கலெக்டர் அலுவலகத்துக்கு வந்த வயதான தம்பதியை மிரளவைத்த புதுக்கோட்டை போலீஸ்!

"நான் பஸ்ஸ்டாண்ட் விட்டு இறங்கி, அங்கே அம்மா தண்ணீர் பாட்டில் வாங்கிட்டு நேரா இங்கே வர்றேன். அந்தப் பாட்டிலைப்பிடுங்கி, உள்ளே தண்ணீர் இருக்கா இல்லே மண்ணெண்ணெய் இருக்கானு செக் பண்றாங்க. இதெல்லாம் ஓவரா இருக்குங்க" என்று புலம்பியபடியே குறைதீர்ப்பு கூட்டத்துக்குச் சென்றார்கள் பொது மக்கள். இந்தப் புது கூத்து அரங்கேறியிருப்பது, புதுக்கோட்டைஆட்சியர் அலுவலகத்தில்தான்.

இன்று நடைபெற்ற மக்கள் குறைகேட்கும் கூட்டத்துக்கு வாகனங்களிலும் நடந்தும் வந்த மக்களை வழிமறித்த போலீஸார், அவர்கள் கொண்டு வந்த குடிநீர் பாட்டில்களைத் திறந்து நுகர்ந்து உள்ளே இருப்பது குடிநீரா மண்ணெண்ணெயா என்று பரிசோதனை செய்தார்கள். அதன் பிறகே, கூட்டம் நடக்கும் இடத்துக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டார்கள்.

கடந்த மாதம் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்,கந்து வட்டிக்கொடுமை தாங்க முடியாமல் ஒரு குடும்பமே தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டது. தன் இரண்டு பிள்ளைகள், மனைவி மீது இசக்கிமுத்து என்பவர் மண்ணெண்ணெயை ஊற்றி, தீ வைத்துவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்டார். தமிழகத்தையே உலுக்கிய இந்தச் சம்பவத்தில், இசக்கிமுத்து, தண்ணீர் பாட்டிலில்தான் மண்ணெண்ணெயை ஊற்றிக் கொண்டு வந்திருந்தார். இந்தச் சம்பவத்தின் எதிரொலியாகப் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், இப்போது இந்தப் பரிசோதனையைக் காவல்துறை நடத்திவருகிறது.

பரிசோதனையில் ஈடுபட்டிருந்த குமார் என்ற காவலர் நம்மிடம், "திருநெல்வேலி சம்பவம்போல் இங்கு நடந்துவிடக் கூடாது என்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தச் சோதனையை நடத்த உயர் அதிகாரிகளால் எங்களுக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது. அதைத்தான் நாங்கள் செய்துகொண்டிருக்கிறோம்' என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!