வெளியிடப்பட்ட நேரம்: 12:07 (27/11/2017)

கடைசி தொடர்பு:12:07 (27/11/2017)

‘ஓ.பன்னீர்செல்வத்துக்கு திருப்பதி லட்டு கொடுத்த தீபக்!’ - ரகசிய சந்திப்பின் பின்னணி

ஓ.பன்னீர்செல்வம்

ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை ரகசியமாகச் சந்தித்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. அப்போது, ஓ.பன்னீர்செல்வத்துக்கு திருப்பதி லட்டுவை தீபக், கொடுத்ததாக உள்விவர வட்டாரங்கள் தெரிவித்தன.

சசிகலா குடும்பத்தினர் மற்றும் அவர்களுக்கு நெருக்கமானவர்கள் வீடு, அலுவலகங்கள், நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அதன்பிறகு சசிகலா குடும்பத்தினருக்கு பலவகையில் சிக்கல் எழுந்துள்ளது. இந்தச் சூழ்நிலையில் நீண்ட இழுபறிக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் அணியினருக்கு இரட்டை இலைச் சின்னத்தைத் தேர்தல் ஆணையம் ஒதுக்கியது. இதுவும் சசிகலா அணியினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தற்போது, சசிகலா அணியில் இருப்பவர்கள் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் அணியில் சேர ஆர்வம் காட்டிவருவதாகச் சொல்லப்படுகிறது. 

சசிகலா குடும்பத்தின் சொல்படி கேட்டுவந்த ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக், சமீபகாலமாக சசிகலாவுக்கு எதிராகப் பேசத் தொடங்கியுள்ளார். சசிகலாவின் சொத்துகள் வெளிநாடுகளில் இருப்பதாகப் பகிரங்கமாகக் குற்றம்சாட்டினார். தீபக்கின் இந்த அதிரடி தாக்குதலால் சசிகலா குடும்பத்தினருக்கு பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தீபா மட்டுமே சசிகலா குடும்பத்தினருக்கு எதிராகப் பேசிவந்தார். தற்போது, அவருடன் சேர்ந்து தீபக், பேசத் தொடங்கியிருப்பதால் அதுதொடர்பான ஆலோசனையில் சசிகலா குடும்பத்தினர் ஈடுபட்டுள்ளனர்.

தீபக்

இந்தநிலையில் சில நாள்களுக்கு முன்பு முதல்வர் எடப்பாடி பழனிசாமியைச் சந்திக்க தீபக் அனுமதி கேட்டார். ஆனால், முதல்வர் தரப்பிலிருந்து கிரீன் சிக்னல் கிடைக்கவில்லை. இதனால், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தைச் சந்திக்க தீபக் முயற்சி செய்தார். அதற்கான சிக்னல் கிடைத்ததும் ஓ.பன்னீர்செல்வத்தை தீபக் சந்தித்ததாக உள்விவர வட்டாரங்கள் தெரிவித்தன.

இதுகுறித்து நம்மிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வத்துக்கு நெருக்கமானவர்கள், "ஓ.பன்னீர்செல்வத்தை தீபக் சந்திக்க வந்தார். அப்போது அவர் கையில் லட்டு கொண்டு வந்தார். இரட்டை இலைச் சின்னம் கிடைக்க வேண்டும் என்று திருப்பதி ஏழுமலையானிடம் வேண்டிக்கொண்டதாகவும், சின்னம் கிடைத்ததும் தங்களைச் சந்திக்க வந்ததாகவும் தீபக் தெரிவித்துள்ளார். லட்டுவை வாங்கிய ஓ.பன்னீர்செல்வமும் தீபக்கும் சிறிதுநேரம் பேசினர். அதன்பிறகு தீபக், புறப்பட்டுச் சென்றுவிட்டார்" என்றனர்.

இதையடுத்து தீபக், அ.தி.மு.க ஜெயலலிதா அணியின் பொதுச் செயலாளர் பசும்பொன்பாண்டியனிடம் செல்போனில் பேசியுள்ளதாகத் தகவல் கிடைத்தது. அதுதொடர்பாகப் பசும்பொன்பாண்டியனிடம் பேசினோம். "கடந்த சில தினங்களுக்கு முன்பு தீபக் என்னிடம் பேசினார். அப்போது, அவருடைய சகோதரி தீபாவின் சுயரூபத்தை நீங்கள் தெரிந்துகொண்டீர்கள் என்று உருக்கமாகத் தீபக் கூறினார். ஆர்.கே.நகர் தேர்தலில் நீங்கள் எனக்கு வாய்ப்பளித்தால் போட்டியிடுவதாகவும் தெரிவித்தார். அதற்கு எங்கள் அணி சார்பில் அவைத்தலைவர் எபேசியர் போட்டியிடுவதாகத் தெரிவித்தேன். அப்போது, பா.ஜ.க.விலிருந்து எனக்கு அழைப்பு வந்தாகவும் குறிப்பிட்டார். அதன்பிறகு சென்னை வந்தால் உங்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வதாகத் தெரிவித்த தீபக், இணைப்பைத் துண்டித்துவிட்டார்" என்றார். 

பா.ஜ.க நிர்வாகி ஒருவர் கூறுகையில், 'அவரை அழைக்கவில்லை' என்று சுருக்கமாகத் தெரிவித்தார். 

இந்தத் தகவல் தொடர்பாகத் தீபக்கை தொடர்புகொள்ள முயன்றோம். ஆனால், அவரது செல்போன் நம்பர் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளது. அவரது கருத்துகளைத் தெரிவித்தால் பரிசீலனைக்குப் பிறகு வெளியிடத் தயாராக உள்ளோம்.


டிரெண்டிங் @ விகடன்