வெளியிடப்பட்ட நேரம்: 14:55 (26/11/2017)

கடைசி தொடர்பு:14:55 (26/11/2017)

அரசு கல்லூரி மாணவர்களை டெங்கு தடுப்பு பணிகளில் முடுக்கிவிட்ட ஆட்சியர்!

 

கரூர் மாவட்டம், தாந்தோன்றிமலை அரசு கல்லூரி மாணவ,மாணவிகளை தாந்தோன்றிமலை பகுதியில் நடைபெறும் டெங்கு தடுப்பு பணிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் கோவிந்தராஜ் ஈடுபட வைத்தார்.

கரூர் நகரில் முக்கிய கழிவுநீர் கால்வாய் தூர் வாரும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது. அதையொட்டி, கரூர் நகராட்சிக்குட்பட்ட சத்தியமூர்த்தி நகர்,பாரதிதாசன் நகர்,தாந்தோணி,இட்டை வாய்க்கால்,காமராஜ் மார்க்கெட் ஆகிய பகுதிகளில் டெங்கு தடுப்பு பணிகள் மற்றும் சுற்றுப்புற சுகாதாரப்பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் கு.கோவிந்தராஜ் அவர்கள் பார்வையிட்டார்.
 
இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது, "கரூர் நகராட்சி, தாந்தோணி பகுதியில் உள்ள சத்தியமூர்த்தி நகர்,பாரதிதாசன் நகர், அரசு கலைக்கல்லூரி போன்ற இடங்களில் உள்ள சுற்றுப்புற பகுதிகளில் தூய்மைப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

 உணவு விடுதிகள்,இறைச்சி கடைகள்,தங்கள் பகுதிகளை தூய்மையாக வைத்துக்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. மிதிவண்டி மற்றும் மோட்டார் வண்டி பழுது நீக்குபவர்கள் பயன்பாடற்ற வண்டிகளை தொடர்ந்து தங்களது கடைகளின் முன்பு நிறுத்தி வைக்கக்கூடாது என
ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. மேலும்,தாந்தோணி அரசு கலைக்கல்லூரி மாணவ,மாணவியர்கள் தாந்தோணி பகுதியில் டெங்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியினை மேற்கொள்ள உள்ளார்கள்.

மேலும்,இரட்டை வாய்க்கால் பகுதி,காமராஜ் மார்க்கெட்டில் இருந்து இரயில்வே இருப்பு பாதை வரை தூர் வாரப்பட்டுள்ளது. நாளை முதல் காமராஜ் மார்க்கெட்டிற்கு தென்புறம் உள்ள பகுதி தூர்வாரப்பட உள்ளது. இதன்மூலம்,கரூர் நகரின் முக்கிய கழிவுநீர் கால்வாயான இரட்டை வாய்க்காலில் கழிவுநீர் தடையின்றி செல்ல பணிகள் நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் சமுதாய அக்கறையோடு இப்பணிக்கு
ஒத்துழைப்பு அளித்து குப்பைகளை குப்பைத்தொட்டிகளில் மட்டுமே போடவேண்டும்" என தெரிவித்தார். இந்த ஆய்வின்போது,வருவாய் கோட்டாட்சியர் திரு.சரவணமூர்த்தி,வட்டாட்சியர் அருள் மற்றும் நகராட்சி, வருவாய் பொது சுகாதாரத்துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.