இடிக்கப்படும் வீடுகள்... அம்மனிடம் முறையிடும் மக்கள்!

அகற்றப்படும் வீடுகள்

சென்னையில், கூவம் அடையாற்றங்கரைப் பகுதியில் வசிக்கும் மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு, மாற்று இடங்களில் குடியமர்த்தப்பட்டுவருகின்றனர். சென்னை பாடிக்குப்பம் கூவம் கரையோரப் பகுதி மக்களையும் அங்கிருந்து வெளியேற்றம் செய்யும் பணியில் சென்னை மாநகராட்சியும் வருவாய்த்துறையும் ஈடுபட்டுவருகின்றன.

பாடிக்குப்பத்தில் வசிக்கும் 300 குடும்பங்களுக்கும் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்துக்குச் சொந்தமான 'அத்திப்பட்டு' பகுதியில் மாற்று வீடுகள் வழங்கக் கோரி,  சட்டப் பஞ்சாயத்து இயக்கம், அரசுக்கு மனு அளித்திருந்தது. ஆனால், அந்த மனுமீது எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில், உரிய நடவடிக்கை மேற்கொண்டு, மாற்று இடம் கோரி, பாடிக்குப்பம் 'அங்காள பரமேஸ்வரி அம்மனிடம்' இன்று முறையிட சட்டப் பஞ்சாயத்து இயக்கம் முடிவுசெய்துள்ளது. 

இதுகுறித்து, சட்டப்பஞ்சாயத்து  இயக்கத்தைச் சேர்ந்த ஜெகதீஸ்வரன், "கூவம் கரையோரம் வாழும் மக்கள், தொடர்ந்து அப்புறப்படுத்தப்பட்டு, வேறு இடங்களில் குடியமர்த்தப்பட்டுவருகிறார்கள். பாடிக்குப்பம் பகுதி, கோயம்பேடு சந்தைக்கு அருகில் இருக்கும் பகுதி (வார்டு - 93). இங்கு வசிக்கும் மக்களில் பெரும்பாலானவர்கள், கோயம்பேடு சந்தையில் அதிகாலை 3 மணி முதல் வேலை செய்பவர்கள். இன்னும் சிலர், அருகில் இருக்கும் வீடுகளில் பணியாளாக வேலை செய்பவர்கள். இங்கிருந்து அகற்றப்படும் மக்கள், இதே இடத்தில் பிறந்து வளர்ந்தவர்கள். அவர்களின் வாழ்வாதாரம் இந்தப் பகுதியை நம்பியே இருக்கிறது. இந்த இடத்தை விட்டுவிட்டுப் போவது அவர்களுக்கு உயிர் வலி. எங்களுடைய அப்துல் கலாம் அறிவகம் - அங்கு வசிப்பவர்களுக்கு நூலகமாகவும், மாணவர்களுக்கான டியூஷன் மையமாகவும் செயல்பட்டுவருகிறது. கூவம் சீரமைக்கப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், எங்கள் வாழ்வாதாரத்தை அழித்துவிட்டு, அது நடத்தப்பட வேண்டுமா? எங்களுக்கான மாற்று வீடுகள் பெரும்பாக்கம் பகுதியில் வழங்கப்படும் என நாங்கள் தெரிந்துகொண்ட பின்னர், எங்கள் தேடலின் மூலம் பாடிக்குப்பம் பகுதிக்கு ஓரளவு அருகில் இருக்கும் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்துக்குச் சொந்தமான ‘அத்திப்பட்டு' பகுதியில் 1,400 வீடுகள் கட்டப்பட்டிருப்பது அறிந்தோம். உடனடியாக 31.7.2017 அன்று தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்துக்கு மனு அளித்தோம். அந்த மனுமீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத காரணத்தினால், மீண்டும் 5.10.2017 அன்று தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்துக்கும், 10.10.2017 அன்று துணை முதல்வர், தலைமைச் செயலாளர், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறைச் செயலாளர், பொதுப்பணித்துறைச் செயலாளர் மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் ஆகியோரைச் சந்தித்து, பாதிக்கப்பட்ட பொதுமக்களின் கையொப்பங்களுடன் இணைத்து, மனு வழங்கினோம். அனைவருமே எங்களுக்கு உதவுவதாகத் தெரிவித்தனர். 

அகற்றப்படும் வீடுகள்

இப்போது, வீடுகளை இடிக்கும் பணி தொடங்கிவிட்டது. ஆனால், எங்கள் மனுமீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. நாங்கள் சந்தித்த அதிகாரிகள், 'குடிசை மாற்று வாரியத்துக்குச் சொந்தமான அத்திப்பட்டு குடியிருப்பை எங்களுக்கு ஒதுக்குவதில் சிக்கல்கள் இல்லை' என்றே தெரிவித்தனர். எங்களுடைய மனுவுக்கான பதில் வராத காரணத்தால், எங்களால் மாற்று இடங்களுக்குச் செல்ல முடியாது.  இதற்கான போராட்டம் இனி துவங்கும்" என்கிறார், ஜெகதீஸ்வரன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!