வெளியிடப்பட்ட நேரம்: 15:34 (24/11/2017)

கடைசி தொடர்பு:15:45 (24/11/2017)

கைரேகை விவகாரம்: ஜெயலலிதா ஆதார் அட்டையைக் கேட்கும் சென்னை உயர் நீதிமன்றம்

திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலின்போது, அ.தி.மு.க வேட்பாளருக்கு சின்னம் ஒதுக்கும் படிவத்தில் ஜெயலலிதா கைரேகை இடம்பெற்றது தொடர்பான வழக்கில், ஜெயலலிதாவின் ஆதார் அட்டையைத் தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

jayalalithaa


திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தல் ஜெயலலிதா அப்போலோ மருத்துமனையில் சிகிச்சையில் இருந்தபோது நடைபெற்றது. இந்தத் தேர்தலில் அ.தி.மு.க சார்பில் போட்டியிட்ட ஏ.கே.போஸ் வெற்றி பெற்றார். இந்த வெற்றியை எதிர்த்து தி.மு.க சார்பில் போட்டியிட்ட சரவணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கில் அ.தி.மு.க வேட்பாளருக்கு சின்னம் ஒதுக்கீடு செய்யும் படிவத்தில் ஜெயலலிதா கைரேகை இடம்பெற்றிருந்தது பற்றி சரவணன் கேள்வி எழுப்பியிருந்தார். கைரேகை வைத்தபோது ஜெயலலிதா சுயநினைவோடு இருந்தாரா என்பது பற்றி விசாரிக்க வேண்டும் என்று சரவணன் கோரியிருந்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, “ஜெயலலிதா பரப்பன அக்ரஹாரா சிறைக்குச் சென்றபோது அங்கு எடுக்கப்பட்ட கைரேகை ஆவணங்களை டிசம்பர் 8-ம் தேதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். அன்றைய தினம் பெங்களூரு சிறை கண்காணிப்பாளர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும். ஜெயலலிதாவுக்கு ஆதார் அடையாள அட்டை இருந்தால் அது தொடர்பான விவரங்களை மத்திய அரசு தாக்கல் செய்ய வேண்டும்” என்று உத்தரவிட்டார்.