வெளியிடப்பட்ட நேரம்: 12:24 (21/10/2012)

கடைசி தொடர்பு:12:24 (21/10/2012)

பெற்றோரின் தியாகத்தை மாணவர்கள் நன்றியுடன் திரும்பிப் பார்க்க வேண்டும்: மயில்சாமி அண்ணாதுரை!

ஸ்ரீவில்லிபுத்தூர்: தங்களை படிக்கவைத்து ஆளாக்கியுள்ள பெற்றோரின் தியாகத்தை மாணவர்கள் நன்றியுடன் திரும்பிப் பார்க்க வேண்டும் என்று பெங்களூருவில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் திட்ட இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை கூறினார்.

விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில், வி.பி.எம்.எம். மகளிர் பொறியியல் கல்லூரியின் 6-வது பட்டமளிப்பு விழாவில் 179 மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி மயில்சாமி அண்ணாதுரை பட்டமளிப்பு விழா உரையாற்றினார். அவர் பேசுகையில் கூறியதாவது:

பல்வேறு குடும்ப சூழ்நிலையில் படித்து, பெற்றோரின் கனவை நனவாக்கும் வகையில் இன்று இந்தப் பட்டம் பெற்றுள்ளீர்கள். இது வாழ்க்கையின் தொடக்கமே. கல்வியால் தான் ஓர் உன்னதநிலையை அடைய முடியும். நேற்றைய வரலாறு தெரிந்து கொள்ள வேண்டும். உங்கள் வரலாற்றை பின்னோக்கிப் பாருங்கள். வீட்டில் பெற்றோர் உங்களுக்காக பல தியாகங்களை செய்திருப்பார்கள்.

அதனை நன்றியுடன் திரும்பிப் பாருங்கள். இதில் சிலர் மேற்படிப்பு படிக்கலாம், சிலர் வேலைக்குச் செல்லலாம், சிலர் குடும்ப வேலையைக் கவனிக்கலாம். எதில் இருந்தாலும் ஆண்களுக்கு இணையாக நீங்களும் சரி சமமாக போட்டியிடலாம். அறிவுத் திறமையால், என்னால் செய்ய முடியும், சாதிக்க முடியும் என்று கூறும் பெண்கள் அங்கீகரிக்கப்படுகிறார்கள்.

எனக்கு படிக்க சந்தர்ப்பம் கொடுத்த இந்தியாவிற்கு நான் காசு பணத்தைத் திரும்ப தர வேண்டாம். எனது திறமையை மட்டும் தருகிறேன் என்று நம்பிக்கையுடன், திறமையுடன் வாருங்கள். இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

மகிழ்ச்சி என்பது பேச்சு, செயலில் அல்ல. என் வாழ்வால், என் பேச்சால், என் திறமையால் மற்றவர்கள் மகிழ வேண்டும். அதுவே மகிழ்ச்சி என்றார் அவர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்