தினகரன் 'மக்கள் செல்வர்' ஆனது எப்படி? கொஞ்சம் ஹிஸ்ட்ரி சொல்லுங்களேன்..!

தினகரன்

"சென்னை ஆர்.கே நகர் தொகுதிக்கு டிசம்பர் 21-ம் தேதி நடைபெறவுள்ள இடைத்தேர்தலில், நயவஞ்சகக் கும்பலான முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை விரட்டியடித்து, மக்கள் செல்வருக்கு வாக்களியுங்கள்" என்று டி.டி.வி. தினகரன் அணியின் அதிகாரபூர்வ நாளேடான நமது எம்.ஜி.ஆர் செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் நின்றுபோன ஆர்.கே நகர் இடைத்தேர்தலின் போது ஓ.பன்னீர்செல்வம், சசிகலா அணியைவிட்டு பிரிந்து வந்து தனியாக போட்டியிட்டார். அப்போதிருந்தே ஓ.பன்னீர்செல்வத்துக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே உக்கிரமாக தர்மயுத்தம் நடந்தது. பின்னர் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியால், தினகரன் ஓரங்கட்டப்பட்டார். அதன்பின்னர் பன்னீர்செல்வத்துக்குத் துணைமுதல்வர் பொறுப்புக்கொடுத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணைமுதல்வர் பன்னீர்செல்வமும் ஒன்று சேர்ந்து தர்மயுத்தத்துக்கு முழக்குப் போட்டனர். இதனிடையே தேர்தல் ஆணையத்தால் தடை செய்யப்பட்ட கட்சியின் பெயரையும், இரட்டை இல்லைச் சின்னத்தையும் மீட்பதற்கு தினகரன் அணியும், முதல்வர் பழனிசாமி அணியும் தீவிரமாகப் போட்டிபோட்டு வந்தனர். 

முதல்வர் பழனிசாமி மற்றும் துணைமுதல்வர் பன்னீர்செல்வம்

இந்தநிலையில் கடந்த 23 ம் தேதி 'இரட்டை இலை' சின்னமும், கட்சியின் பெயரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணிக்குத்தான் சொந்தம் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதற்கு, அடுத்தநாளே ஆர்.கே நகர் தேர்தலை வரும் டிசம்பர் 21 ம் தேதி நடத்த வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனால், ஆர்.கே நகர் இடைத்தேர்தலுக்காக ஒவ்வொரு கட்சியும் வாக்கு சேகரிப்பதற்கான பணிகளில் மும்முரமாக இறங்கியுள்ளன. இந்நிலையில், தினகரன் அணியின் அதிகாரபூர்வ நாளேடான 'டாக்டர் நமது எம்.ஜி.ஆர்' நாளிதழில், 'புரட்சித்தலைவருக்கு ஓர் திண்டுக்கல்; மக்கள் செல்வருக்கு ஓர் ஆர்.கே நகர்.' என்ற தலைப்பில் செய்தி வெளியாகி உள்ளது. 

பத்திரிகை செய்தி

அந்தச் செய்தியாவது "ஆணவம், அகம்பாவம், சூது, சூழ்ச்சி, சதி, சுயநலம், வஞ்சகம், வக்கிரம் - இப்படிப்பட்ட குணங்களுக்கு இலக்கணம் என்று மனிதகுல வரலாற்றில் ஒரு ஜீவனைக் காட்டவேண்டும் என்றால் அது, எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும்தான். 'எப்போதுமே பொய்களைச் சொல்லி, பித்தலாட்டங்களை அரங்கேற்றி மக்களையும், தொண்டர்களையும், ஏமாற்றிவிடலாம்; ஆட்சியை நடத்தி விடலாம்' என்ற இந்த ஆணவக்காரர்களின் எண்ணம் பலிக்காது. கழகத்தின் எதிர்காலம், மக்களின் எதிர்காலம் எப்படி இருக்க வேண்டும் என்று தொண்டர்களும், மக்களும் முடிவெடுக்கும் காலம் கனிந்துவிட்டது. நடைபெறவுள்ள ஆர்.கே நகர் இடைத்தேர்தலில், துரோகக் கும்பலின் முகத்திரையை வாக்காளர்கள் கிழிக்கப்போவது உறுதி. நயவஞ்சகக் கும்பலுக்கு, ஜெயலலிதாவின் பெயரைச் சொல்லி ஏமாற்றும் இந்தத் துரோகக் கும்பலுக்கு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும்! மக்கள் திலகம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆருக்கு திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதி இடைத்தேர்தல் வெற்றி எப்படி ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியதோ, அதேபோன்று மக்கள் செல்வர் கழக துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரனுக்கு ஆர்.கே நகர் தொகுதி மக்களாகிய நீங்கள் மாபெரும் திருப்புமுனையை ஏற்படுத்தித் தந்து, வரலாற்றுச் சரித்திரம் படைக்க வேண்டும்" என்று உள்ளது.

எம்.ஜி.ஆர்

எடப்பாடி, ஓ.பி.எஸ். மற்றும் தினகரன் ஆகியோருக்கு இடையேயான சண்டை அனைவரும் அறிந்ததுதான், என்றாலும், ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் யார் வெற்றி பெறவேண்டும் என்பதை மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும். அதெல்லாம் சரி!, தமிழ் சினிமா உலகின் 'வசூல் சக்ரவர்த்தி' என்று அழைக்கப்பட்டவர் எம்.ஜி.ஆர். அவருக்கு, 'அறந்தை உலகப்பன்' எழுதிய நாடக விழாவில் கருணாநிதியின் மூலமாக 'புரட்சி நடிகர்' என்ற பட்டம் வழங்கப்பட்டது. அதன்பின், அ.தி.மு.க. தொடங்கிய சில நாள்களில் சென்னை மெரினாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கே.ஏ. கிருஷ்ணசாமி, எம்.ஜி.ஆருக்கு 'புரட்சித் தலைவர்' என்ற அடைமொழியை அறிவித்தார். திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதியில் அ.தி.மு.க-வுக்குக் கிடைத்த வெற்றியைப்போல, தினகரனுக்கு ஆர்.கே நகர் தொகுதியில் வெற்றி' என்று சொல்வதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். தினகரனுக்கு 'மக்கள் செல்வர்' என்ற பட்டத்தை யார், எப்போது, எங்கு வழங்கினார்கள் என்று தெரிவித்தால், அந்த வரலாற்றை மக்களும் தெரிந்துக்கொள்வார்கள்.

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!