வெளியிடப்பட்ட நேரம்: 15:35 (25/11/2017)

கடைசி தொடர்பு:15:35 (25/11/2017)

முகிலன் மீதான வழக்கைத் திரும்பப் பெற வேண்டும்! - நெல்லையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தல்

சுற்றுச்சூழல் ஆர்வலரான முகிலன் மீது போடப்பட்ட வழக்கைத் திரும்பப் பெற வலியுறுத்தி நெல்லையில் பல்வேறு அரசியல் கட்சியினரும் சமூக நல அமைப்பினரும் இணைந்து போராட்டம் நடத்தினர்.

முகிலன் கைதுக்கு எதிர்ப்பு

கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்றதற்காகச் சுற்றுச்சூழல் செயல்பாட்டாளரான முகிலன் மீது வழக்கு தொடரப்பட்டு நிலுவையில் இருந்தது. இந்த வழக்கு தொடர்பாக அவர் நீதிமன்றத்தில் ஆஜராகாத நிலையில், அவரை கூடங்குளம் போலீஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர். சிறையில் பல்வேறு சமூக பிரச்னைகளுக்காக இரண்டு முறை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட முகிலன், ஜாமீன் கோராமல் சிறையிலேயே உள்ளார்.

இதையடுத்து, அவர் மீது தொடரப்பட்ட வழக்கைத் திரும்பப் பெற வலியுறுத்தி நெல்லை கிழக்கு மாவட்ட எஸ்.டி.பி.ஐ கட்சியின் கிழக்கு மாவட்டம் சார்பாக ரயில் நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டம். நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநிலத் துணைத் தலைவர் நெல்லை முபாரக், நெல்லை கிழக்கு மாவட்டத் தலைவர் இலியாஸ், சி.பி.ஐ.(எம்.எல்) கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் ரமேஷ், ம.தி.மு.க மாவட்டச் செயலாளர் நிஜாம், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளர் கரிசல் சுரேஷ் உள்ளிட்ட பலர் பேசினார்கள். 
.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள், ``காவிரி மணல் கடத்தல், கூடங்குளம் அணு உலை பிரச்னை, கனிம வளங்கள் மற்றும் மணல் கடத்தலுக்கு எதிராக முகிலன் தொடர்ச்சியாகப் போராடி வந்தார். அதனால் அதிருப்தி அடைந்த ஆட்சியாளர்கள் அவரை திட்டமிட்டே சட்டத்துக்குப் புறம்பாகக் கைது செய்துள்ளனர். இது கண்டிக்கத்தக்க செயல். தமிழக அரசு இந்த விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டு முகிலனை விடுதலை செய்ய வேண்டும்.

போராட்டம்

கூடங்குளம் அணு உலைக்கு எதிராகப் போராடியதற்காக அப்பாவிப் பொதுமக்கள் மீதும் வழக்குகளைத் தொடுத்து இருக்கிறார்கள். கல்லூரி மாணவர்கள் படிப்பை முடித்து விட்டு வேலை வாய்ப்புக்காக வெளிநாடுகளுக்குச் செல்ல முடியாத நிலைமை இருக்கிறது. அவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளைத் திரும்பப் பெற நீதிமன்றம் வலியுறுத்தியும் இதுவரை வழக்குகள் திரும்ப பெறப்படவில்லை. தமிழக அரசு உடனடியாகத் திரும்பப் பெறாவிட்டால், அனைத்து கட்சிகளையும் இணைத்து போராட்டம் நடத்துவோம்’’ எனப் பேசினார்கள். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க