வெளியிடப்பட்ட நேரம்: 16:20 (24/11/2017)

கடைசி தொடர்பு:16:20 (24/11/2017)

ஒரே இடத்தில் மூன்றாண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றும் போலீஸ் உயரதிகாரிகள்

சென்னையில் உயரதிகாரிகளின் கருணைப் பார்வையால் சில போலீஸ் அதிகாரிகள் தொடர்ந்து மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே இடத்தில் பணியாற்றுவதாகப் புகார் எழுந்துள்ளது.

தமிழக காவல்துறையில் மூன்றாண்டுகளுக்கும் மேல் பணியாற்றுபவர்கள் இடமாற்றம் செய்யப்படுவதுண்டு. ஆனால், சிலர் விதிவிலக்காக மூன்றாண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றி வருகின்றனர். அரசியல் செல்வாக்கு, உயரதிகாரிகளின் ஆசி ஆகியவை காரணமாக இத்தகைய காவல்துறை அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்படுவதில்லை. ஒரே இடத்தில் பணியாற்றும் அதிகாரிகளால் பல்வேறு பிரச்னைகளைக் காவல்துறை சந்தித்துவருகிறது.

சென்னை மாநகர காவலில் போக்குவரத்துப்பிரிவில் பணியாற்றும் குறிப்பிட்ட சில உதவி கமிஷனர்கள் மூன்றாண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றுவதாகத் தகவல்கள் உள்ளன. அடையாறு, வண்ணாரப்பேட்டை, கீழ்பாக்கம், மயிலாப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் பணியாற்றும் போக்குவரத்துப் பிரிவு அதிகாரிகள் மூன்றாண்டுகளுக்கும் மேல் ஒரே இடத்தில் பணியாற்றுவதாகக் குற்றம் சாட்டப்படுகிறது.

காவல்துறையில் சட்டம், ஒழுங்கு மற்றும் குற்றப்பிரிவில் பணியாற்றும் போலீஸார், மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை இடமாற்றப்படுகின்றனர். ஆனால், போக்குவரத்துப் பிரிவில் மட்டும் சிலர், இடமாற்றப்படுவதில்லை. இதற்கு, கவனிப்பே காரணம் என்கின்றனர் விவரம் தெரிந்த போலீஸார்.