``அரசின் கொள்கைகளில் மாற்றம் செய்வதே மறுமதிப்பீடு குளறுபடிக்கு தீர்வு!'' - பேராசிரியர் அ.மார்க்ஸ் | Marx Anthonisamy accuses government policies for revaluation collapses in Anna University

வெளியிடப்பட்ட நேரம்: 13:12 (26/11/2017)

கடைசி தொடர்பு:13:12 (26/11/2017)

``அரசின் கொள்கைகளில் மாற்றம் செய்வதே மறுமதிப்பீடு குளறுபடிக்கு தீர்வு!'' - பேராசிரியர் அ.மார்க்ஸ்

`ரீவேல்யுவேஷன்' என்னும் மறுமதிப்பீட்டு நடைமுறையில் குளறுபடிகள் நடப்பதாக மாணவர்கள் தொடர்ச்சியாக புகார் தெரிவித்தனர். இதையடுத்து, செப்டம்பர் 27, அக்டோபர் 21-ம் தேதிகளில் சென்னை, திருச்சி, கோயம்புத்தூர் வளாகங்களில் அண்ணா பல்கலைக்கழக நிர்வாகம் விசாரணை நடத்தியது. அத்துடன், `வினாத்தாள்கள் அமைப்பது, விடைத்தாள்களைத் திருத்துவது உள்ளிட்ட தேர்வு தொடர்பான எந்தவிதமான பணிகளையும் மேற்கொள்ளக் கூடாது' என 1,070 ஆசிரியர்களுக்குத் தடை விதித்திருக்கிறது அண்ணா பல்கலைக்கழகம். 

Anna University - மறுமதிப்பீடு

விசாரணைக்கு அழைக்கப்பட்ட 1,169 ஆசிரியர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பல்கலைக்கழகத்தின் நடவடிக்கைகளிலிருந்து 99 பேர் மட்டுமே தப்பியுள்ளனர். மறுமதிப்பீட்டில் தவறு செய்திருக்கும் ஆசிரியர்களுக்கு முறையே 21-30 மதிப்பெண் வேறுபட்டால் ஒரு ஆண்டுக்கு தகுதிநீக்கம் செய்தும், 31-40 மதிப்பெண் வேறுபட்டால் இரண்டு ஆண்டுகளுக்கு தகுதிநீக்கம் செய்தும், 40 மதிப்பெண்ணுக்குமேல் வேறுபட்டால் மூன்று ஆண்டுகளுக்கு தகுதிநீக்கம் செய்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 2011-ம் ஆண்டு தொடங்கி 2016-ம் ஆண்டு வரை அண்ணா பல்கலைக்கழகம் இந்த மறுமதிப்பீட்டுக்காகவும் விடைத்தாள்களின் நகல் வழங்குவதற்காகவும் மாணவர்களிடமிருந்து வசூலித்த தொகை 75 கோடி ரூபாய். ஆர்.டி.ஐ மூலம் பெறப்பட்ட இந்த மறுமதிப்பீட்டினால் வசூலிக்கப்பட்ட தொகைதான், அண்ணா பல்கலைக்கழகத்தின் இத்தகைய அதிரடி விசாரணைக்கும், அதன் விளைவாக ஆசிரியர்களின் மீதான நடவடிக்கைகளுக்கும் வழிவகுத்திருக்கிறது.

ஆசிரியர்களின் மீதான இந்த நடவடிக்கை குறித்து கேட்கப்பட்டபோது, ``ஏறத்தாழ 15,000 பேராசிரியர்கள், விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளில் இந்த ஆண்டு ஈடுபடுத்தப்பட்டிருக்கிறார்கள். தேர்வு முடிவுகளுக்குப் பிறகு 2.5 லட்சம் விடைத்தாள்களை மறுமதிப்பீடு செய்ய விண்ணப்பித்திருக்கிறார்கள் மாணவர்கள். இந்த 2.5 லட்சம் விடைத்தாள்களில் 50,000 விடைத்தாள்கள் மதிப்பெண்ணில் மாற்றம் நிகழ்ந்திருப்பவை. மாணவர்களின் நலனை மனதில்கொண்டு, தவறாக மதிப்பெண் வழங்கிய பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது” என்று அண்ணா பல்கலைக்கழகத்தில், தேர்வுத்துறைக் கட்டுப்பாட்டாளர் உமா தெரிவித்தார். 

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் தனியார் பொறியியல் கல்லூரியில், இறுதி ஆண்டு மெக்கானிக்கல் துறை மாணவர் அரவிந்த் பேசுகையில், ``ஒரு நாளைக்கு 50 விடைத்தாள்களை ஓர் ஆசிரியர் மதிப்பீடு செய்ய முடியும். 50 விடைத்தாள்களைத் திருத்தினால் ஆயிரம் ரூபாய் சம்பளம். ஒருவேளை, அந்தத் துறை சார்ந்த ஆசிரியராக அவர் இல்லாமல்போனாலோ அல்லது அந்தத் துறை சார்ந்த ஆசிரியர் தவறாக மதிப்பீடு செய்தாலோ, மாணவர்களிடம் பணம் வாங்குவது எந்த விதத்தில் நியாயமாகும்? எந்த முறையில் விடைத்தாள் திருத்தப்படுகிறது, `கீ பாய்ன்ட்ஸ்' எனப்படும் முக்கியத் தரவுகளை வைத்து மதிப்பெண் போடுகிறார்களா... என்பதிலெல்லாம் மாணவர்களுக்கு எந்தத் தெளிவும் இல்லை. கொத்துக்கொத்தாக அதிகரித்துவிட்ட பொறியியல் கல்லூரிகளில் விடைத்தாள்களைத் திருத்த அதிகமான ஆசிரியர்கள் தேவைப்படுவதால்,  `ஐந்து ஆண்டுகள் அனுபவம் உள்ளவர்கள்தான் விடைத்தாள்களைத் திருத்த வேண்டும்’ என்று இருந்த விதியை, மூன்று ஆண்டுகள் அனுபவமே போதும் என்று மாற்றிய பிறகு, மறுமதிப்பீடு குளறுபடிகளும் அதிகரித்திருக்கின்றன. அலட்சியமாக விடைத்தாள்களைத் திருத்தும் ஆசிரியர்களை சென்னைப் பல்கலைக்கழக நிர்வாகம் தகுதிநீக்கம் செய்ததாகக் கேள்விப்பட்டோம். இது தனியார் பல்கலைக்கழகங்களிலும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். ரீவேல்யுவேஷனுக்கு விண்ணப்பித்த பிறகு, அடுத்த செமஸ்டர் தேர்வுகளின் பாடத்தைப் படிப்பதில் நிறையவே சிக்கல்கள் இருக்கின்றன. அடுத்த செமஸ்டர் தேர்வுகளுக்கு, நான்கு வாரங்களுக்கு முன்பாகத்தான் ரீவேல்யுவேஷன் செய்த முடிவுகள் வெளிவரும்” என்றார்.

பள்ளியில் தோல்வியையே சந்தித்திடாத எப்போதும் நல்ல மதிப்பெண் பெறும் ஒரு மாணவனுக்கு, தேர்வு முடிவு தோல்வியாக இருந்தால், அவனை அது நிலைகுலையவைத்துவிடுகிறது. பொறியியல் கல்லூரி மாணவர்கள் மத்தியில் அதிகரித்திருக்கும் தற்கொலைகளுக்கும், இந்த விடைத்தாள் குழப்பங்களுக்கும் நிறையவே தொடர்பு இருக்கின்றன. `திட்டமிட்டு மதிப்பெண் குறைக்கப்படுகிறது; அஜாக்கிரதை காரணமாக மதிப்பெண் குறைக்கப்படுகிறது; ஆசிரியர்களின் வேலைப்பளு காரணமாக மதிப்பெண் குறைகிறது' என்று மாணவர்களிடமிருந்து பலவிதமான விமர்சனங்கள் எழுகின்றன.

விடைத்தாள்களைத் திருத்தும் ஆசிரியர்களுக்கு வேறுவிதமான சிக்கல்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. ``திருத்துவதற்கு எடுத்துக்கொண்ட அத்தனை விடைத்தாள்களையும், தேர்ச்சி பெறச்செய்தாலோ அதிக மதிப்பெண் போட்டிருந்தாலோ, நிர்வாகத்தின் பல கேள்விகளுக்கும் உள்ளாகவேண்டியிருக்கும். அதனாலேயே பின்தங்கிய மாவட்டங்களிலிருந்து வரும் பொறியியல் கல்லூரி விடைத்தாள்களையும் பகுதி நேர மாணவர்களின் விடைத்தாள்களையும் கறாராகத் திருத்தி, முடிந்தவரை அரியர்களை அதிகரிக்கச் செய்வதை பல ஆசிரியர்கள் வழக்கமாக வைத்திருப்பதாகத் தெரிகிறது” என்று ஆசிரியர்கள் தரப்பில் சொல்லப்படுகிறது. 

a. marxமறுமதிப்பீடு குளறுபடிகளால் 1,070 ஆசிரியர்கள் நடவடிக்கைக்கு உள்ளாகியிருப்பது குறித்து கருத்து தெரிவித்தார் பேராசிரியர் அ.மார்க்ஸ்.

``நடந்த இத்தகைய குளறுபடிகளுக்கு ஆசிரியர்களை மட்டுமே பொறுப்பல்ல. ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருத்தல், பணியிடங்களுக்கு நிரந்தரப் பேராசிரியர்களை நியமிக்காதிருத்தல் போன்ற அரசின் கொள்கைகளும் காரணம்.

உதாரணமாக, கும்பகோணத்தில் நான் உரையாற்றச் சென்றிருந்த ஒரு கல்லூரியில், பணியிடங்கள் மொத்தம் 330. அதில் 36 பேராசிரியர்கள் மட்டுமே நிரந்தரப் பணியாளர்கள். 100 பணியிடங்களுக்கும் மேலாக நிரப்பப்படாமலும், மீதமிருக்கும் பணியிடங்களுக்கு பெற்றோர்-ஆசிரியர் சங்க, விரிவுரையாளர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். நிரந்தரப் பணியாளர்களாக இருக்கும் பேராசிரியர்களுக்கும், தற்காலிகமாக நியமிக்கப்பட்ட பேராசிரியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் ஊதியத்தில் மிகப்பெரிய வேறுபாடு. நிரந்தப் பணியாளரின் ஊதியத்தொகையில் நான்கில் ஒரு பகுதிதான் தற்காலிகப் பேராசிரியர்கள் ஊதியமாகப் பெறுவார்கள். அவர்களுக்கு கூடுதலான பணிச்சுமையும் தரப்படும்போதுதான் இந்த வகையான குளறுபடிகள் நிகழும். மேலும், ஓர் ஆசிரியருக்கு 15 முதல் 20 விடைத்தாள்கள் மட்டுமே திருத்தும் பணி அளிக்கப்பட வேண்டும். ஆசிரியர் பற்றாக்குறை ஏற்படாமல் பணியிடங்களை முழுமையாக நிரப்புவதும், பேராசிரியர்களை நிரந்தரப் பணியாளர்களாக நியமிப்பதும்தான் அரசு தற்போது செய்யவேண்டிய முதன்மைப் பணி” என்று தெரிவித்தார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்