கண்டுகொள்ளாத எம்.எல்.ஏ-வும் அதிகாரியும்! - கலெக்டர் அலுவலகத்தில் பொங்கிய மக்கள் | Women gathered in tiruppur colloctarate to protest for Water scarcity

வெளியிடப்பட்ட நேரம்: 16:05 (27/11/2017)

கடைசி தொடர்பு:16:05 (27/11/2017)

கண்டுகொள்ளாத எம்.எல்.ஏ-வும் அதிகாரியும்! - கலெக்டர் அலுவலகத்தில் பொங்கிய மக்கள்

திருப்பூர் மாவட்டம் கரைப்புதூர் ஊராட்சியைச் சேர்ந்த பொன்நகர் பகுதி மக்கள் இன்று குடிநீர் பிரச்னையைத் தீர்த்து வைக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். அவர்களைக் காவல்துறையினர் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

காலிக் குடங்களுடன் மாவட்ட ஆட்சியரகத்துக்கு வந்த பொன்நகர் பகுதி மக்களிடம் பேசியபோது, ''எங்கள் பகுதியில் மொத்தம் 1,500 குடும்பங்கள் இருக்கின்றன. ஆனால், நாங்கள் உயிர் வாழ்வதற்கு முக்கிய அடிப்படைத் தேவையான குடிநீர் எங்களுக்கு மாதம் ஒருமுறை, அதுவும் ஒரு மணி நேரம் மட்டுமே விநியோகிக்கப்படுகிறது. இது குறித்து அதிகாரிகள் இடத்திலும் எங்கள் தொகுதி எம்.எல்.ஏ-விடத்திலும் பல்வேறு முறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, தொடர்ந்து நிலவிவரும் இந்தக் குடிநீர் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்க மாவட்ட ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி ஆட்சியரிடம் மனு கொடுக்க வந்தோம்'' என்றனர்.