'போலி பதிவைத் தடுக்க முடியும்'- ஆன்லைனில் இனி பத்திரப்பதிவு 

தமிழகம் முழுவதும் வரும் டிசம்பர் மாதத்திலிருந்து ஆன்லைன் மூலமே பத்திரப் பதிவுகள் நடைபெற உள்ளதாகப் பதிவுத்துறையினர் தெரிவித்தனர். 

 தமிழகத்தில் 575 சார்-பதிவாளர் அலுவலங்கள் உள்ளன. பதிவுத்துறை இணையதளத்தில் நிலத்தின் வழிகாட்டி மதிப்பு, வில்லங்க சான்றிதழ், முத்திரைத்தாள் கட்டணம் உள்ளிட்ட விவரங்களை ஆன்லைனில் பெறலாம். ஆன்லைனிலே வில்லங்கச் சான்றிதழ்களைப் பெறும் வசதியுள்ளதால் சார்-பதிவாளர் அலுவலகங்களுக்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை. இந்தச் சூழ்நிலையில் பத்திரப் பதிவுகளையும் ஆன்லைனில் மேற்கொள்ள பதிவுத்துறை நடவடிக்கை எடுத்துவருகிறது. கடந்த ஜூலை மாதம் முதல் ஆன்லைன் மூலம் 100-க்கும் மேற்பட்ட சார்-பதிவாளர் அலுவலகங்களில் பத்திரப் பதிவு நடந்துவருகிறது. இதில் சில பிரச்னைகள் இருப்பதாகப் பதிவுத்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால், சம்பந்தப்பட்டவர்களுக்குத் தேவையான பயிற்சி தமிழகம் முழுவதும் நடத்தப்பட்டது. வரும் டிசம்பர் மாதத்திலிருந்து ஆன்லைன் மூலமே பத்திரங்கள் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் போலி ஆவணங்கள் பதிவு செய்யப்படுவது தடுக்க முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு விரைவான சேவையும் மக்களுக்கு வழங்க முடியும் என்று பதிவுத்துறை நம்புகிறது.

இதுகுறித்து நம்மிடம் பேசிய பதிவுத்துறையினர், "பத்திரப் பதிவுகள் ஆன்லைனில் நடந்தால் பல பிரச்னைகளுக்குத் தீர்வு காண முடியும். குறிப்பாக, பதிவு செய்யப்படும்போது சம்பந்தப்பட்டவர்களுக்கு செல்போனில் குறுஞ்செய்தி அனுப்பப்படும். இதனால், போலி பதிவைத் தடுக்க முடியும். மேலும், ஆன்லைன் மூலம் பதிவுகள் நடப்பதால் விரைவில் பத்திரங்களைப் பெற்றுக்கொள்ள முடியும். சொத்துகள் பதிவு மட்டுமல்லாமல் திருமணம் உள்ளிட்ட பதிவுகளும் இனி ஆன்லைன் மூலமே நடக்கும். வரும் டிசம்பர் மாதத்திலிருந்து இந்த நடைமுறை கொண்டுவரப்படவுள்ளது" என்றனர். 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!