'பள்ளி மேற்கூரை இடிந்து எங்கள் தலையில் விழுந்துடுமா?' - பயத்தில் புதுக்கோட்டை கிராம மாணவர்கள் | Students in fear at Pudhukottai after their school's building is in dangerous condition

வெளியிடப்பட்ட நேரம்: 19:00 (26/11/2017)

கடைசி தொடர்பு:19:00 (26/11/2017)

'பள்ளி மேற்கூரை இடிந்து எங்கள் தலையில் விழுந்துடுமா?' - பயத்தில் புதுக்கோட்டை கிராம மாணவர்கள்

"டி.வி.யில், பள்ளிக் கட்டடம் இடிந்து மாணவர்கள் சாவுன்னு செய்திகள் பார்க்கும்போது, எங்களுக்கும் பயமா இருக்கும். ஏன்னா, நாங்க படிக்கும் பள்ளி கட்டடத்தோட நிலைமையும் அப்படித்தான் இருக்கு. பள்ளிக்கூடம் போகவே பயமா இருக்கு. எந்த நேரத்தில் மேற்கூரை இடிந்து எங்கள் தலையில் விழுந்து, நாங்க செத்துடுவோமோன்னு ரொம்பவும் பயமா இருக்கு' என்று கூறி, அதிர வைக்கிறார்கள் புதுக்கோட்டையில் இருக்கும் ஒரு கிராமத்தின் பள்ளி மாணவர்கள்

புதுக்கோட்டை மாவட்டம், கவிநாடு அருகில் இருக்கிறது மறவப்பட்டி கிராமம். இங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் கட்டடத்தின் மேற்கூரைகளும் சுற்றுச்சுவர்களும் விரிசல் ஏற்பட்டு மிக மோசமாக உள்ளது. அதிலும் குடிநீர் தொட்டி அருகில் உள்ள பள்ளிக்கட்டடத்தின் மேற்கூரை அபாயகரமான கட்டத்தில் இருக்கிறது.

"ஐம்பது, அறுபது வருடங்களுக்கு முன்பு கட்டின கட்டடங்கள் எல்லாம் நெட்டுக்குத்தா நிக்குது. இந்தக்கட்டடம் கட்டி, முழுசா பதினைந்து வருடங்கள் கூட ஆகலே, அதுக்குள்ள யார் தலையிலாவது விழுவதற்கு காத்துகுட்டுக் கெடக்கு. தினமும் புள்ளைங்க ஸ்கூலுக்கு போயிட்டு உசுரோட திரும்பனுமன்ன்னு நெஞ்சுக்குழி கெதக்கு கெதக்குனு கெடந்து அடிச்சுக்குது" என்று பதறுகிறார்கள் மறவப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள்.

"இந்தப் பள்ளியில் இருநூறுக்கும் மேற்பட்ட குழந்தைகள் படிக்கிறார்கள். கட்டடத்தின் மேற்கூரையை உடனடியாக மராமத்து பண்ண வேண்டும். மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியும் மாவட்ட ஆட்சியரும் சிறப்பு கவனம் எடுத்து, இந்தப் பள்ளியின் அபாயகரமான நிலைமையை மாற்ற வேண்டும்" என்ற கோரிக்கையை இப்பகுதி சமூக நல ஆர்வலர்கள் முன்வைக்கிறார்கள்.

இதுகுறித்து மாவட்ட கல்வி அதிகாரி ஒருவரிடம் பேசியபோது, "புதுக்கோட்டை மாவட்டத்தில் பழுதடைந்து இருக்கும் பள்ளிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில், பழுதடைந்த நிலையில் உள்ள பள்ளிகள் மிக விரைவாக சரி செய்யப்படும்" என்றார்.