"பிளாஸ்டிக்கை தவிர்ப்போம் நொய்யலை மீட்போம்": களமிறங்கிய கோவை இளைஞர்கள்!

`பிளாஸ்டிக்கை தவிர்ப்போம், நொய்யலை மீட்போம்' என்ற வாசகங்களுடன், கோவை இளைஞர்கள் களமிறங்கியுள்ளனர்.

நொய்யல்

கோவை என்றவுடன் நினைவுக்கு வரும் விஷயங்களில் நொய்யல் ஆறும் ஒன்று. மேற்குத் தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும், நொய்யல் ஆறு பேரூர், இருகூர், சூலுார், சோமனுார், மங்கலம், திருப்பூர் மாநகர், முதலிபாளையம் வழியாக ஒரத்துப்பாளையம் அணையை சென்றடைகிறது. குறிப்பாக, கடந்த சில நூற்றாண்டுகளாகவே மக்கள் தங்களது மூதாதையர்களுக்கு திதி கொடுக்கும் பகுதியாகவும் பேரூர் மாறியது.

நாளடைவில், பேரூர் ஆறு பிளாஸ்டிக் கழிவுகளால் ஆக்கிரமிக்கப்பட்டது. முக்கியமாக, படித்துறை பகுதி முற்றிலும் பாதிக்கப்பட்டது. இதையடுத்து, இளைஞர்கள் மற்றும் தன்னார்வலர்களின் உதவியால், அவ்வபோது பேரூர் சுத்தப்படுத்தப்படும். இதன் காரணமாக, கடந்த பருவமழையின்போது, பெய்த கனமழையில், நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கெடுத்தது.

நொய்யல்

இந்நிலையில், பேரூர் நொய்யல் ஆற்றை சுத்தப்படுத்தி படித்துறை மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளில், `பிளாஸ்டிக்கை தவிர்ப்போம், நொய்யலை மீட்போம்' என்ற விழிப்பு உணர்வு வாசகங்களை எழுதுவதற்காக, கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்த இளைஞர்கள் களமிறங்கினர். கடந்த வாரம் முழுக்க, நொய்யல் ஆற்றை சுத்தப்படுத்திய அவர்கள், இன்று விழிப்பு உணர்வு வாசகங்களை எழுதும் பணிகளில் ஈடுபட்டனர்.

ஆனால், படித்துறையில் விழிப்பு உணர்வு வாசங்கள் எழுத அனுமதி வழங்கப்படவில்லை. இதையடுத்து, சுற்றுவட்டாரப் பகுதிகளில் `பிளாஸ்டிக்கை தவிர்ப்போம், நொய்யலை மீட்போம்' என்ற விழிப்பு உணர்வு வாசகங்கள் எழுதப்பட்டன. இதில், ஏராளமான பெண்கள், மாணவர்கள், இளைஞர்கள் கலந்து கொண்டனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!