ஹார்வர்டு தமிழ் இருக்கைக்காக ரூ.25 லட்சம்: அசத்திய ஐ.ஏ.எஸ் அதிகாரி #VikatanExclusive | IAS officer donated 25 lakhs rupees to harvard tamil chair

வெளியிடப்பட்ட நேரம்: 10:50 (25/11/2017)

கடைசி தொடர்பு:13:49 (25/11/2017)

ஹார்வர்டு தமிழ் இருக்கைக்காக ரூ.25 லட்சம்: அசத்திய ஐ.ஏ.எஸ் அதிகாரி #VikatanExclusive

ஹார்வர்டு தமிழ் இருக்கைக்காக ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி பாலச்சந்திரன் ரூ.25 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார். தமிழ் இருக்கைக்காகத் தனி ஒரு நபர் அளித்த நிதியுதவில், இந்தியாவிலேயே இதுதான் அதிகப்படியானத் தொகை என்பது குறிப்பிடத்தக்கது.

ஹார்வர்டு

அமெரிக்காவின், பாஸ்டன் நகரில் அமைந்துள்ள ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைப்பதற்கான முயற்சியில், உலகத் தமிழர்கள் கடந்த ஓராண்டுக்கும் மேலாக ஈடுபட்டு வந்தனர். அமெரிக்கா வாழ் தமிழர்களான மருத்துவர்கள் திருஞானசம்பந்தம், ஜானகிராமன், ஆறுமுகம் உள்ளிட்டோர் இதற்கான முயற்சியில் இறங்கி, நிதி திரட்டும் வேலையில் ஈடுபட்டனர். அந்த இருக்கையை அமைக்க பல்கலைக்கழகத்துக்கு 45 கோடி ரூபாய் நிதியாகக் கொடுக்க வேண்டும். பலர் இதற்காக நிதி கொடுத்தபோதும், நிதிப் பற்றாக்குறை நிலவிவந்தது. இந்நிலையில் தமிழக அரசு, 10 கோடி ரூபாயைத் தமிழ் இருக்கை அமைக்க நிதியாகத் தர ஒப்புக்கொண்டது. இதனால், விரைவில் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இன்னும் நிதிப் பற்றாக்குறை நிலவுவதாகக் கூறப்பட்டதால், பல சர்வதேச தமிழ் அமைப்புகள், தமிழக ஆசிரியர் சங்கம் எனப் பல அமைப்புகள் தொடர்ந்து நிதி உதவி வழங்கியும் சேகரித்தும் வருகின்றனர்.

பாலச்சந்திரன்

இந்த வகையில், ஹார்வர்டு தமிழ் இருக்கைக்காக முதன்முறையாகத் தனி ஒரு மனிதனாக ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி பாலச்சந்திரன் 25 லட்சம் ரூபாய் நிதி உதவி அளித்துள்ளார். மேற்குவங்க அரசாங்கத்தில் கூடுதல் தலைமைச் செயலாளராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர் பாலச்சந்திரன். இந்தியாவின் தகவல் தொடர்புத்துறையை அதிரவைத்த இஸ்ரோ ஆன்ட்ரிக்ஸ் ஒப்பந்த ஊழலைப் பணியிலிருக்கும் போதே உலகுக்கு வெளிச்சம் போட்டுக்காட்டிய முக்கிய அதிகாரி பாலச்சந்திரன் ஐ.ஏ.எஸ். தற்போது தனது ஓய்வு ஊதியத் தொகையிலிருந்து 25 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார். இதுகுறித்து பாலச்சந்திரன் ஐ.ஏ.எஸ் கூறுகையில், “தமிழ் இருக்கைக்காக எனது ஓய்வு ஊதியத் தொகையிலிருந்து 25 லட்சம் ரூபாய் நிதி அளித்ததைத் தமிழுக்காகக் கொடுப்பாதாக எண்ணி மகிழ்கிறேன். கடந்த ஆண்டு முதன்முறையாகத் தமிழ் இருக்கைக்காக 1,500 டாலர் (சுமார் 1 லட்சத்து ஐந்தாயிரம் ரூபாய்), இந்த ஆண்டு துவக்கத்தில் 1,000 டாலர் (சுமார் 65 ஆயிரம்) எனக் கொடுத்துள்ளேன். தற்போது தமிழ் இருக்கைக்காகக் கூடுதல் தொகை தேவைப்படுவதால் மீண்டும் 38,500 டாலர் (சுமார் 25 லட்சம் ரூபாய்) நிதி உதவி அளித்துள்ளேன். ஆனால், ஹார்வர்டு தமிழ் இருக்கைக்காக மேலும் 8 கோடி ரூபாய் தேவைப்படுகிறது. இதற்காகப் பல்வேறு தரப்பினரும் தங்கள் சொந்தப் பணத்தை தனி மனிதனாக அளித்து வருகின்றனர். சமீபத்தில் ஓய்வுபெற்ற தமிழ் ஆசிரியர் ஒருவர் தனது ஓய்வூதியப் பணத்திலிருந்து நிதி அளித்துள்ளார். இவ்வாறு ஓய்வுபெற்ற நாங்களே இதுபோல் நிதி உதவி அளித்து வரும் நிலையில் மிகப்பெரும் தொழிலதிபர்கள், வசதி படைத்தவர்கள் தமிழுக்காக முன்வந்தால் தமிழ் இருக்கையை ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் நாம் அமைத்துவிடலாம். இதுபோல், தமிழுக்காக நிதி அளிப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார் நெகிழ்ச்சியாக.