வெளியிடப்பட்ட நேரம்: 13:34 (25/11/2017)

கடைசி தொடர்பு:10:07 (27/11/2017)

பழனிசாமிக்கும் பன்னீர்செல்வத்துக்கும் அடுத்த நெருக்கடி! - இரட்டை இலையைக் கேட்கும் ஜெயலலிதா அணி

இரட்டை இலைச் சின்னம்.

 ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அ.தி.மு.க ஜெயலலிதா அணி போட்டியிடவுள்ளதாக அந்த அணியின் பொதுச் செயலாளர் பசும்பொன்பாண்டியன் தெரிவித்தார். மேலும், அவர், இரட்டை இலைச் சின்னத்தை ஒதுக்கும்படி தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கையும் வைக்கவுள்ளதாகக் கூறினார். 

 ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் டிசம்பர் 21-ம் தேதி நடக்கிறது. தேர்தலுக்கானப் பணிகளைத் தேர்தல் ஆணையம் தொடங்கிவிட்டது. போட்டியிடுவதற்கான வேட்பாளர் தேர்வு தொடர்பாக ஆலோசனைக் கூட்டத்தை ஒவ்வொரு கட்சியினரும் நடத்திவருகின்றனர். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு நடக்கும் தேர்தலில் கண்டிப்பாக வெற்றிபெற வேண்டும் என்ற குறிக்கோளோடு முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் உள்ளனர். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றுவிட்டால் மக்களிடையே அ.தி.மு.க-வுக்கு செல்வாக்கு குறைந்துவிட்டதை நிரூபித்துவிடலாம் என்று தி.மு.க-வினர் கருதுகின்றனர்.  ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிடப் போவதாகத் தினகரன் அறிவித்துள்ளார். பா.ஜ.க சார்பிலும் ஆலோசனை நடந்துவருகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் கட்சியினர் பம்பரமாகத் தேர்தல் வேலையில் ஈடுபடத்தொடங்கிவிட்டனர்.

இந்தச் சூழ்நிலையில் தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பு, எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் அணியினருக்கு இரட்டை இலைச் சின்னத்தைத் தேர்தல் ஆணையம் ஒதுக்கியது. இதனால் இரட்டை இலைச் சின்னத்தில் அ.தி.மு.க-வினர் போட்டியிடவுள்ளனர். எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் அணியினருக்கு சின்னம் ஒதுக்கப்பட்டதைக் கண்டித்து அ.தி.மு.க அம்மா அணி துணைப் பொதுச் செயலாளர் தினகரன், அ.தி.மு.க ஜெயலலிதா அணி பொதுச் செயலாளர் பசும்பொன்பாண்டியன் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் போவதாக அறிவித்துள்ளனர்.

பசும்பொன்பாண்டியன்இதுகுறித்து நம்மிடம் பேசிய அ.தி.மு.க ஜெயலலிதா அணி பொதுச் செயலாளர் பசும்பொன்பாண்டியன், "ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அவருடைய அண்ணன் மகள் தீபாவின் தலைமையில் பெரும்பாலான தொண்டர்கள் செயல்பட்டனர். ஆனால், தீபாவின் செயல்பாடுகளில் தொண்டர்களுக்கு அதிருப்தி ஏற்பட்டது. முன்னதாக இரட்டை இலைச் சின்னம் முடக்கப்பட்டவுடன் தீபா அணி சார்பில் என்னுடைய தலைமையில் 5.5 லட்சம் அஃபிடவிட்களைத் தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்தோம். ஆனால், தீபாவை அ.தி.மு.க-வின் உறுப்பினர் இல்லை என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தீபா அணி சார்பில் அ.தி.மு.க தொண்டர்கள்தான் அஃபிடவிட்களைத் தாக்கல் செய்துள்ளனர். அதைத் தேர்தல் ஆணையம் நிராகரித்தது தவறு. மேலும், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு இரட்டை இலைச் சின்னத்தை ஒருதலைப்பட்சமாகத் தேர்தல் ஆணையம் ஒதுக்கியது கண்டிக்கத்தக்கது. ஏனெனில், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்தான் பொதுக்குழுவை கூட்டி சசிகலாவை தற்காலிகப் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுத்தனர். பிறகு அவர்களே சசிகலாவை அந்தப் பதவியிலிருந்து நீக்குவதாக மீண்டும் பொதுக் குழுவைக் கூட்டி தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

அ.தி.மு.க சட்டவிதியில் பொதுச் செயலாளரை கட்சியின் தொண்டர்கள்தான் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. இதனால், சசிகலாவை பொதுச் செயலாளராக நியமித்ததே தவறு என்று வழக்கு தொடர்ந்துள்ளோம். மேலும், வேட்பாளருக்கு கட்சி சின்னத்தை ஒதுக்க பொதுச் செயலாளர்தான் பி. விண்ணப்ப படிவத்தில் கையெழுத்திட முடியும். இதனால், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளருக்கு இரட்டை இலைச் சின்னத்தை ஒதுக்கும்படி யார் கையெழுத்துவார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

மேலும், கட்சியை வழிநடத்த ஓ.பன்னீர்செல்வம் ஒருங்கிணைப்பாளராகவும் பழனிசாமி துணை ஒருங்கிணைப்பாளராகவும் நியமிக்கப்படுவதாகப் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அ.தி.மு.க சட்டவிதிப்படி ஒருங்கிணைப்பாளர் என்ற பதவியே இல்லை. எனவே, ஆர்.கே.நகர் தேர்தலில் அ.தி.மு.க ஜெயலலிதா அணி சார்பில் நாங்கள் போட்டியிடவுள்ளோம். அ.தி.மு.க தொண்டர்கள் என்ற அடிப்படையில் எங்கள் வேட்பாளருக்கு இரட்டை இலைச் சின்னத்தை ஒதுக்கும்படி தேர்தல் ஆணையத்திடம் வலியுறுத்துவோம். இதற்கிடையில், ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி அணியினருக்கு இரட்டை இலைச் சின்னத்தைத் தேர்தல் ஆணையம் ஒதுக்கியதைக் கண்டித்து விரைவில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரவுள்ளோம். ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் எங்கள் அணி சார்பில் அவைத்தலைவர் தலைமையில் நடைபெறவுள்ளது. அதில் வேட்பாளர் அறிவிக்கப்படவுள்ளார்" என்றார். 


டிரெண்டிங் @ விகடன்