நாட்டு வெடி குண்டுவீசி கொலை முயற்சி... ஸ்ரீதர் ஆதரவாளர்களால் மிரளும் காஞ்சிபுரம்! | Clash between Sridhar gang members at Kancheepuram

வெளியிடப்பட்ட நேரம்: 22:15 (25/11/2017)

கடைசி தொடர்பு:22:15 (25/11/2017)

நாட்டு வெடி குண்டுவீசி கொலை முயற்சி... ஸ்ரீதர் ஆதரவாளர்களால் மிரளும் காஞ்சிபுரம்!

காஞ்சிபுரம் பகுதியில் ஸ்ரீதர் தரப்பினர்களுக்கிடையே நடந்த குண்டுவீச்சு சம்பவம் அப்பகுதியில் பரபபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பட்டப்பகலில் காஞ்சிபுரம் ரயில்வே ஸ்டேஷன் பகுதியில் நடந்த இந்த சம்பவம் காவல்துறையை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

ஸ்ரீதர்

காஞ்சிபுரம் தாதாவாக வலம் வந்தவர் ஸ்ரீதர். இவர் வெளிநாடுகளில் பதுங்கி இருந்தபோது, தனது அடியாள்கள் மூலம் இங்கு மற்றவர்களை மிரட்டி ரியல் எஸ்டேட் வியாபாரம் செய்துவந்தார். ஸ்ரீதரின் டிரைவர் தினேஷ் என்பவரின் நண்பர் சந்திரசேகர் தலைமறைவாக இருந்த ஸ்ரீதரை பேஸ்புக்கில் கிண்டல் செய்தார். இதனால் கடந்த வருடம் சந்திரசேகரை தணிகாசலத்தின் ஆள்கள் கொலை செய்தார்கள். இதையடுத்து தணிகாசலம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கம்போடியாவில் தலைமறைவாக வாழ்ந்த ஸ்ரீதர் கடந்த மாதம் தற்கொலை செய்து கொண்டு இறந்தார். சிறைக்குச் சென்ற தணிகாசலம் தற்போது வெளியே வந்துள்ளார். யார் அடுத்து என்பதில் தணிகாசலத்திற்கும் தினேஷிற்கும் போட்டி அதிகரித்து வந்தது.  இந்த நிலையில் தணிகாசலத்தை கொலை செய்ய தினேஷ் திட்டமிடுகிறார். தினேஷ் கொலை செய்வதற்கு முன் முந்திக் கொள்ள வேண்டும் என தணிகாசலம் திட்டமிடுகிறார்.

ஸ்ரீதர் ஆதரவாளர்கள், நாட்டுவெடிகுண்டு வீச்சு

இந்த நிலையில் இன்று இருதரப்பினரும் காரில் சென்று கொண்டிருந்தபோது ஒருவரையொருவர் சந்திக்க நேரிட்டது. தணிகாசலத்தின் ஆள்கள் தினேஷ் சென்ற காரின்மீது நாட்டு வெடிகுண்டுகளை வீசினார்கள். அப்போது தப்பித்த தினேஷ் தன் நண்பர்களுடன் காஞ்சி காவல்நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக தினேஷ் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். இதையடுத்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்திவருகின்றனர். இருதரப்பினரிடையே ஏற்பட்டுள்ள மோதலால் மீண்டும் காஞ்சிபுரம் பதற்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.