வெளியிடப்பட்ட நேரம்: 23:30 (26/11/2017)

கடைசி தொடர்பு:10:02 (27/11/2017)

நிலப்பிரச்னையால் கிருஷ்ணகிரியில் கைகலப்பு... போலீஸ் சமாதானம்!

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் அடுத்துள்ள கவுண்டப்பனூர் கிராமத்தில் ஓய்வுபெற்ற அரசு அலுவலர் லட்சுமி வசித்துவருகிறார். இவருக்குச் சொந்தமாக நான்கு ஏக்கர் நிலம் உள்ளது. இவர் தனது நிலத்தில் பல ஆண்டுகளாக விவசாயம் செய்து வருகின்றார். ஆனால், அதே பகுதியான சவுட்டள்ளி கிராமத்தைச் சேர்ந்த சீனிவாசன் மற்றும் சிலர் அந்த நிலம், தங்களுக்குச் சொந்தமானது என்று உரிமை கொண்டாடி கடந்த மூன்று மாதமாக அடி ஆள்களை வைத்து நெல் பயிர் செய்துள்ளனர். 

கிருஷ்ணகிரி நெல் அறுவடை

நெற்பயிர் தற்போது கதிராகி அறுவடைக்குத் தயாரான பருவத்தில் சீனிவாசன் தரப்பினர் இன்று அறுவடையை தொடங்கியுள்ளனர் அப்போது நிலத்தின் உரிமையாளரான லட்சுமி மற்றும் அவரது உறவினர்கள் அறுவடையைத் தடுத்து நிறுத்தியதால் இரு தரப்பினருக்கும் கைகலப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த காவேரிப்பட்டினம் போலீஸார் விரைந்துவந்து இரண்டு தரப்பு கூட்டத்தைக் கலைத்துள்ளனர். 

நிலப்பிரச்னைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு ஏற்படுத்தப்படும் என்று இரண்டு ஊர் மக்களுக்கும் உறுதி அளித்ததன் பேரில் இரண்டு தரப்பும் கலைந்துசென்றுள்ளனர். இருவரின் நிலப்பிரச்னைக்காக இரு கிராம மக்கள் மோதிக்கொண்டு உயிர்ச்சேதம் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. காவல்துறை மற்றும் வருவாய்த் துறையினர் உடனடியாக இதன்மீது நடவடிக்கை எடுத்து சுமுகத் தீர்வு ஏற்படுத்தி அபாயத்தைத் தடுத்து நிறுத்த வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர் இப்பகுதி பொதுமக்கள்.