”ஆவின் டெட்ரா பேக் தேவையற்ற முடிவு!” - எள்ளும் கொள்ளுமாக வெடிக்கும் பால் முகவர்கள் தரப்பு

 

 

 

"கடல் கடந்து சென்று பால் வணிகம் (டெட்ரா பேக்) செய்யும் முடிவை ஆவின் நிறுவனம் நவம்பர் 25-ம் தேதி முதல் தொடங்கியுள்ளது. பால் உற்பத்தியாளர்களின் கூட்டுறவு அமைப்பான தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையமான ஆவின் நிறுவனம் இந்த முயற்சியை மேற்கொண்டிருப்பதற்கு அந்த நிறுவனத்துக்கும்,தமிழக அரசுக்கும் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறோம்" என்று எள்ளும்கொள்ளுமாக வெடிக்கிறார் அந்தச் சங்கத்தின் மாநிலத் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி.


 

 இதுபற்றி அவரிடமே பேசினோம். "தமிழகத்தில் தினந்தோறும் தேவைப்படும் 100 சதவிகிதம் பால் தேவையில்,ஆவின் நிறுவனம் பூர்த்தி செய்வது வெறும் 16.4 சதவிகிதம் மட்டுமே. மீதமுள்ள 83.6 சதவிகிதம் பால் தேவைகளைத் தனியார் பால் நிறுவனங்கள்தான் பூர்த்தி செய்கின்றன. தமிழகத்திலேயே இன்னும் முழுமையான பால் தேவைகளைப் பூர்த்தி செய்ய ஆவின் நிறுவனம் அதற்கான முயற்சிகளை மேற்கொள்ளாமல் விட்டுவிட்டு,'இருப்பதை விடுத்துப் பறப்பதற்கு ஆசைபட்ட கதை'ங்கிற பழமொழியை ஞாபகப்படுத்தும் வகையில் ஆவின் நிறுவனத்தின் செயல்பாடுகள் அமைந்துள்ளன.

 ஏனெனில், தனியார் பால் நிறுவனங்களின் போட்டியைச் சமாளித்து ஆவின் பால் விற்பனையை அதிகப்படுத்த வேண்டும் என்றால், அது பால் முகவர்களால் மட்டுமே சாத்தியமாகும் என்பதை நன்றாக உணர்ந்திருந்தும், பால் முகவர்களுக்கு நேரடியான வர்த்தகத் தொடர்புகளைத் தர மறுப்பதோடு,லிட்டருக்கு ரூபாய் 1.50-ஐ கமிஷனாகக் கொடுத்துவிட்டு மொத்த விநியோகஸ்தர்கள்,பால் முகவர்கள்,சில்லறை வணிகர்கள் என அதனை மூவர் பங்கிட்டுக்கொள்ள வேண்டும் என்கிற தவறான நடைமுறைகளைக் கடந்த 17ஆண்டுகளாகத் தொடர்ந்து நடைமுறைப்படுத்தி வருகிறது. இதனால்,பால் முகவர்களுக்கு உழைப்புக்கேற்ற வருமானம் ஆவின் பாலினை விற்பனை செய்யும்போது கிடைக்காததால்,தனியார் பால் நிறுவனங்களின் பால் விற்பனைக்கே முக்கியத்துவம் கொடுக்கவேண்டியதிருக்கிறது.

 அது மட்டுமன்றி, ஆவின் பால் TM ரூ. 18.50, SM ரூ. 20.50, FCM  ரூ. 22.50 என இரண்டும்கெட்டானாக விற்பனை விலையை நிர்ணயம் செய்து வைத்துள்ளதால், அதிகபட்ச விற்பனை விலைக்குள் ஆவின் பாலினை விற்பனை செய்ய முடிவதில்லை. இதனால்,பொதுமக்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதுதொடர்பாகப் பல ஆண்டுகளாக ஆவின் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியும்,தமிழக அரசுக்குக் கோரிக்கை மனுக்கள் அளித்தும்,எங்கள் கோரிக்கைகள் கடலில் தூக்கி வீசப்பட்ட கல்லாகவே கிடக்கிறது.

 ஆவின் நிறுவனத்தில் அடிப்படையில் இருக்கும் பிரச்னைகளைத் தீர்த்து தமிழகத்தின் தேவைகளில் 50 சதவிகிதத் தேவைகளையாவது பூர்த்தி செய்தால்,ஆவின் நிறுவனமும் வளர்ச்சியை நோக்கிப் பயணிக்கும். ஆவின் நிறுவனத்தை நம்பியிருக்கும் லட்சக்கணக்கான பால் உற்பத்தியாளர்களின் குடும்பத்தினர் மகிழ்ச்சியடைவர். மேலும்,குளிர்சாதன அறைக்குள் அமர்ந்துகொண்டு திட்டம் தீட்டாமல் தனியார் பால் நிறுவனங்களின் அதிகாரிகள்போல் வணிகச் சந்தைக்கு இறங்கி வாருங்கள் என ஆவின் நிறுவனத்தின் உயர் அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கிறோம்.

 ஆனால், அதைவிடுத்து அடிப்படையில் ஆயிரம் ஓட்டைகளை வைத்துக்கொண்டு கடல் கடந்து சென்று பால் வணிகம் செய்யும் முயற்சியை ஆவின் நிறுவனம் தொடர்ந்து செய்யுமானால், கடலில் மட்டுமல்ல... கடனிலும் மூழ்கி ஆவின் நிறுவனம் அழிந்துபோகும் நாள் வெகுதொலைவில் இல்லை. இது, ஆவின் நிறுவன அதிகாரிகளுக்கு மட்டுமல்ல, அந்தத் துறையின் அமைச்சர் ராஜேந்திரபாலாஜிக்கும் நாங்கள் விடுக்கும் எச்சரிக்கை. இப்படி எச்சரிக்கை செய்வது எங்களது கடமையாக நினைக்கிறோம்" என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!