வெளியிடப்பட்ட நேரம்: 15:03 (24/11/2017)

கடைசி தொடர்பு:15:03 (24/11/2017)

கைக்குழந்தையுடன் இரவு நேர ரோந்து... குறும்படமாகும் பெண் போலீஸ் வாழ்க்கை!

மத்திய அரசு பெண் ஊழியர்களுக்கு கர்ப்பகாலத்தின்போது ஆறு மாதம் வரை சம்பளத்துடன் விடுமுறை எடுத்துக்கொள்ள அனுமதி உண்டு. தனியார் அலுவலகங்களிலும் பெண்களுக்குப் பேறுகால விடுமுறை உண்டு. அதுபோல் பெண் போலீஸ்களுக்கும் கர்ப்பக்கால விடுமுறை இருக்கிறது. பொதுவாகவே, பெண் போலீஸ்களுக்குப் பணியில் உள்ள சங்கடங்கள் குறித்து அனைவரும் அறிந்ததே. ஆனால், கர்ப்ப காலத்திலும் சரி... குழந்தை பெற்றுக்கொண்ட பிறகும் சரி... விடுமுறை எடுக்காமல் பணிபுரிந்த பெண் போலீஸ் அதிகாரி அர்ச்சனா ஜாவின். இவரின் வாழ்க்கை வரலாறு, பெண்களுக்கு ஊக்கத்தை ஏற்படுத்தும் வகையில், குறும்படமாக வெளியாகவுள்ளது. 

போலீஸ்

Photo Courtesy: Daily bhaskar

சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூர் மாவட்டக் குற்றப்பிரிவு டி.எஸ்.பி-யாகப் பணிபுரிந்துவருபவர் அர்ச்சனா ஜா. கடமையில் கண்ணும்கருத்துமாக இருப்பவர். கடந்த ஆண்டு, ராய்ப்பூருக்கு பிரதமர் வருகைபுரிந்தார். அந்தச் சமயத்தில், அர்ச்சனா ஜா நிறைமாதக் கர்ப்பிணி. பிரதமர் வருவதால் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யவேண்டியிருந்தது. அர்ச்சனா நிறைமாத கர்ப்பிணியாக இருந்தாலும், பிரதமரின் பாதுகாப்புப் பணியிலிருந்து ஒதுங்கிக்கொள்ள விரும்பவில்லை. அப்போது ஏழு நாள்கள் வரை தொடர்ச்சியாகப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டார். சக அதிகாரிகள், `அர்ச்சனா, நீங்கள் ஓய்வு எடுத்துக்கொள்ளுங்கள்' என அறிவுறுத்தினாலும் அதை அவர் ஏற்கவில்லை. அர்ச்சனாவின் பணி மீதான பற்றைக் கண்டு உயர் அதிகாரிகளே வியந்தனர்.

அர்ச்சனாவுக்குக் குழந்தை பிறந்தது. கணவருக்கோ பிலாஸ்பூரில் பணி. குழந்தை பெற்ற சில மாதங்களில் மீண்டும் பணிக்குக் கிளம்பிவிட்டார். குழந்தையைப் பார்த்துக்கொள்ள யாரும் இல்லாத நிலையில், கைக்குழந்தையுடன் அர்ச்சனா ரோந்துப் பணி மேற்கொள்ளும் புகைப்படம் இணையத்தில் சென்ற ஆண்டு வைரலானது.  ஒரு கையில் வாக்கிடாக்கி இருக்க,  மடியில் குழந்தை உறங்கிக்கொண்டிருக்க, ரோந்து வாகனத்தில் அர்ச்சனா செல்வதை ராய்ப்பூர்வாசிகள் மூக்கில் விரல்வைத்துப் பார்த்தனர். தற்போது, அர்ச்சனா ஜாவின் குழந்தை வளர்ந்துவிட்டது. பாதுகாப்புப் பணியில் அர்ச்சனாவை இப்போதும் குழந்தையுடன்  பார்க்க முடியும்.

குழந்தையுடன் ரோந்து மேற்கொண்ட பெண் போலீஸ்

Photo Courtesy: Daily bhaskar

துப்புதுலக்குவதிலும் அர்ச்சனா கில்லாடி. துர்க் மாவட்டத்தில் நடந்த கடத்தல் சம்பவத்தில், குற்றவாளிகளை ஒரே நாளில் கண்டுபிடித்தார். இந்தச் சம்பவம், சத்தீஸ்கர் மக்களிடையே அவர்மீது மிகுந்த மரியாதையும் அன்பையும் ஏற்படுத்தியது. பொது இடங்களில் பார்த்தால், பொதுமக்கள் அவருடன் செல்ஃபி எடுத்து ஃபேஸ்புக்கில் பதியும் அளவுக்குப் பிரபலமானார். பணியையும் குடும்பப் பொறுப்பையும் சரிசமமாகப் பார்த்துக்கொள்ள பெண்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில், அர்ச்சனாவின் வாழ்க்கை குறும்படமாகத் தயாராகிறது. ராகுல் பரேக் என்கிற இளம் இயக்குநர் இந்தக் குறும்படத்தை இயக்கவுள்ளார்.

பெண் போலீஸ் அதிகாரி அர்ச்சனா ஜா

Photo Courtesy: Daily bhaskar

“என்னைப் பொறுத்தவரை கடமைதான் ஃபர்ஸ்ட். போலீஸ் துறையில் பெண்கள் சந்திக்கும் பிரச்னைகளும் சவால்களும் அதிகம். பெண் என்பதால் கர்ப்பகாலத்தில் விடுப்பு எடுத்துதான் ஆக வேண்டும் என்கிற கட்டாயம் இல்லை. குடும்பப் பொறுப்பு இருக்கத்தான் செய்யும். அதேவேளையில், கடமையிலும் கண்ணும்கருத்துமாக இருக்க வேண்டும். குழந்தை பிறந்த சமயத்தில் நானும் கஷ்டப்படத்தான் செய்தேன். ஆனால், கடமையையும் பொறுப்பையும் சரிசமமாக பாவிக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். கர்ப்பகாலத்திலும், குழந்தை பிறந்தபிறகும் என் குடும்பத்தினர் எனக்கு எல்லாவிதங்களிலும் ஆதரவாக இருந்தனர். ‘பெண் உரிமை வேண்டும்’ எனக் கொடி பிடிப்பதற்குப் பதிலாக, உங்கள் கடமையைச் சரிவரச் செய்தால், உங்களுக்கான உரிமை உங்களைத் தேடிவரும்” என்கிறார் அர்ச்சனா.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்