மருத்துவமனை அமைக்கக்கோரி வழக்கு! - தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ராமநாதபுரத்தைச் சேர்ந்த அட்வகேட் திருமுருகன் பொதுநல மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில், "ராமநாதபுரம் மாவட்டத்தில் உப்பூர் கிராமத்தை மையமாகக்கொண்டு மோர்ப்பண்ணை, கடலூர், உப்பூர்சத்திரம், கூத்தன்வயல் ஆகிய கிராமங்கள் உள்ளன. இந்தக் கிராமங்களில் சுமார் 8,000 பேர் வசிக்கின்றனர். பொருளாதார ரீதியான பின் தங்கிய மக்கள் வசிக்கும் இந்தப் பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையமோ துணை ஆரம்ப சுகாதார நிலையமோ இல்லை.

இதனால் கர்ப்பிணிப் பெண்கள், முதியவர்கள், குழந்தைகள் அவசர நேரங்களில் சிகிச்சை பெற பல கிலோமீட்டர் செல்ல உள்ளது. உரிய நேரத்தில் முதலுதவிகூடப் பெற இயலாததால், உயிரிழப்புகள் ஏற்படும் நிலையும் அதிகரித்துள்ளது. 5 ஆயிரம் மக்கள் தொகைக்கு ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்பட வேண்டும் எனத் தேசிய ஊரக சுகாதார நிலைய இயக்கத்தின் வழிகாட்டுதல்கள் உள்ளன. இது குறித்து அதிகாரிகளிடம் முறையிட்டும் உரிய நடவடிக்கை இல்லை. ஆகவே, திருவாடனை தாலுகாவில் உள்ள உப்பூர் கிராமத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும்” எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் வேணுகோபால், அப்துல் குத்தூஸ் ஆகியோர் கொண்ட அமர்வு, இது குறித்து தமிழக பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருத்துவ இயக்குநர் பதில் மனுத்தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கை டிசம்பர் 15-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!