கிணற்றில் குதித்து 4 மாணவிகள் தற்கொலை! அரக்கோணம் அருகே அதிர்ச்சி | Arakkonam; 4 Students Committed Suicide

வெளியிடப்பட்ட நேரம்: 18:09 (24/11/2017)

கடைசி தொடர்பு:22:07 (24/11/2017)

கிணற்றில் குதித்து 4 மாணவிகள் தற்கொலை! அரக்கோணம் அருகே அதிர்ச்சி

வேலூர் மாவட்டம் அரக்கோணம் அருகே நான்கு மாணவிகள் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிணறு


அரக்கோணம் அருகே உள்ள ராமாபுரத்தில் விவசாயக் கிணறு ஒன்று உள்ளது. இந்தக் கிணற்றில் உடல் மிதப்பதாக அந்தப் பகுதி மக்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து அவர்கள் தீயணைப்பு வீரர்களுக்குத் தகவல் கொடுத்துள்ளனர். மாணவிகள் 4 பேர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்ததாகவும் தீயணைப்புப் படைக்கு தகவல் கொடுத்தவர்கள் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து கிணற்றில் மிதந்து கிடந்த மாணவி தீபாவின் உடலை மீட்டனர். மேலும், மாணவிகள் மனிஷா, சங்கரி, ரேவதி ஆகியோரின் உடல்களைத் தேடும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுனர். சிறிது நேரத்தில் சங்கரி உள்பட 2 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. இன்னொரு மாணவியின் உடலைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெறுகிறது. 4 மாணவிகளும் அருகே உள்ள அரசுப் பள்ளியில் படிப்பவர்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

கிணற்றில் குதித்து நான்கு மாணவிகள் எதற்காகத் தற்கொலை செய்துகொண்டனர் என்பது குறித்து உடனடியாகத் தகவல் தெரியவில்லை. காவல்துறையினர் மாணவியின் உடலைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே, ஆசிரியர்கள் அந்த மாணவிகளைத் திட்டியதாகவும் பள்ளிக்குப் பெற்றோரை அழைத்து வருமாறு கூறியதாலும் மாணவிகள் தற்கொலை செய்துகொண்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.