வெளியிடப்பட்ட நேரம்: 11:40 (25/11/2017)

கடைசி தொடர்பு:17:17 (12/07/2018)

'புகார் அனுப்பியும் அதிகாரிகள் வரவில்லை' - பொங்கும் அக்கச்சிபட்டி மக்கள்

"வந்து நீங்களே பாருங்க. இது சாக்கடை மாதிரியா இருக்கு. ஊரின் மொத்தக் கழிவுகளும் இங்கேதான் தேங்கி நிக்குது. இதனால் குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் அடிக்கடி காய்ச்சல் வந்துடும். இந்தச் சாக்கடையைச் சுத்தப்படுத்தி, ஒழுங்குபடுத்தச் சொல்லி, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனுக்கள் குடுத்துட்டோம். ஆனான், ஒரு நடவடிக்கையும் எடுக்கலை. நாங்கதான் காய்ச்சல் வந்து தவிக்கும் பெரியவர்களையும் குழந்தைகளையும் தூக்கிட்டு ஆஸ்பத்திரிக்கும் வீட்டுக்குமாக அலையுறோம்'' என்று பொங்கித் தீர்க்கிறார்கள் அக்கச்சிபட்டி கிராம மக்கள்.

புதுக்கோட்டை  மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே உள்ளது அக்கச்சிபட்டி. இங்குள்ள தெருக்கள் அத்தனையுமே பராமரிப்பில்லாமல் இருக்கிறது. ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அமைந்திருக்கும் தெருவின் நிலைமையோ மிகவும் மோசமாக இருக்கிறது. இதில்,கொடுமை என்னவென்றால், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்குப் போக வேண்டும் என்றாலே, இந்தச் சாக்கடையைத் தாண்டித்தான் போக வேண்டும். அந்த அளவுக்குக் கழிவுகளும் கழிவுநீரும் தேங்கிக்கிடக்கிறது. இதனால், சுகாதாரக்கேடு ஏற்பட்டு வியாதிகள் பரவி, இந்தக் கிராம மக்கள் பெரும் அவதிக்குள்ளாகித் தவிக்கிறார்கள். 

"‎சாக்கடைகள் தூர் வாரப்பட்டு, கழிவுநீர் தேங்காமல் செல்வதற்கான நடவடிக்கையை அதிகாரிகள் உடனடியாக எடுக்க வேண்டும்" என்பதே இப்பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் மற்றும் கிராம மக்களின் நீண்ட கால, இன்னும் நிறைவேறாத கோரிக்கையாக இருக்கிறது.