வெளியிடப்பட்ட நேரம்: 13:40 (26/11/2017)

கடைசி தொடர்பு:13:40 (26/11/2017)

'பாலில் தண்ணீரா..தண்ணீரில் பாலா?' - உணவு பாதுகாப்பு அலுவலரின் அதிரடி

தமிழக அரசின்  ஆவின் பால் கடல் கடந்து இன்று சிங்கப்பூரில் விற்பனையை தொடங்கி, அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது. இதன் தொடக்க நிகழ்ச்சி நேற்று சிங்கப்பூரில் நடந்தது. இந்த முயற்சியில் முழு மூச்சில் ஈடுபட்டு சாதித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு பல்வேறு தளங்களிலிருந்தும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் குவிந்த வண்ணம் உள்ளன.

இது ஒருபுறமிருக்க, உணவு பாதுகாப்பு அலுவலர் ஒருவர், அதிகாலையில் எழுந்து பால் வியாபாரிகளை வழிநிறுத்தி, அவர்கள் விற்பனைக்கு கொண்டு செல்லும் பாலின் தரத்தை ஆய்வு செய்து வருகிறார். இவரின் பணியை மக்கள் வெகுவாக பாராட்டுகிறார்கள்.


‎புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பேரூராட்சியில் பணிபுரியும் உணவு பாதுகாப்பு அலுவலர் ராமநாதன், இவர் தனது ஆய்வுப் பணிகளை அதிகாலையில் ஆரம்பித்துவிடுகிறார். ஆலங்குடி அதைச் சுற்றியுள்ள பகுதியில் உள்ள மக்கள் இன்னமும் அன்றாடம் கறக்கப்படும் கறவைப் பாலைத்தான் தங்களது தேவைகளுக்குப் பயன்படுத்தி வருகின்றனர்.

‎இதனால்,பெரிய கேன்களில் பால்பண்ணையிலிருந்து கறக்கப்படும் பாலை சேகரித்து, விற்பனை செய்யும் வியாபாரிகள் ஆலங்குடி பகுதியில் அதிகமாக உள்ளனர். ‎சமீபகாலமாக, இப்படி வழங்கும் பாலின் தரம் குறித்தப் புகார்கள் பொது மக்களிடமிருந்து உணவு பாதுகாப்பு அலுவலர் ராமநாதனுக்கு வந்தது.

இதையடுத்து களத்தில் இறங்கிய ராமநாதன், பால் வியாபாரிகள் கொண்டு செல்லும் பாலின் தரத்தை ஆய்வு செய்து அவைகளை பற்றிய விவரங்களைக் கேட்டு, தவறு செய்த வியாபாரிகளை எச்சரிக்கை செய்து அனுப்பினார். "பாலில் தண்ணீரும் கலக்காதே. தண்ணீரில் பாலும் கலக்காதே. பார்க்கிற தொழிலை சுத்தமாக பண்ணு. அப்போதான் நாளைக்கு உன் பிள்ளைகள் நன்றாக இருக்கும்" என்று பால் வியாபாரிகளிடம் ராமநாதன் கூறும் அனுபவ அறிவுரைக்கு மக்கள் மத்தியில் பயங்கர வரவேற்பு.

"இவரைப் போலவே எல்லா ஆபீஸருங்களும் இருந்துட்டா, எவ்வளவு நல்லாயிருக்கும்" என்று ஏக்கப் பெருமூச்சு விடுகிறார்கள் ஆலங்குடி பகுதியில் உள்ள மக்கள்.