வெளியிடப்பட்ட நேரம்: 15:30 (24/11/2017)

கடைசி தொடர்பு:15:30 (24/11/2017)

தேர்தல் பிரசாரத்துக்கு தமிழகத்தில் தயாராகும் பேருந்துகளை விரும்பும் பிற மாநிலத் தலைவர்கள்

2014 பாராளுமன்றத் தேர்தலின்போது காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பயன்படுத்திய பிரசார பேருந்து, தமிழகத்தில் உள்ள கரூரில் தயார்செய்யப்பட்டது. இப்போது, 2018-ம் ஆண்டு மே மாதம் நடைபெற இருக்கும் கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்துக்காக, ஒரு கோடி ரூபாயில் பேருந்து ஒன்றை வடிவமைத்து, முன்னாள் முதல்வர் குமாரசாமி அசத்தியுள்ளார்.

குமரசாமி

மலைப்பகுதிகளைக்கொண்ட கர்நாடக மாநிலம், மொத்தம் 27 மாவட்டங்களைக் கொண்டுள்ளது. இதில், 225 சட்டமன்றத் தொகுதிகளில் உள்ள மக்களையும் நேரடியாகச் சந்தித்து வாக்கு சேகரிக்க, ஒரு கோடி ரூபாயில் பேருந்து ஒன்றை வடிவமைத்துள்ளார், முன்னாள் முதல்வர் குமாரசாமி.

பேருந்து

இதற்கெனத் தனியாக ஒரு அசோக் லேலண்டு பேருந்து சேஸ் ஒன்றை வாங்கி, கரூரில் உள்ள ஒரு பட்டறையில் பாடி கட்டியுள்ளனர். சேலம் ஐந்து ரோட்டில் உள்ள சிட்கோ தொழிற்பேட்டையில், செந்தில் என்பவரின் 'ஸ்பேஸ் டெக்' என்ற கேரவன் சொகுசு வேன்களைச்  செய்துகொடுக்கும் நிறுவனத்தில் பிரசாரப் பேருந்தை வடிவமைத்துள்ளனர்.

தனி அறை

சொகுசுப் பேருந்தில் சமையலறை, கழிப்பறை, குளியலறை, முகச்சவரம் செய்துகொள்ள வசதியாக, வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட சாய்வுநாற்காலி,  குளிரூட்டப்பட்ட படுக்கையறை, கட்சிக்காரர்கள் மற்றும் முக்கிய தலைவர்களுடன் ஆலோசனை நடத்த இரண்டு சோஃபாக்களுடன்கூடிய தனிஅறை, வேட்பாளர் மற்றும் குமாரசாமி இருவரும் பேருந்தின் மேல்பகுதிக்குச் சென்று மக்களைப் பார்ப்பதற்கு ஏற்ற வகையில் ரிமோட்டில் இயங்கும் லிப்ட், ரிமோட் வசதியுடன்கூடிய  நகரும் படிக்கட்டுகள், குமாரசாமியின் பேச்சு மற்றும் பிரசார கட்சிகளைப் படம் பிடிக்கவும், அவற்றை எடிட் செய்து ஒளிபரப்பவும் வசதியாக ஒரு தனி அறை என்று பிரமிக்கவைக்கும் பல வசதிகள் இந்தப் பேருந்தில் செய்யப்பட்டுள்ளன.

பாத்ரூம்

நான்கு மாதங்களாக முழுநேரமும் வேலைபார்த்த 'ஸ்பேஸ் டெக்' நிறுவனத்தினர், கடந்த அக்டோபர் மாதம் 23-ம் தேதி, அனைத்து வேலைகளையும் முடித்து பெங்களூரில் கொடுத்துவிட்டு வந்துள்ளனர்.