வெளியிடப்பட்ட நேரம்: 16:40 (24/11/2017)

கடைசி தொடர்பு:16:40 (24/11/2017)

'பி'-யிலிருந்து 'ஏ'-வுக்கு முன்னேறும் மதுரை பாஸ்போர்ட் ஆபீஸ்

பாஸ்போர்ட்

மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்துக்குப் புதிய அதிகாரியாக அருண் பிரசாத் பொறுப்பேற்றார். மதுரை மண்டல முன்னாள் அதிகாரி மணீஸ்வர் ராஜாவும் அருண் பிரசாத்தும் பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசினர். அப்போது அருண் பிரசாத் கூறுகையில், "மதுரை மண்டலத்தில் கடந்த 5 ஆண்டில் 12,136,10 பாஸ்போர்ட் சார்ந்த சேவைகள் வழங்கப்பட்டுள்ளன. மதுரை மண்டலம் பல புதிய சேவைகளையும் திறம்பட மக்களுக்கு கொண்டு சேர்த்ததால் 'பி' வகுப்பிலிருந்து 'ஏ' வகுப்புக்கு முன்னேற உள்ளது. இந்தியாவில் முதன்முதலில் 100 ரூபாய் கட்டணம் செலுத்தி அஞ்சல் அலுவலகம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பித்து முன் தேதி பெற வழி வகைகள் செய்யப்பட்டது. 2014-ல் பாஸ்போர்ட் தட்டுப்பாடு காரணமாகத் தேங்கியதை, ஒரே மாதத்தில் 40,000 பாஸ்போர்ட் விண்ணப்பதாரர்களுக்கு வழங்கப்பட்டது. இது மதுரை மண்டல பாஸ்போர்ட் அதிகாரிகள் இரவு பகலாக உழைத்ததன் வெற்றியே.

இந்தியாவில் முதன்முறையாக வாட்ஸ் அப் மூலமாகப் பொதுமக்களுக்கு பாஸ்போர்ட் சம்பந்தமாகக் குறையைப் பற்றி தெரிந்துகொள்ள மதுரை பாஸ்போர்ட் அலுவலகம் அறிமுகப்படுத்தியது. மேலும் டிவிட்டர், ஃபேஸ்புக் , ஸ்கைப் போன்றவற்றில் தகவல் சேவையை எளிமையாக அளிக்கப்பட்டது. பாஸ்போர்ட் அலுவலகத்தில் கடவுச்சீட்டு  விழிப்பு உணர்வு மையம் அமைக்கப்பட்டது. மதுரை மாவட்ட காவல்நிலையத்தில் நேரடியாகக் காவல்துறை விசாரணைப் படிவத்தை அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டது. சுமார் 25 ஆயிரம் காவல்துறை விசாரணைக்காக நிலுவையில் இருந்த விண்ணப்பங்கள் கீழ் குறைக்கப்பட்டது. சிறந்த சேவை செய்ததற்காகப் பாஸ்போர்ட் புரஸ்கார் விருது கிடைக்கப்பெற்றது. பிறந்த ஒரு நாள் குழந்தைக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டது. இவ்வாறான பல திட்டங்களைச் செய்ததால் `பி'-யிலிருந்து `ஏ'-வுக்கு முன்னேற்றம் அடைய மதுரை மண்டலத்துக்கு அதிக வாய்ப்பு உள்ளதை நினைத்து மகிழ்கிறேன்'' எனத் தெரிவித்தார் .