ரகுவைக் கொன்றது யார்... நடந்தது என்ன... முழு விவரம்! #WhoKilledRagu? | Full Details of Ragu's death in Coimbatore

வெளியிடப்பட்ட நேரம்: 18:43 (27/11/2017)

கடைசி தொடர்பு:20:41 (27/11/2017)

ரகுவைக் கொன்றது யார்... நடந்தது என்ன... முழு விவரம்! #WhoKilledRagu?

முன்குறிப்பு:

அதிர்ந்து பேசாத குணம், சிரித்த முகம், இருக்கும் இடமே தெரியாத அளவுக்கு அமைதி, புத்திசாலி, படிப்பாளி, குடும்பத்தின் மீது அதிக அக்கறையுள்ளவர், முருக பக்தர் இவையெல்லாம்தான், ரகுபதி குறித்து நாம் விசாரித்தபோது  நமக்குக் கிடைத்த பதில்கள்.

அமெரிக்காவிலிருந்து விடுமுறைக்காக கோவை வந்தவருக்கு, எம்.ஜி.ஆர் நூற்றாண்டுக்காக வைக்கப்பட்ட அலங்கார வளைவும், சாலை விதிகளைப் பின்பற்றாமல் வந்த லாரியும் எமனாக மாறிவிட்டன. தீவிர முருக பக்தரான ரகுபதி, அமெரிக்காவிலிருந்து கோவை வரும்போதெல்லாம் பழனி செல்வது வழக்கம். அப்படிப் பழனி கோயிலுக்குச் செல்லும்போதுதான் பலியாகியுள்ளார். விபத்து நடந்தது  முதல், தற்போது வரையிலான நடந்தவற்றின் தொகுப்பு இதோ.

ரகுபதி

25.11.2017

அதிகாலை 2.30AM:  பழனி கோயில் செல்வதற்காக, தனது யமஹா RX135 பைக்கில் கிளம்பியுள்ளார்.

2.40AM: கோவை அவிநாசி சாலையிலுள்ள மருத்துவக் கல்லூரி அருகே வரும்போது, எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்காக வைக்கப்பட்ட அலங்கார வளைவு மோதி, ரகுபதி கீழே விழுகிறார். அப்போது, அந்த வழியே விதிகளை மீறி ராங் ரூட்டில் வந்த டிப்பர் லாரி, ரகுபதியின் மீது மோதுகிறது. சம்பவ இடத்திலேயே ரகுபதி உயிரிழக்கிறார். லாரி நிக்காமல் சென்றுவிட்டது.

3.00AM: ரகுபதியின் உடல் கோவை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது. உறவினர்களுக்குத் தகவல் சொல்லப்படுகிறது.

3.30AM: கோவை அரசு மருத்துவமனையின், ரகுபதியின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கூடத்தொடங்குகிறார்கள்.

விபத்து நடந்த இடம்

விபத்து நடந்த இடம்

9:00AM: ஊடகங்களில் இந்தச் செய்தி வெளியாகிறது.

10:00AM: தமிழக அரசு, கோவை மாநகராட்சி, காவல்துறை என ஆகியோரை விமர்சித்து கருத்துகள் பகிரத்தொடங்கின.

1:00PM: அனுமதியின்றி வைக்கப்பட்ட அலங்கார வளைவுகள், மக்களின் பாதுகாப்பு கருதி அகற்றப்படும் என்று மாநகராட்சி நிர்வாகம் அறிவிப்பு வெளியிடுகிறது.

1.30PM: சிங்காநல்லூர் தொகுதி எம்.எல்.ஏ கார்த்திக் (தி.மு.க), இந்த விவகாரத்தில் அ.தி.மு.க மற்றும் மாநகராட்சி நிர்வாகத்தின் மீது குற்றம் சாட்டினார்.

2:00PM: அலங்கார வளைவுகளை மாநகராட்சி நிர்வாகம் அகற்றியது.

 

அலங்கார வளைவு

அலங்கார வளைவை அகற்றும் மாநகராட்சி ஊழியர்கள்

4:00PM: கோவை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை முடிந்த பிறகு, ரகுபதியின் இறுதிச்சடங்கு நடந்தது.

9.30PM: ரகுபதிமீது மோதி விபத்து நடத்திய, டிப்பர் லாரி ஓட்டுநர் மோகன் கைது செய்யப்பட்டார்.

10:00PM: ரகுபதி உயிரிழந்த இடத்திலேயே Who Killed Ragu (ரகுவைக் கொன்றது யார்?) என்று பெயின்ட்டால் எழுதப்பட்டது.

விபத்து நடத்திய லாரி

விபத்து நடத்திய லாரி

26.11.2017

10:00AM: ரகுவைக் கொன்றது யார் #WhoKilledRagu என்ற ஹேஷ்டேக்கில், சமூகவலைதளங்களில் கருத்துகள் பகிரப்பட்டன.

ரகுவைக் கொன்றது யார்

1:00 PM: இந்த விவகாரம் தொடர்பாக முதல்முறையாக வாய்திறந்த அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, "ரகுபதியின் மரணம் மிகுந்த வருத்தத்தை தருகிறது. இந்த விவகாரத்தை தி.மு.க திசை திருப்புகிறது. லாரி ஓட்டுநர் தி.மு.க எம்.எல்.ஏ கார்த்திக்கு வேண்டப்பட்டவர் என்பதால், விஷயத்தை திசை திருப்புகிறார்கள். இந்த விஷயத்தை சும்மா விடமாட்டோம்" என்றார்.

3:00PM: ரகுபதியின் குடும்பத்தினருக்கு, எம்.எல்.ஏ கார்த்திக் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

4:00PM: அமைச்சர் எஸ்.பி வேலுமணியின் கருத்துக்கு, கார்த்திக் மறுப்பு. மேலும், இந்த விவகாரத்தை சட்ட ரீதியாக சந்திக்கத் தயார் என்று கூறினார்.

8.30PM: நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பிறகு, கோவை மத்தியச் சிறையில் மோகன் அடைக்கப்பட்டதாக காவல்துறை அறிவிப்பு வெளியிட்டது.

27.11.2017

இன்று அதிகாலை, ரகுபதி உயிரிழந்த இடத்தில் ரகுபதியைக் கொன்றது யார் என்று எழுதப்பட்டிருந்த வாசகம் அழிக்கப்பட்டிருந்தது. அந்த இடத்தில் போலீஸ் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

 

ரகுவைக் கொன்றது யார்

காலை 11:00AM: ரகுபதி மரணம் தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் தி.மு.க சார்பில் முறையீடு செய்யப்பட்டது.

கனத்த இதயத்துடன் ரகுபதியின் வீட்டுக்குச் சென்றோம். நெருங்கிய உறவினர்கள் சிலர் மட்டுமே இருந்தனர். சிலர் துக்கம் விசாரித்துவிட்டு திரும்பிக் கொண்டிருந்தனர்.

ரகுபதியின் தந்தை கந்தசாமியிடம் பேசினோம். "நல்லா படிக்கற பையன் அவன். எந்தக் கெட்டப் பழக்கமும் இல்ல. 4 வருஷமா அமெரிக்காவுலதான் இருக்கான். யாராவது பிரச்னை பண்ணாக்கூட ஒதுங்கிப் போய்டுவான். அதிகமா வெளிய சுத்தமாட்டான். சின்ன வயசுல இருந்தே முருக பக்தன். சின்ன வயசுல பழனிக்குப் பாதயாத்திரை போவான். இப்ப அமெரிக்காவுக்குப் போனப்பறம், ஒவ்வொரு தடவையும் ஊருக்கு வரப்ப எல்லாம், பழனி கோயிலுக்குப் போவான். அந்த மாதிரிதான், போய்ட்டு வரேன்பா-ணு சொல்லிட்டுப் போனான். அவன் போன கொஞ்ச நேரத்துலேயே ஆக்ஸிடென்ட் ஆகிடுச்சுன்னு போன் வந்துச்சு.

அவனுக்குப் பொண்ணு பார்த்துட்டு இருந்தோம். அமெரிக்கா போய் சம்பாதிச்சதுல, சேரன்மாநகர்கிட்ட ஒரு வீடு வாங்கியிருந்தான். அந்த வீட்டுக்கு கிரையம் உள்ளிட்ட வேலைகள் பண்ணணும்ணு 20 நாள்களுக்கு முன் வந்தான். கல்யாணத்துக்கு அப்பறம், அந்த வீட்லதான் செட்டில் ஆகணும்ணு பிளான் பண்ணிட்டு இருந்தான். நேற்று அமெரிக்கா போறதுக்கு டிக்கெட் போட்டிருந்தான் டிசம்பர் மாசம், பொண்ணு பார்த்து முடிச்சிறலாம்ணு சொன்னான். ஆனா, இப்படி ஆகும்ணு யாரும் எதிர்பார்க்கலை. எங்க பையனே போய்ட்டான். இனி நாங்க என்னத்த பேசறது. இனிமேலாவது, இப்படி யாருக்கும் நடக்காம இருக்கணும். அதுக்கு என்ன பண்ணணுமோ பண்ணுங்க" என்று முடித்துக் கொண்டார்.

ரகுபதியின் உறவினர்களிடம் பேசினோம், "பொது இடத்துல எப்படிங்க மக்களுக்கு பாதிப்பு ஏற்படற வகைல பேனர் வைக்கலாம். மக்கள் பத்தி இந்த அரசாங்கத்துக்கு அக்கறையே இல்லையா.  எங்கப் பையன உங்களால திருப்பிக் கொடுக்க முடியுமா" என்றனர்.


டிரெண்டிங் @ விகடன்