மூன்று பெண்களின் உயிரைப்பறித்த மின்னல்! வயலில் நாற்று நட்டபோது நடந்த சோகம்

அரியலூர் மாவட்டத்தில் மின்னல் தாக்கி 3 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார்கள். 4 பேர் அரியலூர் மற்றும் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

                    

தமிழகம் முழுவதும் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்த நிலையில் பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் காலை முதலே காற்றுடன் பலத்த மழை பெய்து வருகிறது. அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்தில் சம்பா நடவுப் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இதையடுத்து அரியலூர் மாவட்டம் கருப்பூர் கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் சிலர் சாத்தமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த சீமான் என்பவருக்குச் சொந்தமாக கள்ளூர் பாலம் அருகில் உள்ள வயலில் நாற்று நடவு செய்யும் வேலையில் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில், இன்று மதியம் இடியுடன் பலத்த மழை பெய்தது. அப்போது வேலை செய்துகொண்டிருந்த பெண்கள் மீது இடிதாக்கியதில் உண்ணாமலை, செந்தமிழ்ச்செல்வி, அஞ்சலை ஆகிய 3 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் பலத்த காயமடைந்த ஒரு பெண் மற்றும் மயக்கமடைந்த 3 பெண்கள் என 4 பேரையும் சிகிச்சைக்காக அரியலூர், தஞ்சை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.  

                            

சம்பவ இடத்துக்கு வந்த வருவாய்த்துறை மற்றும் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவம் அருகில் உள்ள வயலில் வேலை செய்துகொண்டிருந்த தொழிலாளர்களுக்கிடையே பெரும் அச்சத்தை உண்டாக்கியிருக்கிறது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் ஒரு பெண் ஆபத்தான நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள். இந்த நிகழ்வு மாவட்டத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.


 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!