"எங்களுக்குப் பணி நிரந்தரம்தான் தேவை!" - செவிலியர்கள் கோரிக்கை!

செவிலியர்கள் போராட்டம்

ருத்துவர்களுக்கு அடுத்ததாக மருத்துவமனையில் இருக்கும் நோயாளிகளுக்கு உறுதுணையாகவும், உதவிக்கரமாகவும் இருப்பவர்கள் செவிலியர்கள். அவர்கள், பிறந்த குழந்தைகள்முதல் இறக்கும் நிலையில் உள்ள நோயாளிகள்வரை அனைவரையும் கண்காணித்து வருகிறார்கள். இப்படித் தினந்தோறும் சேவை மனப்பான்மையுடன் பணிபுரியும் அவர்கள் இப்போது தங்களுடைய பணி நிரந்தரத்துகாகப் போராட்டம் நடத்திவருகிறார்கள்.

சென்னை தேனாம்பேட்டையில் இருக்கும் டி.எம்.எஸ் வளாகத்தில் 3,000-க்கும் மேற்பட்ட செவிலியர்கள், 'தங்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்' எனக் கோரி போராட்டம் நடத்தி வருகிறார்கள். வளாகத்தில் போராட்டம் தொடங்கியவர்கள், திடீரென தேனாம்பேட்டை சாலையை மறித்துப் போராடத் தொடங்கினர். அவர்களைத் தடுக்கும்விதமாக அனைத்துச் செவிலியர்களையும் வளாகத்துக்குள் புகுத்தி, போலீஸ் பாதுகாப்பு அளித்துள்ளது. வாரத்தின் முதல் நாளான இன்று சாலை மறியலில் ஈடுபட்டது பொதுமக்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. 

மருத்துவப் பிரிவு ஆணையத்தின்படி 2015-ம் ஆண்டு 9,000-க்கும் மேற்பட்டோர் பணியமர்த்தப்பட்டனர். இரண்டு ஆண்டுகள் முடிந்த பிறகும் இன்னும் தங்களுக்குப் பணி நிரந்தரம் வழங்கப்படவில்லை என்பது அவர்களது கோரிக்கையாக உள்ளது. மேலும், அவர்களுக்கு 7,500 ரூபாய் மட்டுமே மாதச் சம்பளமாக வழங்கப்படுகிறது. போராட்டத்தில் ஈடுபட்டுவரும் சுதாகர் என்பவரைத் தொடர்புகொண்டு பேசினோம், "அரசாணை 191, பொதுப்பணித் துறை அ-பிரிவின்படி 01.02.1962 அன்று, அந்த ஆணையை அமல்படுத்திய தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வாணையம், அதன்மூலம்  9,000-க்கும் மேற்பட்ட செவிலியர்களைப் பணியமர்த்தியது. அதன்படி, பணியமர்த்தப்பட்ட எங்களை இன்றுவரை பணி நிரந்தரம் செய்யாமல் வைத்துள்ளது. அதற்காகத்தான் இப்போது போராட்டம் நடத்துகிறோம். இங்கு, நாங்கள் 3,000-க்கும் அதிகமானோர் போராட்டம் நடத்திவருகிறோம். செவிலியர்களுகான தனி இயக்குநரகம் அமைக்க வேண்டும். மீடியா, பிரஸ் என்று யாரையும் உள்ளே அனுமதிக்க மறுக்கிறார்கள். நாங்கள் கலைந்து செல்லவில்லை என்றால், 'மெமோ' கொடுப்பதாக அறிவித்துள்ளனர். ஆனால், எங்களுக்குத் தீர்வு கிடைக்கும்வரை தொடர்ந்து போராட்டம் நடத்துவோம்" என்றார்.

டி.எம்.எஸ் வளாகத்தில் போராட்டம்

இதேபோல், கடந்த 6-ம் தேதி பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவில் பணியாற்றிவரும் செவிலியர்களும் டி.எம்.எஸ் வளாகத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். அதில், ''எங்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும், இதுவரை தாங்கள் பணியாற்றிவந்த பணி நாள்களை அரசாங்கத் தொகுப்பூதிய செவிலியர் நாள்களாகக் கொண்டு வரவேண்டும்'' எனக் கோரிக்கைகள் வைத்துப் போராட்டம் நடத்தினர். அவர்கள், 2010-ம் ஆண்டு தேசிய ஊரகச் சுகாதாரத் திட்டத்தில் பணியமர்த்தப்பட்டனர். அப்போது அவர்களிடம் பேசியபோது, " நாங்கள் நர்சிங் டிப்ளோமா படித்தவர்கள். 'ஏகம்’ (EKAM) என்ற அமைப்பு மூலமாக 2010-ம் ஆண்டு, அரசு மருத்துவமனைகளில் ஒப்பந்த அடிப்படையில், தமிழக அரசு எங்களைப் பணியமர்த்தியது. நாங்கள், அரசு மருத்துவமனைகளில், பச்சிளம் குழந்தைகளுக்கான சிறப்பு  மருத்துவ மையங்களிலும் பச்சிளம் குழந்தைகளுக்கான பராமரிப்பு மையங்களிலும் பணியாற்றிவருகிறோம். ஈடுபாடு மிகுந்த எங்கள் பணியால், 2010 - 2017 காலகட்டத்தில், பச்சிளம் குழந்தைகளின் இறப்புச் சதவிகிதம் 30-லிருந்து 12-ஆகக் குறைந்தது. இதனால், குழந்தைகள் இறப்பு விகிதம் குறைவாக இருக்கும் மாநிலங்களின் பட்டியலில், முதன்மை மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்ந்தது. ஆனால், அர்ப்பணிப்புடன் உழைக்கிற எங்களுக்கு, மாத ஊதியம் ரூபாய் 4,500 - 7,500  மட்டுமே தருகிறார்கள். எங்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டுமென்று ஏற்கெனவே இரண்டு முறை போராட்டம் நடத்தியுள்ளோம். எந்த நடவடிக்கையும் எடுக்காததால், இப்போது மீண்டும் போராட்டம் நடத்துகிறோம். எங்களுக்கான சிறப்புத் தேர்வை நடத்தி எங்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். 'எங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும்' என்று எப்போது அதிகாரிகள் எழுத்துமூலமாக உறுதியளிக்கிறார்களோ, அதுவரை எங்கள் போராட்டம் தொடரும்" என்று கூறியிருந்தனர். 

இப்போது, அனைத்துப் பிரிவு செவிலியர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மழைக்காலம் என்பதாலும், நோய்கள் பரவும் சமயம் என்பதாலும் மருத்துவமனைகளுக்கு மக்கள் கூட்டம் அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. இந்த நேரத்தில் செவிலியர்கள் போராட்டம் நடத்துவதால் கிராமப்புற மக்களுக்குப் பாதுகாப்பு என்பது மிகவும் அரிதாகவே இருக்கிறது. ஆகவே, மக்கள் உயிர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் செவிலியர்களின் சேவைகருதி அரசு விரைவில் நடவடிக்கையை எடுக்கவேண்டும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!