வெளியிடப்பட்ட நேரம்: 17:11 (24/11/2017)

கடைசி தொடர்பு:17:11 (24/11/2017)

‘கடனை அடைத்தால் அன்பானவன்... எதிரியானால் அந்நியன்!’ - அன்புச்செழியனின் அதிரடி ‘டயலாக்’

 அன்புச்செழியன்

‘என்னிடம் வாங்கும் கடனை ஒழுங்காகத் திரும்பக் கொடுத்தால், அவர்கள் என்னுடைய நண்பர்கள்... அவர்களுக்கு நான் அன்பானவன். அதே நேரத்தில், என்னை ஏமாற்ற நினைத்து எனக்கு எதிரியானால் நான் அந்நியன்' என்ற டயலாக்கை சினிமா ஃபைனான்ஸியர் அன்புச்செழியன் சொல்வதுண்டு என்கிறார்கள், அவருடன் நெருக்கமாகப் பழகியவர்கள். 

நடிகரும் இயக்குநருமான சசிகுமாரின் அத்தை மகன் அசோக்குமார் தற்கொலை வழக்கால், சினிமா ஃபைனான்ஸியர் அன்புச்செழியனுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. அன்புச்செழியனை சென்னை போலீஸார் தேடிவரும் சூழ்நிலையில், அவர்குறித்த தகவல்கள் வெளியாகியவண்ணம் உள்ளன. கடந்த 2011-ம் ஆண்டில் அன்புச்செழியன் மீது தயாரிப்பாளர் தங்கராஜ் கொடுத்த புகாரின்அடிப்படையில் அவர் கைதுசெய்யப்பட்டதாகவும், பிறகு அந்த வழக்கில் விடுதலையாகிவிட்டதாகவும் போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. 
சினிமா துறையில் ஃபைனான்ஸ் செய்துவந்தவர்களைப் பின்னுக்குத்தள்ள, குறைந்த வட்டிக்கு பணத்தைக் கொடுத்துவந்துள்ளார் அன்புச்செழியன். இதனால், அன்புச்செழியனிடமே தயாரிப்பாளர்கள் பணத்தைப் பெற்றனர். கொடுத்த பணத்தை குறிப்பிட்ட காலத்துக்குள் திரும்பச் செலுத்திவிட்டால், அவர்களுக்கு அன்புச்செழியன் அன்பானவர். அதே நேரத்தில் அவரை ஏமாற்ற நினைத்தால், அவர்களுக்குத்தான் எதிரி என்கின்றனர் பல சினிமா தயாரிப்பாளர்கள்.

அன்புச்செழியனின் நீண்ட கால நண்பர் ஒருவரிடம் பேசினோம். “அன்பை எனக்கு பல ஆண்டுகளாகத் தெரியும். அவருடைய குடும்பம் மதுரையில் செட்டிலான பிறகு, அங்குள்ள வியாபாரிகளுக்கு வட்டிக்கு பணம் கொடுத்துவந்தார் அன்பு. அதன்பிறகு, சினிமா பிரமுகர்களுக்கு கொடுக்கல், வாங்கலில் ஈடுபட்டார். மற்றவர்களைவிட அன்புவிடம் குறைந்தவட்டி என்பதால், பலர் அவரிடம் பணம் வாங்கினர். இதுவே, அன்புவின் அசூரவளர்ச்சிக்குக் காரணம். தன்னுடைய பணத்தோடு, சிலரிடம் கடன் வாங்கித் தொழிலை விரிவுப்படுத்தினார். நியாயமாக நடந்துகொள்பவர்களுக்கு அன்பு நல்லதொரு நண்பன். பல சினிமா தயாரிப்பாளர்களுக்கு ஆபத்பாந்தகனாகக்கூட அன்பு இருந்துள்ளார். அவர்களுக்கெல்லாம் அன்பு அன்று தெய்வமாகத் தெரிந்தார். அதே பணத்தை திரும்பக் கொடுக்காமல் அன்பை ஏமாற்ற நினைத்தால், அவர் அந்நியனாக மாறிவிடுவார்.

அன்புச்செழியன்

 
‘பணம் வாங்கும்போது இருக்கிற சிரிப்பு, கொடுக்கப்போகும்போது இருக்கணும்' என்று  அன்பு அடிக்கடி சொல்வார். அதோடு, என்னிடம் வாங்கும் கடனை சரியாகக் கொடுத்தால், அவர்களுக்கு நான் அன்பானவன். என்னை ஏமாற்ற நினைத்தால், அவர்களுக்கு நான் எதிரி என்ற டயலாக் அவரிடம் கேட்கலாம். சில ஆண்டுகளுக்கு முன்பு, அன்புவிடம் சில லட்சம் ரூபாயை கடனாக வாங்கினார், தங்கமான இயக்குநர். கடனுக்கு அடமானமாக ஒரு கோடி மதிப்பிலான சொத்துக்களை அன்புவிடம் அவர் கொடுத்திருந்தார். ஆனால், படம் வசூல்ரீதியாக வெற்றிபெறாததால், இயக்குநருக்கு கடும் நிதிநெருக்கடி ஏற்பட்டது. சொத்து மதிப்பைவிட கடன் தொகை அதிகமானது. இதனால், வேறுவழியின்றி சொத்துக்களை அன்பு சொன்ன பெயரில் எழுதிக் கொடுத்துவிட்டுச்சென்றுவிட்டார் அந்த இயக்குநர்.

சினிமா பிரபலங்களுடன் மட்டுமல்லாமல், அன்புச்செழியனுக்கு அரசியலிலும் நெருங்கிய தொடர்புகள் உள்ளன. இதனால், மதுரையிலும் சென்னையிலும் அவருக்கென தனி செல்வாக்கு இருக்கிறது. பெரிய ஹீரோக்கள் என்றால், கோடிக்கணக்கில் நிதியுதவிசெய்வார். கொடுக்கல் வாங்கலில் கறாராகவே இருப்பார். சில ஆண்டுகளாக அன்புச்செழியன் பங்கேற்காத ஆடியோ ரிலீஸ் இல்லை என்றே சொல்லலாம். ஏனெனில், பெரும்பாலான படத்துக்கு அன்புச்செழியன்தான் ஃபைனான்ஸ் செய்திருந்தார். கோடிக்கணக்கில் பிசினஸ் செய்தாலும் அவர், தன்னுடைய கெட்டப்பை என்றுமே மாற்றியதில்லை. சிம்பிளாகத்தான் இருப்பார். சிபாரிசு, புரோக்கர் என்று வந்தால் பணத்தைக் கொடுக்க மாட்டார். நம்பிக்கை அடிப்படையில்தான் பணம் கொடுக்கப்படும்.

பண மதிப்பிழப்பு சமயத்தில், கடன் வாங்கிய யாரையும் தொந்தரவு செய்யவில்லை. பழைய ரூபாய் நோட்டுகளைப் பெற்று, அதை மாற்ற விரும்பாத அன்பு, எல்லாவற்றையும் புதிய ரூபாய் நோட்டுக்களாகவே பெற்றார். அன்பு மீது வருமான வரித்துறையினருக்கு நீண்ட காலமாக சந்தேகம் இருந்துவந்தது. அதனால் அவரது வீடு, அலுவலகங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. இந்த பிசினஸிலிருந்து விலக முடிவுசெய்த சமயத்தில்தான், அசோக்குமார் தற்கொலைமூலம் அன்புச்செழியனுக்கு சிக்கல் எழுந்துள்ளது” என்றார்.

அசோக்குமார்

சசிகுமார் தரப்பிடம் அன்புச்செழியன் தரப்பிலிருந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுவருகிறது. அன்புச்செழியனுக்கு எதிராகக் குரல் கொடுத்தவர்களில் பலர், அவரிடம் கடன் வாங்கியவர்கள். இதனால், அவர்களுக்கு அன்பு தரப்பிலிருந்து நெருக்கடிகள் வரத்தொடங்கியுள்ளன. இதையடுத்து, அவர்களில் சிலர் அமைதியாகிவிட்டனர். ஆரம்பத்திலிருந்தே அசோக்குமார் தற்கொலைக்கும் அன்புச்செழியனுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று கூறும் அன்புச்செழியனின் ஆதரவாளர்கள், அதுதொடர்பான ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்து முன்ஜாமீன் பெற முயற்சி செய்துவருவதாக உள்விவர வட்டாரங்கள் தெரிவித்தன. இதற்கிடையில், அன்புச்செழியன் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் செல்போன் டவர் சிக்னல்மூலம் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுவரும் போலீஸாருக்கு, முக்கியத் தகவல் ஒன்று கிடைத்துள்ளது. அந்தத் தகவல் அடிப்படையில் போலீஸார் அன்புச்செழியனின் இருப்பிடத்தை நெருங்குவதற்கு முன்பே, போலீஸ் துறையிலிருந்தே அவருக்குத் தகவல் கிடைத்துள்ளது. இதனால், அங்கு சென்ற போலீஸார் ஏமாற்றத்துடன் திரும்பியுள்ளனர். இதையடுத்து, அன்புச்செழியனைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ள போலீஸார் சோர்வடைந்துள்ளனர்.