ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் இரட்டை இலையை எதிர்த்து களம் இறங்குகிறார் தினகரன்!

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிடப்போவதாக, டி.டி.வி. தினகரன் அறிவித்துள்ளார்.

டி.டி.வி. தினகரன்


முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவால் காலியான ஆர்.கே. நகர் தொகுதியில், டிசம்பர் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பை இன்று தேர்தல் ஆணையம் வெளியிட்டது. அ.தி.மு.க-வில் எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வம் அணிகள் இணைந்தாலும், டி.டி.வி. தினகரன் தலைமையில் ஓரணி பிளவுபட்டு நிற்கிறது. 'இரட்டை இலை' சின்னத்தை பழனிசாமி அணிக்கு வழங்கி, தேர்தல் ஆணையம் நேற்று தீர்ப்பு வழங்கிய நிலையில், அதை எதிர்த்து உச்ச நீதிமன்றம் செல்வதாக டி.டி.வி தினகரன் அறிவித்திருந்தார்.  இந்த நிலையில், ஆர்.கே. நகர் தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிட இருப்பதாக அறிவித்துள்ளார். 

இதுபற்றி திருப்பூரில் இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த டி.டி.வி. தினகரன், “அ.தி.மு.க சின்னத்தை மீட்க இரட்டை இலைச் சின்னத்தை எதிர்த்துப் போட்டியிடவேண்டிய சூழல் உருவாகியுள்ளது. உச்ச நீதிமன்றம் சென்று, சட்டப்படி இரட்டை இலைச் சின்னத்தை மீட்போம். ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் தொப்பி சின்னத்தில் போட்டியிட உள்ளேன். ஆட்சி மன்றக்குழுவில் என்னை வேட்பாளராகத் தேர்ந்தெடுத்தவர்களுக்கு நன்றி” என்றார். தினகரன் அணியைச் சேர்ந்த அன்பழகன், தங்க தமிழ்ச்செல்வன், செந்தில் பாலாஜி, பழனியப்பன் ஆகியோர் அவரை ஆதரிப்பதாக அறிவித்துள்ளனர். 

முன்னதாக, சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கு, கடந்த ஏப்ரல் 12-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்யப்பட்டதாக வந்த புகாரைத் தொடர்ந்து, தேர்தலுக்கு இரண்டு நாள்களுக்கு முன், ஏப்ரல் 10-ம் தேதி இடைத்தேர்தலை ரத்துசெய்வதாகத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. இரட்டை இலை சின்ன விவகாரத்தில் தீர்ப்பு வழங்கப்பட்ட அடுத்த தினத்தில், மறுபடியும் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!