முதல்வர் பேசிக்கொண்டிருந்தபோதே காலியான விழா அரங்கு! - நூற்றாண்டு விழா பரிதாபங்கள்

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டங்கள் தமிழக அரசு சார்பில் ஒவ்வொரு மாவட்டத்திலும் கொண்டாடப்பட்டு வருகிறது. மதுரையில் தொடங்கிய கொண்டாட்டம் இதுவரை 25 மாவட்டங்களில் நடந்து முடிந்து 26 வது மாவட்டமாக ராமநாதபுரம் பட்டினம் காத்தான் ஊராட்சியில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்டமான மேடையில் நடைபெற்று வருகிறது. 

 

10,000 பேர் அமரக்கூடிய பிரமாண்டமான பந்தலில் இரவைப் பகலாக்கும் மின்னொளியில் மாலை 3.30 மணிக்கு விழா ஆரம்பமானது. தமிழக சட்டப் பேரவைத் தலைவர் தனபால் தலைமையில் நடைபெற்று வரும் இந்த விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது அமைச்சரவை சகாக்களுடன் இணைந்து 161,20,13,000 மதிப்புக்கான நலத்திட்ட உதவிகளை 26,849 நபர்களுக்கு வழங்கினார். மேலும், 81 கோடியே 9 லட்சம் மதிப்புள்ள 135 கட்டங்களை பல்வேறு துறைகளின் பயன்பாட்டுக்காக ராமநாதபுரம் மாவட்டத்துக்கு திறந்து வைத்தார். அத்தோடு, ராமநாதாரம் மாவட்டம் கீழக்கரை வட்டாட்சியர் அலுவலக கட்டடம் மற்றும் வட்டாட்சியருக்கான குடியிருப்புக் கட்டடம் 2 கோடியே 61 லட்சம் மதிப்பிலான பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

மேடையில் முதல்வர் மற்றும் தமிழக அமைச்சர்கள்  எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா திருவுருவப் படங்களுக்கு மலர்த் தூவி அஞ்சலி செலுத்தினர். இதைத் தொடர்ந்து எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா சிறப்பு அஞ்சல் அட்டை வெளியிடப்பட்டது.

எடப்பாடி பழனிசாமி

விழாவில் பேசிய துணை முதல்வர் பன்னீர்செல்வம், ``தேசியத்தையும் தெய்விகத்தையும் இரு கண்களாகக் கொண்டு இமயத்தைவிட உயர்ந்த மனதைக்கொண்ட பசும்பொன் திருமகனார் பிறந்த மாவட்டம் இது. ஏ.பி.ஜே.அப்துல் கலாமை இந்திய திருநாட்டுக்கு அர்ப்பணித்த மாவட்டம் ராமநாதபுரம் மாவட்டம். தொண்டர்களின் உயர்வே தனது உயர்வு என வாழ்ந்தவர் எம் ஜி ஆர். இன்று அம்மாவின் நல்லாட்சி தமிழகத்தில் நடைபெறுகிறது. அம்மாவின் சிந்தனைகளாக நல் திட்டங்களாக அண்ணன் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு செய்து வருகிறது. இரட்டை இலைச் சின்னம் அம்மாவால் ஒதுக்கப்பட்ட குடும்பத்தினர் கைகளில் கிடைக்காமல் பாதுகாக்கப்பட்டு இருக்கிறது.

அம்மாவின் உண்மைத் தொண்டர்களின் கைகளில் இரட்டை இலைச் சின்னம் கிடைத்திருக்கிறது. இரட்டை இலையை மீட்டுக் கொண்டு வரும் பணியில், கழகத் தொண்டர்கள் ஒற்றுமையுடன் செயல்பட்டதால்தான் இரட்டை இலை கிடைத்தது. இந்த மாவட்டத்தில் உள்ள நூற்றுக்கணக்கான கண்மாய்களுக்கு வைகை ஆற்றிலிருந்து நீர் பெற்று விவசாயம் நடக்கிறது. ராமேஸ்வரம் கோயில், ஏர்வாடி தர்ஹா , தேவிப்பட்டினம், தனுஷ்கோடி என ஆன்மிகத் தலங்கள் நிறைந்த மாவட்டம். கிறித்துவர்களும் முஸ்லீம்களும் இந்துக்களும் மத நல்லிணக்கத்தோடு வாழும் மாவட்டம்” என்று பேசினார்.

எடப்பாடி

அவரைத் தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்... 

``வானம் பார்த்த பூமியான மேட்டு மண்ணை செப்பனிட்டு நெல் உள்ளிட்ட உணவுப் பயிர்களை விவசாயம் செய்யும் மாவட்டம் இது. இந்த மாவட்டத்தில் 3,500 கோடி ரூபாய் மீன் வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. தமிழகத்தில் 26 சதவிகித மீன்கள் இந்த மாவட்டத்தில் இருந்து கிடைக்கின்றன. ராமநாதபுரம் மாவட்டத்தைத் தனி மாவட்டமாக 1985-ல் எம்.ஜி.ஆர்-தான் அறிவித்தார். அப்துல் கலாம் பிறந்த சரித்திர மண் இந்த மாவட்டம். 1.30 ஏக்கர் நிலத்தை அவரது நினைவிடத்துக்காக அம்மா அவர்கள் பேய்க் கரும்பில் வழங்கினார்கள்”... இவ்வாறு முதல்வர் பேசிக்கொண்டிருக்கும்போதே மக்கள் வெளியேறியதால் விழா அரங்கு காலியாக காட்சி அளித்தது.

எம்.ஜி.ஆர்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!