வெளியிடப்பட்ட நேரம்: 18:55 (24/11/2017)

கடைசி தொடர்பு:18:55 (24/11/2017)

சவுடு, சரளைமண் விவகாரம்! தூத்துக்குடி கலெக்டருக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

தூத்துக்குடி மாவட்டம், ஆகஸ்ட்-15 இயக்கத்தைச் சேர்ந்த காந்திமதி  உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், "ஸ்ரீவைகுண்டம் அணையைத் தூர்வாரும் பணியை மேற்கொள்ள 2015-ம் ஆண்டு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இந்த அணையை நம்பி திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், தூத்துக்குடி ஆகிய பகுதிகளில் உள்ள 53 குளங்களில் வணிகரீதியாக அல்லாமல் விவசாய நிலங்களுக்காக கரம்பை மண் அள்ளிச்செல்ல அனுமதி வழங்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பைத் தொடர்ந்து வட்டாட்சியர்கள் இந்த அனுமதியை வழங்கினார்கள். இந்த அனுமதியைப் பெற்ற நபர்கள் கரம்பை மண்ணுக்குப் பதிலாக சரளை, சவுடு மண்ணை இயந்திரத்தின் துணையுடன் இரவு, பகலாக லாரிகளில் அள்ளிச்சென்றனர். இந்த மண் கடத்தல் கும்பல்களால் பல லட்ச ரூபாய் கனிம கட்டணங்கள் அரசுக்கு கிடைக்காமல் வருவாய் இழப்பு ஏற்பட்டது.

கிராம நிர்வாக அதிகாரிகள் விவசாயிகளின் அனுமதி பெறாமல் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர். இதனால் பல குளங்கள் நீர் சேமிக்க முடியாத அளவுக்கு மாறியுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே, இலவச கரம்பை மண் என்கிற போர்வையில் சவுடு, சரளைமண் அள்ளியதன் மூலம் 1,500 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்படுத்தாத நிலையில் உள்ளது. இதற்கு காரணமான தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ் வட்டாட்சியர்கள் தூத்துக்குடி ராமச்சந்திரன், ஸ்ரீவைகுண்டம் தாமஸ், திருச்செந்தூர் அழகர் ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும், விளை நிலங்களை மீண்டும் விவசாயத்துக்குப் பயன்படும் அளவில் மாற்றவும் உத்தரவிட வேண்டும் எனத் தனது மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவானது இன்று விசாரணைக்கு வந்தது. அதை விசாரித்த நீதிபதிகள், தமிழக பொதுப்பணித் துறை செயலர், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆகியோர் இது குறித்து பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை டிசம்பர் 12-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.