வெளியிடப்பட்ட நேரம்: 15:15 (27/11/2017)

கடைசி தொடர்பு:15:32 (27/11/2017)

'10 கி.மீ தூரம் நடக்க வேண்டியுள்ளது' - மதுக்கடையை மூட எதிர்ப்புத் தெரிவித்த மக்கள்

'மதுக்கடையை மூடாதீர்கள்' என ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க வந்த கிராமத்தினரைக் கண்ட அதிகாரிகள் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.

தமிழகம் முழுவதும் மதுவுக்கு எதிராகவும், அரசு மதுபானக் கடைகளை மூட வலியுறுத்தியும் தினம் தினம் ஏராளமான போராட்டங்கள் நடந்துவருகின்றன. இந்தப் போராட்டங்களின் விளைவாக, தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாவும் மதுக்கடைகள் திறக்கும் நேரத்தைக் குறைத்தும், படிப்படியாக மதுக்கடைகளின் எண்ணிக்கையைக் குறைப்போம் எனவும் கூறியிருந்தார். இந்நிலையில், நீதிமன்ற உத்தரவினால் நெடுஞ்சாலை ஓரங்களில் இருந்த நூற்றுக்கணக்கான மதுக்கடைகள், தமிழக அரசால் மூடப்பட்டன. இதனால் மூடப்பட்ட மதுபானக் கடைகளைக் கிராமப் பகுதிகளுக்கு அதிகாரிகள் இடமாற்றம் செய்துவருகின்றனர். இதற்கு, கிராம மக்கள் இடையே கடும் எதிர்ப்புக் கிளம்பிவரும் நிலையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த சிலர், தங்கள் கிராமத்தில் உள்ள மதுக்கடையை மூடக்கூடாது என மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்.

மதுக்கடையை மூட எதிர்ப்பு தெரிவித்து ராமநாதபுரம் ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்

ராமநாதபுரம் மாவட்டம் நயினார்கோயில் ஒன்றியத்துக்கு உட்பட்ட அரசடிவண்டல் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராம பொதுமக்கள் பெயரில் கொடுக்கப்பட்ட அந்த மனுவில், அக்கிரமேசி கிராமத்தில் அரசு மதுபானக்கடை இயங்கிவருகிறது. சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த எங்களுக்கு, மது அருந்த இந்தக் கடைதான் வசதியாக உள்ளது. இந்தக் கடையைவிட்டால் 10 கி.மீ  தூரத்தில் உள்ள ராமநாதபுரத்துக்கோ நயினார்கோயில் பகுதிக்கோ சென்று மது அருந்த வேண்டும். எனவே, எங்கள் கிராமத்தில் உள்ள கடையை அகற்ற நடவடிக்கை எடுக்கக் கூடாது'' என்று கூறியுள்ளனர்.

மதுக்கடைக்கு ஆதரவாக வந்த இந்த மனுவைக்கண்டு, குறை தீர்ப்பு நாள் கூட்டத்தில் பங்கேற்ற அதிகாரிகளும் பொதுமக்களும் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.