அதிகாலையிலேயே களமிறங்கிய கலெக்டர்! திகைத்துப்போன மக்கள்

இன்று அதிகாலை, புதுக்கோட்டை நகரில் பரபரப்பு பற்றிக்கொண்டது. காரணம், மாவட்ட ஆட்சியர் கணேஷ்.
 தலைமையில் களமிறங்கிய அதிகாரிகள் குழு, அதிரடியாக நகரின் முக்கிய வீதிகளில் டெங்கு கொசு உற்பத்தி ஒழிப்புப் பணியில் மிகத் தீவிரமாகச் செயல்படத் தொடங்கியது. பனிமூட்டம்போல இருந்த கொசு ஒழிப்புப் புகைக்கு நடுவில் கலெக்டரும் மற்ற அதிகாரிகளும் இருப்பதைப் பார்த்த புதுகை நகர் மக்கள், "என்னாச்சு நம்ம கலெக்டருக்கும் அதிகாரிகளுக்கும்... அதிகாலையிலே வந்து அதிரடி பண்றாங்களே" என்று ஆச்சர்யமாகப் பார்த்தார்கள். ஆனால் கலெக்டரோ, உடன் வந்திருந்த அதிகாரிகளோ, எதைப் பற்றியும் கவலைப்படாமல் கடமையே கண்ணாக இருந்தனர்.

மாவட்ட ஆட்சியரே நேரடியாக களத்தில் இறங்கி, கொசு மருந்துப் புகை அடிக்கும் பணிகளை மேற்கொள்ளக் காரணமாக இருந்தது, ஒரு சிறுவன்.

"புதுக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட தைலா நகரில், அருண் என்கிற சிறுவனுக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது தெரியவந்துள்ளது. அதைத் தொடர்ந்து துணை ஆட்சியர் சரயு, மாவட்ட வருவாய் அதிகாரி ராமசாமி, நகராட்சி ஆணையர் ஜீவா சுப்பிரமணியன், நகராட்சி சுகாதார அலுவலர் யாழினி ஆகியோர் அடங்கிய குழுவுடன் மாவட்ட ஆட்சியரும் களத்தில் இறங்கிவிட்டார்" என்கிறார்கள்.
ஆனால் அதிகாரிகள் தரப்பிலோ, "கலெக்டர் இந்தப் பணியில் இரண்டு மாதங்களாகவே ஈடுபட்டுவருகிறார். புதிதாக இன்று தீவிரம் காட்டுவதாகச் சொல்லப்படுவதில் உண்மை இல்லை" என்கின்றனர்.

எது எப்படியோ, கலெக்டரின் இந்த நடவடிக்கை, நகர் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!