வெளியிடப்பட்ட நேரம்: 04:00 (27/11/2017)

கடைசி தொடர்பு:07:20 (27/11/2017)

புதுக்கோட்டையில் தொண்டைமான் கால நாணயங்கள் கண்காட்சி!

புதுக்கோட்டை மாவட்டம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் உலக மரபு வார விழாவை முன்னிட்டு ,தொன்மை பாதுகாப்பு மன்ற மாணவர்களால் சேகரிக்கப்பட்ட கறுப்பு சிவப்பு பானை ஓடுகள், பழங்கால நாணயங்கள், இரும்புக்கழிவுகள், ஓலைச்சுவடிகள், கல்வெட்டுப் படிகள் உள்ளிட்டவை பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டன.

 

இக்கண்காட்சியில் பழங்கால செங்கற்கள், குளம் வெட்டியதற்கான கல்வெட்டு, நொடியூர் சிவன் கோயிலுக்கு வியாபாரி நெய் வழங்கியதற்கான கல்வெட்டு, நொடியூர் குமிழி கல்வெட்டு, பழங்கால விளையாட்டுப் பொருள்கள், சங்கு, வளையல், விளையாட்டுச் சில்லுகள், கந்தர்வக்கோட்டை அருகே மங்கனூர் செல்லும் வழியிலுள்ள இச்சடியம்மன் கோயில் திடலில் விரவிக் கிடந்த சுடுமண் இரும்பு உருக்கு குழாய்கள், இரும்புக்கழிவுகள், பழங்கால வாளின் உடைந்த துண்டுகள், பழங்கால கறுப்பு-சிவப்பு பானைகளின் விளிம்பு வேலைப்பாடுகள் முதுமக்கள் தாழிகளின் உடைந்த பாகங்கள், தாங்கிகள்  வாண்டையான் பட்டி அருகே கண்டெடுக்கப்பட்ட ரவ்லட் பானை வகையைச் சார்ந்த தாங்கி, தமிழ் எண்களுடன் எழுதப்பட்ட ஓலைச்சுவடிகள் பானைக்குறியீடுகள், தேய்ப்புக்கற்கள் ஆங்கிலேயர் மற்றும் புதுக்கோட்டை சமஸ்தான ஆட்சி காலத்தில் புழக்கத்தில் இருந்த 50 நாணயங்கள் ஆகியவற்றை பள்ளி மாணவர்கள் காட்சிப்படுத்தி இருந்தனர்.

இக்கண்காட்சியில் புதுக்கோட்டை தொண்டைமான் ஆட்சிக்காலத்தில் புழக்கத்திலிருந்த அம்மன் காசுகள் இங்கிலாந்து மன்னர்கள் எட்வர்ட், ஜார்ஜ் மற்றும்  விக்டோரியா ராணியாரின் உருவம் பொறிக்கப்பட்ட 50 நாணயங்கள் மாணவர் செ.சபரிநாதனால் சேகரித்து காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.

அவரிடம் நாம் இந்தச் சேகரிப்புகுறித்து  கேட்டபோது, “எனது பாட்டியின் ஆர்வத்தின் காரணமாக சேகரிக்கப்பட்ட நாணயங்கள்தான் இவை. இவற்றைக் காட்சிப்படுத்துவதன் மூலம், இதை மற்றவர்களுடன்  பகிரவும் இதுபோன்ற பொருள்களைப் பேணி பாதுகாப்பதும் நமது கடமை என்பதை உணர்த்தவும் முடியும்" என்றார்.

அக்கச்சிப்பட்டி ஊர் பெயராய்வுகுறித்து கள ஆய்வு செய்துள்ள ஜனார்த்தனன் கூறும்போது, "அக்கச்சிப்பட்டி என்பது முன்னொரு காலத்தில் இப்பகுதியை ஆண்டு வந்த குறுநில மன்னர் தனது அக்காவுக்கு சீராக அதாவது சீதனமாக வழங்கியதாகவும் அந்த நிகழ்வின் அடிப்படையில் இவ்வூர் “அக்கா சீர் பட்டி “ என்று வழங்கப்பட்டு பின்னாளில் மருவி அக்கச்சிப்பட்டி என்றானதாக தெரியவந்துள்ளது” என்றார்.
இந்தக் கண்காட்சியை ஆசிரியர்களும் பொதுமக்களும் ஆச்சரியம் பொங்கப் பார்த்துவிட்டு மாணவர்களைப் பாராட்டிச் சென்றனர். இக்கண்காட்சியின் ஏற்பாடுகளை பள்ளியின் தொன்மை பாதுகாப்பு மன்ற ஒருங்கிணைப்பாளரும், புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக்கழக நிறுவனருமான மங்கனூர்  மணிகண்டன் செய்திருந்தார்.