சிவகங்கையில் ஆதிதிராவிட நலக்குழு ஆய்வு..! | National schedule caste committee review in Sivagangai

வெளியிடப்பட்ட நேரம்: 06:30 (26/11/2017)

கடைசி தொடர்பு:06:30 (26/11/2017)

சிவகங்கையில் ஆதிதிராவிட நலக்குழு ஆய்வு..!

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேசிய ஆதிதிராவிட நல ஆணையத்தின் சார்பில் ஆதிதிராவிட மக்களின் நலன் சார்ந்த திட்டங்கள் அதன் செயல்பாடுகள் குறித்து மாவட்ட அளவிலான ஆய்வுக்கூட்டம்  நடைபெற்றது. இதற்கு, தேசிய ஆதிதிராவிட நல ஆணையத்தின் துணைத் தலைவர் எல்.முருகன் தலைமை வகித்தார். ஆட்சியர் க.லதா, கண்காணிப்பாளர் டி.ஜெயச்சந்திரன் முன்னிலை வகித்தனர்.


காலை 10 மணிக்கு ஆய்வு  கூட்டம்  என அறிவிக்கப்பட்டிருந்ததால் அதிகாரிகளும் தலித் அமைப்புகளும் ஆட்சியர் அலுவலகத்தில் கூடியிருந்தார்கள். மாவட்ட ஆட்சியர், எஸ்.பி இல்லாததால் ஆணையத்தின் துணைத் தலைவர் ஆய்வுக் கூட்டத்தை நடத்த மறுத்துவிட்டார். பிறகு 3 மணிக்கு ஆட்சியர், எஸ்.பி வந்த பிறகு ஆய்வு கூட்டம் நடைபெற்றது. அதுவரைக்கும் அதிகாரிகளும், தலித் அமைப்பின் நிர்வாகிகளும் பல மணி நேரம் காத்திருக்கவேண்டியதாயிற்று.

நீண்ட நேரம் காக்க வைத்ததைப்பற்றி குழு கவலைப்படவில்லை. மேலும், ஆணையத்தின் ஆய்வுக் குழு மாணவ விடுதிகளை ஆய்வு செய்யச் சென்றது. அப்போது அங்கே உள்ளே நுழைந்ததும் போர்டுகளில் ஏசுவின் வசனங்கள் எழுதப்பட்டிருந்ததைக் கண்டு கொந்தளித்தது ஆய்வு குழு. அதன் பின்னர், ஆணையத்தின் துணைத்தலைவர் எல்.முருகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது, 'ஆணையத்தின் சார்பில் மாவட்டந்தோறும் கடந்த ஆறு மாதமாக ஆய்வு நடந்து வருகிறது.

இதுவரை 12 மாவட்டங்களில் ஆய்வு நடந்துள்ளது. இதில், பள்ளி, கல்லூரிகளில் இட ஒதுக்கீடு, தாட்கோ திட்டங்கள், பல்வேறு துறைத் திட்டங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. ஆதி திராவிட மாணவர்களின் பள்ளி, கல்லூரி விடுதிகள் தரம் உயர்த்தும் நிலையில் உள்ளது. விடுதிகளில் பதிவேட்டில் உள்ள எண்ணிக்கைக்கும், விடுதிகளில் உள்ள மாணவர் எண்ணிக்கைக்கும் வித்தியாசம் உள்ளதால் ஆதார் இணைப்புடன் கூடிய பயோ -மெட்ரிக் முறையை அமல்படுத்துவது குறித்து அறிக்கை கேட்டுள்ளோம். மேலும், தமிழகத்தில் பஞ்சமி நிலங்கள் சுமார் 6 ஆயிரம் ஏக்கர் அளவில் ஆக்கிரமிப்பில் உள்ளது. ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து நிலங்களை மீட்க நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

ஆனால், சிவகங்கை மாவட்டத்தில் பஞ்சமி நிலம் இல்லை என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆனால் ஆதிதிராவிட வகுப்பைச் சேர்ந்த அமைப்புகள் பஞ்சமி நிலங்கள் உள்ளதாக தெரிவித்துள்ளதால் ஆய்வு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் வன்கொடுமை வழக்குகளில் யாரும் தண்டனை பெறவில்லை. எனவே, இதுதொடர்புடைய வழக்குகளில் உள்ள சாட்சிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

புதுடெல்லியில் டிசம்பர் 12-ம் தேதி அனிதா வழக்கு குறித்து ஆணையம் சார்பில் விசாரணை நடைபெறவுள்ளது, சிவகங்கை மாவட்ட  தலித் மாணவர்கள் கல்வி குறித்தும் அதற்கான மத்திய அரசு நிதி குறித்தும் கேள்வி கேட்டதற்கு அவர் எந்த பதிலும் அளிக்கவில்லை, அவரிடம் அது குறித்த தகவலும் இல்லை. எதோ கடமைக்கு வந்து சென்றிருக்கிறது ஆய்வுக் குழு என்கிறார்கள் அதிகாரிகளும், பொதுமக்களும். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க