இலையை மீட்க இலையை எதிர்க்கிறோம்...! ஆர்.கே நகரில் மீண்டும் தினகரன்....!

கடந்த 22-ம் தேதி சென்னையிலிருந்து கோவை கிளம்பிய தினகரனுக்கு பாதி வழியிலேயே இரட்டை இலை நமக்கு இல்லை என்ற தகவல் பெரும் அடியாய் விழுந்தது. ஏற்கெனவே திட்டமிட்டிருந்தபடி கொங்கு மண்டல நிர்வாகிகளுடனான
ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொள்ள  ஒருநாள் முன்னதாகவே திருப்பூர் வந்தவர், முன்னாள் எம்.பி சிவசாமியின் இல்லத்தில் இரவு தங்கினார். அடுத்தநாள் தனியார் மண்டபத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொள்ள கிளம்பியவருக்கு ஆர்.கே நகர் இடைத்தேர்தல் குறித்த அறிவிப்பும் வந்துசேர, கொங்கு மண்டல ஆலோசனைக் கூட்டம் ஆர்.கே நகர் இடைத்தேர்தல் ஆலோசனைக் கூட்டமாக மாறிப்போனது.

முதலில் பேசிய சிவசாமி, தி.மு.கவில் இருந்து வைகோ உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் எல்லாம் பிரிந்து சென்ற சமயத்தில், கட்சியில் பெயரே தெரியாதவர்கள்தான் கருணாநிதியுடன் இருந்தார்கள். ஆனால் அவர்களை எல்லாம் மாவட்டச் செயலாளர்களாக, அமைச்சர்களாக அவர் உருவாக்கிக் காட்டினார். அதேபோல இன்று தினகரனுக்கு தோள்கொடுத்து நிற்கும் நம்மைப் போன்றவர்கள், நாளை எம்.எல்.ஏக்களாக அமைச்சர்களாக உருவாவது நிச்சயம் என்றார்.

 

தன்னுடைய அரசியல் அனுபவத்தைப் பற்றிப் பேச தினகரனுக்கு வயது பத்தாது என எடப்பாடி பேசுகிறார். 2011 - ல் நீயும், நானும் ஒன்றாகத்தான் ஜெயலலிதாவிடம் அமைச்சர்களாக பணியாற்றினோம். உன்னுடைய லட்சணத்தைப் பார்த்துதான் 2014 தேர்தலில் சேலம் நாடாளுமன்ற தேர்தல் பொறுப்பாளராக ஜெயலலிதா என்னை நியமித்தார். சசிகலாவும், தினகரனும் போட்ட பிச்சையில் வாழ்ந்துவிட்டு இப்போது எங்களையே எதிர்க்கிறாயே, என்று எடப்பாடியை ஏகத்துக்கும் வருத்தெடுத்தார் செந்தில் பாலாஜி.

தங்க தமிழ்ச்செல்வன் பேசுகையில், எடப்பாடி - ஓ.பி.எஸ் அணியிடம்தான் அதிகபட்சமாக 111 எம்.எல்.ஏ-க்கள் இருக்கிறார்கள் என்றுகூறி தேர்தல் ஆணையம் சின்னத்தை அவர்களுக்கு ஒதுக்கியிருக்கிறது. ஆனால், எங்களிடம் அன்றைக்கு 122 எம்.எல்.ஏ-க்கள், 37 எம்.பி-க்கள் இருந்தார்களே, அப்போது மட்டும் ஏன் சின்னத்தை முடக்கினார்கள். மத்திய அரசின் கட்டுப்பாட்டில்தான் தேர்தல் ஆணையம் இருக்கிறது என்பதை இந்த முடிவு வெளிச்சம்போட்டு காட்டிவிட்டது. சசிகலாவிடம் பேசி, ஆர்.கே நகர் தேர்தலில் தினகரனை மீண்டும் இறக்கிவிடுவோம். மத்திய மாநில அரசுகளைவிட அதிக செல்வாக்குப் படைத்தவர் தினகரன்தான் என்பதை ஆர்.கே நகர் இடைத்தேர்தல் நிரூபிக்கும் என்றார்.

பின்னர் பேசிய தினகரன், துரோகிகளிடம் இருந்து நாம் இரட்டை இலை சின்னத்தை மீட்பதற்கு கிடைத்த பொன்னான வாய்ப்பாகத்தான் ஆர்.கே நகர் இடைத்தேர்தல் நமக்கு அமைந்திருக்கிறது. இரட்டை இலை சின்னத்துக்கு எதிராகவே போட்டியிட்டு  இரட்டை இலை சின்னத்தை நம் பக்கம் மீட்டெடுக்கப் போகிறோம்.
அதேபோல தேர்தல் ஆணையம் கொடுத்துவிட்ட இந்த தீர்ப்பு ஒன்றும் இறுதியானது அல்ல. நீதிமன்றத்தை நாடி நியாயத்தை வெல்வோம். முதல் சுற்றில் வெற்றி பெறுவது முக்கியமல்ல. இறுதிச் சுற்றில் யார் வெற்றி பெறுகிறார் என்பதுதான் முக்கியம். மீண்டும் ஆர்.கே நகர் தேர்தலில் தொப்பி சின்னத்தில் போட்டியிடுவேன். இது தர்மத்துக்கும் துரோகத்துக்கும் நடக்கின்ற யுத்தம் என்று முடித்தார்.

ஆர்.கே நகர் சீசன் 2 துவங்கிவிட்டது....! இனி கந்துவட்டி பேச்சுக்கள் கரை ஒதுங்கிவிடும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!