“இயற்கை விவசாயம் இப்படித்தான் செய்யணும்!” - செய்தே காட்டும் ‘சட்டை அணியாத சாமியப்பன்’

ருபது வருடங்களாக உடலின்மேல் சட்டையணியாமல் வாழ்ந்துவருகிறார் சாமியப்பன் என்பவர். அதைவிட, ஈரோடு மாவட்டத்தில் இருந்து பூம்புகார் வரை காவிரி நீர் மூலமாக விதைபரவல் நடக்க, இவர் காவிரி ஆற்றின் நடுவே தீவு போல இருக்கும் இடத்தில் மரக்கன்றுகளை நட்டு அவற்றைப் பராமரித்துவருகிறார்.

பரிசல்

“நீர்வழி விதை பரவல் இதன்மூலம் நடந்து, இன்னும் நூறு வருடங்களில் நானூறு கிலோமீட்டர் தூரத்தில் காவிரி கரையெங்கும் பல்லாயிரக்கணக்கான மரங்கள் வளர வாய்ப்பிருக்கு” என்கிறார் சட்டையணியாத சாமியப்பன். அவரின் முயற்சி கைத்தட்டும் விஷயமாக இருக்கிறது. இதுதவிர, அவர் எங்கு போனாலும் மடியில் கட்டிக்கொண்டு போகும் விதைகளைத் தூவுவது, நடைப்பயிற்சி செய்யும் இடங்களில் மூலிகைச் செடிகளை வளர்த்து, மனிதர்களின் ஆரோக்கியத்தைப் பேணுவது போன்ற முன்மாதிரி விஷயங்களை செய்துகொண்டிருக்கிறார். சமீபத்தில் கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் வந்த சாமியப்பனைச் சந்தித்தோம்.

சாமியப்பன்

"என் சொந்த ஊர் திருப்பூர் மாவட்டம் அவினாசி ஒன்றியத்தில் உள்ள வாரணாசிபாளையம். 1968-ம் ஆண்டிலேயே விவசாயத்துக்கு வந்துட்டேன். ஆரம்பத்துல நானும் ரசாயன உரங்களைப் போட்டுத்தான் விவசாயம் பண்ணினேன். அதன் பிறகு, இயற்கை விஞ்ஞானியான நம்மாழ்வாருடன் தொடர்பு கிடைச்சது. அதன்பின் முற்றிலுமா இயற்கை விவசாயத்துக்கு மாறிட்டேன். நான் மாறினா போதுமா, தமிழ்நாட்டு விவசாயிகள் மொத்தமா மாறணுமே, அதுக்காகத்தான் இயற்கையை வலியுறுத்தும் குறியீடாக சட்டை அணியாமல் இயற்கை முறையில் என்னை அடையாளப்படுத்த, 1996-ம் வருடம் அக்டோபர் 2, காந்தி ஜயந்தி தினத்திலிருந்து 'இடுப்பில் வேட்டி மட்டுமே கட்டுவது' என்று முடிவெடுத்தேன். அந்த வேட்டியும் கிழிஞ்சதுன்னா, அதை கிழிச்சு துண்டு போலப் பயன்படுத்திக்குவேன். வெறும் வேட்டியோடவே சென்னை அண்ணா பல்கலைக்கழக நிகழ்ச்சி, டெல்லியில் நிகழ்ச்சிகள், பல்வேறு டி.வி. நிகழ்ச்சிகள் என தமிழ்நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துக்கிட்டேன். சட்டையணியாத கோலத்தோடு நாடோடியாகப் பல இடங்களுக்குச் சென்று, இயற்கை விவசாயத்தைப் பத்தி வலியுறுத்திப் பேசிட்டு வர்றேன்.

சாமியப்பன்

இயற்கை விவசாயம் செய்றேன்னு சொல்லிட்டு சிலர், ஆயிரம் அடிக்கு கீழ பூமியில போர்போட்டு நீரை உறிஞ்சி விவசாயம் பண்றாங்க. அது இயற்கை விவசாயம் கிடையாது. இயற்கையா பொழியும் மழையை மலையடிவாரத்துல தேக்கி, காடுகள்ல பெய்யுற மழையைத் தேக்கி, அதைக்கொண்டு விவசாயம் செய்யறதுதான் இயற்கை மற்றும் பாரம்பர்ய விவசாயம். ஆனால், மனிதர்கள் தங்களின் சுயநலத்துக்காக மரங்களை வெட்டிக் குவிப்பதோடு, அவற்றுக்கு மாற்றாக மரக்கன்றுகளை நடுவதில்லை. பல நூறு வருடங்களா இயற்கையா விதையாக விழுந்து, செடியாகி, மரமாகி கிளை பரப்பி விருட்சமாக நிற்கும் மரங்களை, நொடியில் வெட்டித் தள்ளிட்டு மழை வேண்டி கழுதைகளுக்குத் திருமணம் பண்ணி வைக்கிறோம். மழை எப்படி பெய்யும்? அவ்வளவு ஏன் பழங்களை நாம தின்னுட்டு அதை முளைக்குற அளவுக்கு ஒரு பாங்கான இடத்திலகூட போடுறதில்லை. மரங்களை அழிச்சுட்டு, அதை உருவாக்க முயற்சிக்காம, எந்த சாமிக்கிட்டப் போய் மனு செஞ்சாலும், மழை கிடைக்காதுன்னு உணர்த்த விரும்பினேன். ஈரோடு மாவட்டம் காங்கேயம்பாளையத்தில் காவிரி ஆற்றுக்கு நடுவே இயற்கையா ஒரு மேடு அமைந்து, அதில் நட்டாற்றீஸ்வரர் கோயில் இருக்கும் இடம் எனக்கு தோதாப்பட்டது. அந்தக் கோயிலுக்குப் பின்புறமா காலியிடம் இருந்துச்சு. நீர்வழி விதைபரவல் நடக்க இயற்கை அமைச்சுக் கொடுத்த சிறப்பான இடமா அது எனக்குத் தோணுச்சு.

சாமியப்பன்

அந்தப் பகுதியில் மரம் வளர்ப்பில் ஆர்வம் உள்ள சிலரின் உதவியோடு, அந்த இடத்தில் நீர்வழி விதைபரவலுக்கு ஏற்ற மரவகைகளான 27 நட்சத்திர மரக்கன்றுகள், 12 வகையான ராசி மரங்கள், ஒன்பது வகையான நவகிரக மரங்களின் செடிகளை, கேரளாவில் இருந்து வாங்கி வந்து நட்டுள்ளோம். இன்னும் பத்து வருடங்களில் அவை அனைத்தும் மரங்களாகி, அதன் விதைகள் காவிரி நீர் மூலமாக பூம்புகார் வரை நானூறு கிலோமீட்டர் தொலைவுக்குப் பரவி, காவிரிக் கரை முழுக்க பல்லாயிரக்கணக்கான மரங்கள் பல்கிப் பெருகும் வாய்ப்பு ஏற்படும். அதன் பிறகு, காவிரியில் நீர் தருவதற்கு கர்நாடகம் காலை வாரினாலும், இந்த மரங்கள் மூலம் காவிரிப் படுகையில் பெய்யக்கூடிய மழைநீர் நமக்குக் கைகொடுக்கும். டெல்டா விவசாயி முப்போகம் விவசாயம் செய்வான். இன்னும் காவிரியில் இப்படி எங்கெல்லாம் இடமிருக்கிறதோ அங்கெல்லாம் மரக்கன்றுகளை நட இருக்கிறோம். ஆர்வமுள்ளவர்கள் எங்களோடு சேர்ந்து பயணிக்கலாம். 

சாமியப்பன்

தவிர, பல்வேறு ஊர்களுக்கு கூட்டங்களுக்குப் போகும்போது, மடியில் விதைகளைக் கட்டிக்கொண்டு போய், ஆங்காங்கே தூவி விடுவேன். இதுவும் விதை பரவல்தான். அதேபோல், இன்னைக்கு நடைப்பயிற்சி செய்பவர்கள் எட்டுநடை வாக்குன்னு வீட்டிலேயே எட்டு வடிவ நடைபாதையை அமைத்துப் பயிற்சி செய்றாங்க. அவசர உலகில் அவர்களுக்கு வெளியே சென்று வாக்கிங் போகக்கூட நேரம் இருப்பதில்லை. அதனால், அவர்கள் வீடுகளிலேயே வாக்கிங் செய்யும் இடங்களில் நித்திய கல்யாணி, துளசி, தும்பை, திருநீற்றுப்பச்சலை, வேப்பிலைன்னு மூலிகைச் செடிகளை வளர்க்கலாம். நித்திய கல்யாணியும், துளசியும் 24 மணி நேரமும் ஆக்சிஜனை வெளியிடக்கூடியவை. அதனால் உடலின் பிராணவாயு சீராகும். அந்த நடைபாதையில் சின்ன சைஸ் ஜல்லிக் கற்களைப் போட்டு, அவற்றின்மேல் நடந்தால், பாதத்தின் மூலம் அக்குபிரஷர் ஏற்பட்டு உடல் ஆரோக்கியம் சீராகும். 'மரம் வளர்ப்போம்...மரம் வளர்ப்போம்' என தெரிவித்துக் கொண்டு, அதை வெறும் வாசகங்களாக மட்டுமே வைத்திருந்தால் போதாது. 'விதை விதைப்போம்' என்று மாற்றணும். அப்போதுதான், பழைய தமிழகமாகி பசுமைக்கு மாறும். தேவையான அளவு மழை பெய்யும். இல்லைன்னா, இப்போது இருக்கிற சோலைகளும் வருங்காலத்தில் சகாரா பாலைவனங்களாக மாறும்" என்று எச்சரித்து முடித்தார்.

'மனிதனுக்கு எல்லாம் மரம்தான். ஆனால், அதை மறந்தான்' என்ற வைரமுத்து கவிதையைப் பொய்யாக்குங்கள் நண்பர்களே... ஊர் கூடி மரம் வளர்ப்போம், வாருங்கள்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!