'பிற மொழி மாணவர்கள் தமிழ் படிக்கத் தேவையில்லையாம்'- அரசுக்கு எதிராக சீறும் ராமதாஸ் | ramadoss Slams TN Government

வெளியிடப்பட்ட நேரம்: 12:15 (27/11/2017)

கடைசி தொடர்பு:12:15 (27/11/2017)

'பிற மொழி மாணவர்கள் தமிழ் படிக்கத் தேவையில்லையாம்'- அரசுக்கு எதிராக சீறும் ராமதாஸ்

ramadoss

"தமிழ் கட்டாயப்பாடத்திலிருந்து சில மொழிப் பிரிவினருக்கு மட்டும் விலக்களித்து பிறப்பிக்கப்பட்டுள்ள அரசாணையை தமிழக அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும்" என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பில் தமிழ் கட்டாயப் பாடம் என்பதிலிருந்து பிற மொழி பேசும் மாணவ, மாணவியருக்கு விலக்களித்து தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை அரசாணை பிறப்பித்திருக்கிறது. இதன்மூலம் தமிழ்நாட்டில் தமிழ் படிக்காமலேயே முனைவர் பட்டம்கூட பெற முடியும் என்ற நிலை மீண்டும் உருவாகியிருக்கிறது. தமிழுக்கு தமிழக அரசே துரோகம் செய்திருப்பது கண்டிக்கத்தக்கது.

தமிழ்நாட்டில் மெட்ரிகுலேஷன் கல்வி வாரியத்தின் கீழ் ஆங்கில வழிப் பள்ளிகள் ஆயிரக்கணக்கில் தொடங்கப்பட்ட பின்னர் அப்பள்ளிகளில் தமிழ்ப் பாடம் நீக்கப்பட்டது. அதுமட்டுமின்றி, தமிழ்ப் பாடம் இல்லாத பள்ளிகளில் பயில்வதுதான் பெருமை என்ற மாயத்தோற்றத்தை தனியார் பள்ளிகள் ஏற்படுத்தின. இதனால், தமிழ்நாட்டில் தமிழை ஒரு பாடமாக படிக்காமலேயே சாதாரணப் பட்டம் மட்டுமின்றி முனைவர் பட்டம்கூட வாங்கிவிட முடியும் என்ற நிலை ஏற்பட்டது. இந்த நிலையை மாற்ற வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தியதைத் தொடர்ந்து தமிழைக் கட்டாயப் பாடமாக்குவதற்காக ‘தமிழ்நாடு தமிழ் கற்றல் (தமிழ் மொழிப் பாடத்தைக் கட்டாயமாக்குதல்) சட்டம் -2006’ என்ற சட்டம் கடந்த 2006-ம் ஆண்டு அப்போதைய தி.மு.க. ஆட்சியில் கொண்டுவந்து நிறைவேற்றப்பட்டது.

அச்சட்டத்தின்படி, 2006-07 கல்வியாண்டில் ஒன்றாம் வகுப்பில் தமிழ் கட்டாயப் பாடமாக்கப்பட்டது. அதன்பின் ஆண்டுக்கு ஒரு வகுப்பு வீதம் நீட்டிக்கப்பட்டு வந்த அச்சட்டம் 2015-16-ம் ஆண்டில் பத்தாம் வகுப்புக்கும் நீட்டிக்கப்பட்டது. அதன்படி 2015-16-ம் ஆண்டிலிருந்து பத்தாம் வகுப்பில் தமிழ் மட்டும்தான் முதல் பாடமாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் தமிழகத்தில் தமிழைப் படிக்காமல் உயர்கல்வி கற்க முடியாது என்ற நிலை ஏற்பட்டது. ஆனால், 2015-16-ம் கல்வியாண்டு, 2016-17-ம் கல்வியாண்டு ஆகிய இரு ஆண்டுகளும் சில தனியார் பள்ளிகளின் மாணவர்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து தமிழ் கட்டாயப்பாடத் தேர்வு எழுதுவதிலிருந்து விலக்கு பெற்றனர். ஆனால், நடப்பாண்டில் மாணவர்கள் நீதிமன்றத்துக்குச் செல்வதற்கு முன்பே, சில தனியார் பள்ளிகளின் கோரிக்கையை ஏற்று தமிழ் கட்டாயப் பாடத்திலிருந்து தமிழ்நாடு அரசு விலக்கு அளித்திருக்கிறது. பல ஆண்டுகள் போராடி தமிழ் கட்டாயப் பாடமாக்கப்பட்ட நிலையில், அதிலிருந்து ஒரு பிரிவினருக்கு  விலக்களித்ததன் மூலம் தமிழ்நாட்டில் தமிழுக்கு மிகப்பெரிய துரோகத்தை பினாமி அரசு செய்திருக்கிறது.

தமிழ்நாட்டில் தமிழ் கட்டாயப்பாடம் என்பது யாருடைய உரிமைகளையும் பறிக்கும் செயலல்ல. தமிழைக் கட்டாயப்பாடமாக்கி தமிழக அரசு நிறைவேற்றிய சட்டத்துக்கு எதிராக மலையாள மொழிச் சிறுபான்மை அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தபோது தமிழ் கட்டாயப் பாடச் சட்டத்தை ரத்துசெய்ய முடியாது என்று நீதிபதிகள் கூறிவிட்டனர். அந்த வழக்கில் 18.2.2008 அன்று தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம்,‘‘அரசியல் சட்டத்தின் 29 மற்றும் 30-வது பிரிவுகளின்படி சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ள எந்த உரிமையையும் தமிழ் கட்டாயப் பாட சட்டம் பறிக்கவில்லை. உள்ளூர் மொழியை கற்றுக்கொள்வது குழந்தைகளின் நலனுக்கு மிகவும் நல்லது. மாறாக உள்ளூர் மொழியை கற்றுக்கொள்ள மறுப்பது நாட்டின் ஒற்றுமைக்கு நல்லதல்ல’’என்று கூறி கண்டனம் தெரிவித்தது.

அதுமட்டுமின்றி, மொழிச் சிறுபான்மையினரை பாதிக்கும் வகையில் முதல் நாள் சட்டம் இயற்றி, அதற்கு அடுத்த நாளே அதை செயல்படுத்தும்படி தமிழக அரசு கட்டாயப்படுத்தவில்லை. 2006-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சட்டம் ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு வகுப்புக்கு நீட்டிக்கப்பட்டு பத்தாவது  ஆண்டில்தான் பத்தாம் வகுப்புக்கு நடைமுறைப்படுத்தப்பட்டது. முந்தைய 9 ஆண்டுகளும் தங்களது பள்ளி மாணவர்களுக்கு தமிழ் பாடத்தைக் கற்றுக் கொடுத்ததாக அரசிடம் சான்றிதழ் வழங்கிய தனியார் பள்ளிகள், பத்தாவது ஆண்டில் மட்டும் சரியான கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் தங்கள் குழந்தைகளுக்கு தமிழ் கற்பிக்க முடியவில்லை என்று கூறி விலக்கு கோருவது எவ்வகையில் நியாயம்?

ஒருபுறம் மத்திய அரசு சம்பந்தமே இல்லாமல் தமிழகத்துக்குள் நுழைந்து இந்தியை திணிக்கத் துடிக்கிறது. இத்தகைய முயற்சிகளில் இருந்து தமிழைக் காக்க வேண்டிய தமிழக அரசு, அதைச் செய்யாமல் தமிழகத்தில் பிற மொழி மாணவர்கள் தமிழ் படிக்கத் தேவையில்லை என்று தாராளம் காட்டுவது நியாயமல்ல. தமிழகத்தில் தமிழைப் படிக்காமல் பட்டம் பெற முடியாது என்ற நிலை உருவாக்கப்பட வேண்டும். எனவே, தமிழ் கட்டாயப்பாடத்திலிருந்து சில மொழிப் பிரிவினருக்கு மட்டும் விலக்களித்து பிறப்பிக்கப்பட்டுள்ள அரசாணையை அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.