ஆர்.கே.நகர் தேர்தலில் தி.மு.க-வுக்கு ஆதரவு! திருநாவுக்கரசர் ‘பளீச்’ பேட்டி

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தி.மு.க வேட்பாளரான மருதுகணேஷுக்கு காங்கிரஸ் ஆதரவு அளிக்கும். பிற கட்சியினரும் ஆதரவு அளிக்க முன்வர வேண்டும் எனத் தமிழக காங்கிரஸ் தலைவரான திருநாவுக்கரசர் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

திருநாவுக்கரசர்

நெல்லை மாவட்டத்துக்கு வருகை தந்த தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசருக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பாக வரவேற்பு அளிக்கப்பட்டது. முன்னாள் சபாநாயகரான செல்லபாண்டியன் சிலைக்கு மாலை அணிவித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘‘ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தி.மு.க சார்பாகப் போட்டியிடும் வேட்பாளர் அறிவிக்கப்பட்டு இருக்கிறார். தி.மு.க-வின் வேட்பாளரான மருதுகணேஷுக்கு காங்கிரஸ் கட்சி முழுமனதுடன் ஆதரவு அளிக்கும்.

இந்தத் தேர்தலில் தே.மு.தி.க போட்டியிடாது என அறிவிக்கப்பட்டு இருப்பது வரவேற்கத் தகுந்தது. அதே சமயம் அனைத்துக் கட்சியினரும் தி.மு.க வேட்பாளரான மருதுகணேஷுக்கு ஆதரவு அளிக்க வேண்டும். அ.தி.மு.க-வைப் பொறுத்தவரையிலும் இந்தத் தேர்தல் ஒரு சோதனைக் களம். இரு அணிகளாகப் பிரிந்து கிடக்கும் அ.தி.மு.க-வின் மீது அந்தக் கட்சியினருக்கே நம்பிக்கை இல்லாமல் போய்விட்டது.

ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர், அ.தி.மு.க-வுக்கு தொண்டர்களின் ஆதரவு குறைந்துவிட்டது. இந்தத் தேர்தலில் எந்த அணியினர் அதிக வாக்குகளைப் பெறுகிறார்களோ அவர்களுடன் வரும் நாடாளுமன்றத் தேர்தலின்போது கூட்டணி அமைக்கும் முடிவில் பாரதிய ஜனதா உள்ளது. அதிகமான சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களின் அடிப்படையில் இரட்டை இலைச் சின்னத்தைத் தேர்தல் ஆணையம் வழங்கியிருக்கிறது. 

அப்படியானால், சசிகலா, தினகரன், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் ஓரணியில் இருந்தபோது 122 எம்.எல்.ஏ-க்கள் இருந்தார்கள். அப்போதே இரட்டை இலைச் சின்னத்தை அவர்களுக்கே கொடுத்திருக்க வேண்டும். பாரதிய ஜனதா பெரும் முயற்சி எடுத்து ஓ.பி.எஸ்., இ.பி.எஸ் அணிகளை இணைத்தது. ஆனால், எதிர்காலத்தில் இரு அணிகளுக்கும் இடையே விரிசல் அதிகரிக்கவே செய்யும். இடைத்தேர்தலின் போது, பணப்பட்டுவாடாவை தடுக்க தேர்தல் ஆணையம் முறையாக முயற்சி மேற்கொண்டால் அதைக் காங்கிரஸ் வரவேற்கும்’’ என்றார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!