள் குறைகளைச் சொல்ல காத்திருந்த மக்களுக்கு மத்தியில், பள்ளிச் சீருடையோடு அமர்ந்திருந்த மாணவர்கள் சிலரிடம் பேசினோம். ''எங்க ஸ்கூலுக்கு ஒரே ஒரு சார்தான் இப்போ இருக்காங்க. போன மாசம்வரை ஒரு டீச்சர் வந்தாங்க. இப்போ அவுங்க வேற ஸ்கூலுக்குப் போயிட்டாங்க. எங்களுக்குப் பாடம் சொல்லித் தர்றதில்லே, வீட்டுப் பாடம் கொடுக்கறதில்லே, கதை சொல்ல மாட்றாங்க. எங்களுக்கு டீச்சர் வேணும்'' என்றார்கள். 

இந்த மலைக்கிராம மக்கள், அருகில் இருக்கும் காமன்கல்லூருக்குச் சென்று எட்டாம் வகுப்பு வரையிலும், அங்கிருந்து குமணந்தொழுவுக்குச் சென்று மேல்நிலைக் கல்வியும் படிக்க வேண்டும். ஆனால், தொடக்கக் கல்வியே இப்போது கேள்விக்குறியாகி இருக்கிறது. இந்த விஷயத்தை மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் கணேசன் கவனத்துக்குக் கொண்டுசென்றோம், 

“மாணவர்களின் கோரிக்கையைப் பரிசீலனை செய்துகொண்டிருக்கிறோம். மஞ்சனூத்துப் பள்ளியிலிருந்து வேறு பள்ளிக்கு மாற்றலாகிச் சென்ற அந்த ஆசிரியையே மீண்டும் அதே பள்ளிக்கு மாற்றும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார். 

பருவத்தே பயிர் செய் என்பார்கள். அதுபோல, குழந்தைகளின் கல்வி விஷயத்தில் விரைந்து நல்ல முடிவு எடுக்கப்பட வேண்டும்!


டிரெண்டிங் @ விகடன்