புத்தகக் கண்காட்சியில் புத்தக மாலை - சிலிர்க்கும் வி.ஐ.பி-க்கள்

"அடேங்கப்பா! என்ன இது. சந்தனமாலை, மலர்மாலை பார்த்திருக்கோம். புத்தகமாலையை இப்போதான் பார்க்கிறோம். புது முயற்சியா இருக்கு. வாழ்த்துக்கள்" என்று மெய் சிலிர்க்கப் பாராட்டிச் சென்றார்கள் சிறப்பு விருந்தினர்கள்.

புதுக்கோட்டை நகரில் உள்ள நகர் மன்றத்தில் நேற்று முதல் புத்தகக் கண்காட்சி நடைபெற்று வருகிறது. இதில் கலந்துகொள்ள வரும் எழுத்தாளர்கள், கவிஞர்கள், மேடைப் பேச்சாளர்கள் அனைவரையும் வரவேற்கும் விதமாக, அவர்களுக்கு புத்தகங்களால் செய்யப்பட்ட மாலை அணிவித்து மரியாதை செய்யப்படுகிறது. இதற்காகப் பள்ளி ஆசிரியர்கள் இருவர் தலைமையில் ஐந்து பள்ளி மாணவிகள் கையில் புத்தக மாலையுடன் தினமும் மாலை வேளையில் இந்தச் சிறப்பு வரவேற்பை அளிக்கிறார்கள். வருகிற விருந்தினர்களுக்கு இந்தப் புத்தகமாலை அணிவிக்கப்பட்டு கௌரவிக்கப்படுகிறது. இந்த முயற்சி கல்வியாளர்கள், புத்தக வாசிப்பாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

"பூக்களால் செய்யப்பட்ட மாலை கொஞ்ச நேரத்தில் வாடிவிடும். சந்தனமாலை பிரயோஜனம் இல்லாமல் வீட்டில் ஒரு ஓரமாக ஆணியில் தொங்கிக்கொண்டு இருக்கும். ஆனால், இந்தப் புத்தகமாலை அப்படி இல்லை. அதில் உள்ள புத்தகங்களை நாம் படிப்பதற்கு உபயோகப்படுத்தலாம். தேவைப்பட்டால், மற்றவர்களுக்குப் பரிசளிக்கவும் பயன்படுத்தலாம்" என்று, சிலாகித்துப் பாராட்டுகிறார்கள், புத்தக மாலை மரியாதையைப் பெற்ற சிறப்பு விருந்தினர்கள். இந்தப் புத்தகக் கண்காட்சி டிசம்பர் 3-ம் தேதி வரை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!