வெளியிடப்பட்ட நேரம்: 07:30 (27/11/2017)

கடைசி தொடர்பு:09:08 (27/11/2017)

மனநலம் பாதித்த பெண்ணை மீட்ட  மழையூர் போலீஸார்!

புதுக்கோட்டை மாவட்டத்தில், மனநலம் பாதித்த நிலையில் சுற்றித்திரிந்த பெண் ஒருவரை, மழையூர் போலீஸார் மீட்டு, காப்பகத்தில் சேர்த்தனர். புதுக்கோட்டை மாவட்டம் மழையூர் பகுதியில், பெண் ஒருவர் சந்தேகத்துக்கிடமான வகையில் சுற்றித்திரிவதாக மழையூர் போலீஸாருக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்தனர். இதையடுத்து அந்தப் பகுதிக்குச் சென்ற போலீஸார், அந்தப் பெண்ணை காவல் நிலையத்துக்கு அழைத்துச்சென்று விசாரித்தனர். அப்போது அந்தப் பெண், மனநலம் பாதிக்கப்பட்டவர் என்ற விவரம் தெரியவந்தது.  

‎அவரை விசாரணைசெய்த காவலர் ஒருவர் நம்மிடம் பேசும்போது,"அந்தப் பெண்ணின் பெயர் முத்துமாரி. ஊர் ராஜபாளையம் எனக் கூறுகிறார். கணவரும் இரண்டு பிள்ளைகளும் இருப்பதாகக்கூறுகிறார். திடீரென்று தன் கணவர் இறந்துவிட்டார் என்றும் நான்கு பிள்ளைகள் இருப்பதாகவும் மாற்றிப் பேசுகிறார். குடும்பப் பிரச்னைகள் காரணமாக மனநல பாதிப்புக்கு ஆளாகி இருப்பார் என்று தெரிகிறது. எந்தக் கேள்வி கேட்டாலும் சரியான பதிலைச் சொல்ல மறுக்கிறார்" என்றார்.

‎மாலை வரை விசாரித்தும் காவல் துறைக்கு உருப்படியான தகவலோ, உறவினர்களின் தொடர்பு எண்ணோ கிடைக்கவில்லை. சோர்ந்து போன காவலர்கள், வேறு வழியில்லாமல் மனநலம் பாதிக்கப்பட்டோர் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்துவிட்டார்கள். அத்துடன், அந்தப் பெண்ணை அன்னவாசல் என்ற ஊரில் உள்ள அரசு பாதுகாப்பு மையத்தில் கொண்டுபோய் சேர்த்திருக்கிறார்கள். இப்போது, முத்துமாரி அந்த ஹோமில்தான் இருக்கிறார்.