சிவகங்கையில் சங்கரய்யா அடிக்கல் நாட்டிய சி.பி.எம் அலுவலகம் திறப்பு!

சிவகங்கை மாவட்டத்தில் சுதந்திரப் போராட்டத்தியாகியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவருமான சங்கரய்யாவால் அடிக்கல் நாட்டப்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டக்குழு அலுவலகம் இன்று திறந்து வைக்கப்பட்டது.

அலுவலக திறப்புவிழா மாவட்டச் செயலாளர் கந்தசாமி தலைமையில் நடைபெற்றது. மாநிலக்குழு உறுப்பினர் ஜோதிராம் செங்கொடியேற்றினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.வீரபாண்டி வரவேற்றுப் பேசினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் அலுவலகத்தைத் திறந்து வைத்தார். விழாவில் பேசிய ஜி.ராமகிருஷ்ணன், "1999-ம் ஆண்டு இக்கட்சியின் மூத்தத் தலைவர்களில் ஒருவரும், சுதந்திரப்போராட்ட வீரருமான சங்கரய்யா இந்த மாவட்டக் குழு அலுவலகத்துக்கு அடிக்கல் நாட்டினார்.அன்றிலிருந்து இன்று வரைக்கும் தோழர்களின் நன்கொடை, உழைப்பு, பொதுமக்கள், வியாபாரிகள், அரசு ஊழியர் சங்கங்கள், இயக்கத்தின் பல்வேறு கிளைகள் என அனைவரின் ஒத்துழைப்பால்தான் இன்றைக்கு மாவட்டக்குழு அலுவலகம் கம்பீரமாகக் காட்சியளிக்கிறது" என்றார்.

இந்த அலுவலகம் எம்.ஆர்.வெங்கட்ராமன் நினைவகமாக உருவாக்கப்பட்டுள்ளது. எம்.ஆர்.வெங்கட்டராமன் சிவகங்கை மாவட்டம் மானாமதுரையைச் சொந்த ஊராகக் கொண்டவர். இவர் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் சேர்ந்து விவசாயிகள், தொழிலாளிகள், உழைக்கும் மக்களுக்காகப் போராட்டம் நடத்தியவர். பல முறை சிறை சென்றவர். பிரபல வழக்கறிஞராக இருந்து அப்பணியை விட்டுவிட்டு கட்சிக்கு வந்தவர். ஆகவே, அவரை பெருமைப்படுத்தும் வகையில் அவர் பெயரால் மாவட்டக்குழு அலுவலகம் உருவாக்கப்பட்டுள்ளது.

அலுவலகத்தில் கே.பி.நூர்முகம்மது பெயரால் அமைக்கப்பட்டுள்ள கூட்டரங்கத்தை சி.பி.எம் மாநில செயற்குழு உறுப்பினர் கே.கனகராஜ் திறந்துவைத்தார்.விஞ்ஞானி ரகுபதி திருப்புவனம் ராமன் நினைவாக உருவாக்கப்பட்டுள்ள நூலகத்தை மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.ஏ.பெருமாள் திறந்துவைத்தார். கட்டடத் திறப்பு விழாவில் தி.மு.க மாவட்ட செயலாளர் பெரியகருப்பன்,சி.பி.ஐ மாவட்டச் செயலாளர் எஸ்.குணசேகரன், காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ராமசாமி, ம.தி.மு.க மாவட்ட செயலாளர் புலவர் செவந்தியப்பன், தே.மு.தி.க மாவட்டத் தலைவர் திருவேங்கடம்,வி.சி.க மாவட்டச் செயலாளர் திருமொழி, மனிதநேய மக்கள் கட்சி கமரூல்கமால் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். பின்னர் முப்பெரும் விழா நடைபெற்றது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!