வெளியிடப்பட்ட நேரம்: 11:12 (28/11/2017)

கடைசி தொடர்பு:11:16 (28/11/2017)

6 லட்சம் வியூஸைக் கடந்த அரசுப் பள்ளி மாணவனின் கானா பாடல்! #CelebrateGovtSchool

அரசுப் பள்ளி

மாணவர்களுக்குக் கல்வியைப் போதிப்பதைப் போலவே அவர்களிடம் இருக்கும் தனித்திறன்களை அடையாளம் கண்டு, அதை மெருகேற்றவும் வெளிஉலகுக்குக் கொண்டு செல்ல வேண்டியதும் ஓர் ஆசிரியரின் பணிதான். அதைச் சிறப்பாகச் செய்துவருகிறார் அரசுப் பள்ளி ஆசிரியை யுவராணி. 

காஞ்சிபுரம் மாவட்டம், ஶ்ரீபெரும்புதூர் அருகே இருக்கும் மாத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியின் கணித ஆசிரியை யுவராணி. இந்தப் பள்ளியில் படிக்கும் பெரும்பான்மையான மாணவர்கள் எளிமையான பொருளாதாரப் பின்னணி கொண்ட குடும்பங்களிலிருந்து வருபவர்கள். அதனால், அவர்களின் கல்விமீது தனித்த அக்கறையுடன் பணியாற்றுகிறார் யுவராணி. கணக்கு என்றாலே வெகு தூரம் ஓடும் மாணவர்களையும் ஈர்க்கும் விதத்தில் பாடங்களை நடத்திவருகிறார். அதுகுறித்து, அவரோடு பேசினோம்.

அரசுப் பள்ளி

 "பலரும் நினைப்பதுபோலக் கணக்கு என்பது கசக்கக்கூடிய பாடம் அல்ல. பாடம் நடத்துபவர் சுவையாகவும் கவனிப்பவர் கொஞ்சம் ஆர்வத்துடன் இருந்தாலே போதும். கணக்குக் கற்கண்டாய் இனிக்கும். மாணவர்களுக்குக் கணக்குப் பாடம் பிடித்ததாக மாற்ற, தினமும் புதிர் போட்டி நடத்துகிறேன். காலையில் பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு நோட்டீஸ் போர்ட்டில் கணக்குப் புதிர் தயாராய் இருக்கும். அதைச் சரியாக யார் பூர்த்தி செய்கிறாரோ அவருக்குப் பரிசுகளை அளித்து வருகிறேன். இதைக் கேள்விப்பட்ட என்னுடைய முன்னாள் மாணவர்கள் இந்தப் பரிசுக்கு உரிய தொகையைத் தாங்கள் தருவதாகச் சொன்னார்கள். அது எனக்கு ரொம்பவே மகிழ்ச்சியான விஷயமாக இருந்தாலும், அவர்களிடம் பணமாகக் கொடுக்காமல் பரிசாக வாங்கித் தரச் சொன்னேன். அவர்களும் ஜியோமெட்ரிக் பாக்ஸ்கள் வாங்கித் தந்தார்கள். 

வகுப்பில் பாடம் நடத்துவதைச் சுவாரஸ்யப்படுத்த, கணிதத் துறையில் மேதைகளாக விளங்கியவர்களின் வாழ்க்கை வரலாற்றைச் சொல்வதை வழக்கமாக்கிக் கொண்டேன்.  மேலும்,  நான் சொல்லப்போகும் கணித மேதையைப் போல வேடமிட்டு வந்து பாடம் நடத்துவேன். இது மாணவர்களுக்குப் புதிய உற்சாகத்தை அளித்தது. இவை போல ஏராளமான வழிமுறைகளைக் கையாண்டு கணக்குப் பாடத்தை அவர்களின் விருப்பப்பாடமாக்கினேன். அதன்பின் பாடங்களை நடத்தும்போது மிக எளிதாகப் புரிந்துகொண்டார்கள். எனது முயற்சிக்கு எங்கள் பள்ளியின் சக ஆசிரியர்களுக்கும் இதில் முக்கியப் பங்கு உண்டு" என்று மகிழ்ச்சியோடு தெரிவித்தார். கானா பாடல் பாடிய மாணவரைப் பற்றிக் கேட்டோம்.

அரசுப் பள்ளி

“ஒவ்வொரு மாணவரும் தனித்துவமானவர்கள். திறமையில்லாத மாணவர்களே இல்லை என்றே நான் சொல்வேன். ஒரு நாள் பள்ளி  இடைவேளையின்போது, வகுப்பறையைக் கடக்கும்போது எட்டாம் வகுப்பு படிக்கும் துளசிராமன் பாடிக்கொண்டிருப்பதைக் கேட்டேன். மிக அழகாக, தெளிவாகப் பாடிக்கொண்டிருந்தான். நான் வகுப்புக்கு உள்ளே வந்ததும் திட்டப் போகிறேனோ என்று பயந்து நின்றான். அவனைப் பாராட்டி விட்டு, அன்று மாலை பள்ளிநேரம் முடிந்ததும் அந்தப் பாடலைப் பாடச் சொன்னேன். அவனின் நண்பர்கள் தாளம்போட்டனர். அவற்றை நான் அப்படியே என்னுடைய செல்போனில் படம் பிடித்து இணையத்தில் பதிவிட்டேன். அவ்வளவுதான் நான் செய்தது. அதைக் கேட்டவர்கள் அந்தப் பாடலை ஷேர் செய்து இப்போது ஆறு லட்சம் வியூஸைக் கடந்துள்ளது.

துளசிராமன் கானா பாடலை உணர்வுபூர்வமாகப் பாடுவதில் எல்லோரையும் ஈர்த்துவிட்டான். இந்தப் பாடலைக் கேட்ட, ராஜ்குமார் எனும் குறும்பட இயக்குநர், தனது அடுத்தக் குறும்படத்தில் துளசிராமனைப் பாட வைக்கப்போவதாக வாக்களித்தார். அது துளசிராமனுக்கு மட்டுமல்ல, எங்கள் பள்ளிக்கே பெரிய மகிழ்ச்சியைத் தந்துள்ளது. துளசிராமனின் அம்மாவும் அப்பாவும் பள்ளிக்கே வந்து நன்றி சொல்லிவிட்டுச் சென்றனர். அவன் பாடுவதிலும் மட்டுமல்ல நன்றாகப் படிக்கவும் செய்வான். அதனால், துளசிராமன் படிப்போடு, தனித்திறமையை வளர்த்துக்கொள்ள எங்களால் முடிந்த உதவிகளைத் தொடர்ந்து செய்வோம்" என்று நம்பிக்கை வார்த்தைகளோடு முடிக்கிறார் ஆசிரியை யுவராணி. 

 

 

அரசுப் பள்ளி மாணவர்களின் முன்னேற்றத்துக்குப் பணியாற்றுகிற யுவராணி போன்ற ஆசிரியர்களின் முயற்சிகள் வெல்லட்டும்.