Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

“நீலகிரிக்கு வர்றீங்களா, பிளாஸ்டிக் பொருள்களைக் கொண்டு வராதீங்க..!” - மாவட்ட நிர்வாகம் அதிரடி

“தடை உடைக்காமல், படை அமைக்காமல், விடை கிடைக்காதே தீயே வா வா.....” அறம் திரைப்படத்தில் இப்படி ஒரு பாடல் வரி வரும். அறம் பேசிய சுற்றுச்சூழல் பிரச்னையின் இன்னொரு பக்கம் "பிளாஸ்டிக்". ஐயாயிரம் ஆண்டுகளுக்கு மேல் அழியாமல் இருக்கிற ஒரே பொருள் "பிளாஸ்டிக்" மட்டுமே. அதை முற்றிலும் ஒழித்தால் மட்டுமே சுற்றுச்சூழலைப் பாதுகாக்க முடியும் என்பதை எல்லா நாடுகளும் உணர்ந்திருக்கின்றன. இந்தச் சூழ்நிலையில் பிளாஸ்டிக் பொருள்களுக்கு எதிரான ஓர் அறப்போராட்டத்தை தொடங்கியிருக்கிறார் நீலகிரி மாவட்ட கலெக்டர்.

இன்னொசன்ட் திவ்யா நீலகிரி

ஒட்டுமொத்த நீலகிரி மாவட்டமும் பிளாஸ்டிக் குறித்த பதற்றத்தில் இருக்கிறது. பிளாஸ்டிக் பயன்படுத்தத் தடை, பிளாஸ்டிக் ரெய்ட்,  பொக்லைன் எந்திரங்கள் பயன்படுத்தத் தடை, டெங்கு பரவாமல் தடுக்க தனிப்படை, கிராமங்களில் சோதனை என உச்சகட்ட பரப்பரப்பில் இருக்கிறது நீலகிரி மாவட்டம். திடீரென கடைகளுக்குள் சோதனை, பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல், அதிகபட்ச அபராதம் என பிளாஸ்டிக் இல்லாத நீலகிரி மாவட்டத்தை உருவாக்க தீவிரமாய் பணி செய்துகொண்டிருக்கிறார் நீலகிரி மாவட்ட ஆட்சியர் திருமதி இன்னசன்ட் திவ்யா. 

அலுவலர்கள் பின் தொடர, திடீரென கடைகளுக்குள் சோதனைக்குச் செல்கிறார். பிளாஸ்டிக் பொருள்கள் இருந்தால் உடனே பறிமுதல். அங்கேயே அபராதம். அதிகாரிகளும் ஒரு பக்கம் முழு வீச்சில் சோதனை செய்கிறார்கள். பறிமுதல் செய்யப்படுகிற பிளாஸ்டிக் கவர்கள் முற்றிலும் அழிக்கப்படுகின்றன. தொடர்ந்து பயன்படுத்துகிறவர்கள் அரசு அதிகாரிகளால் எச்சரிக்கப்படுகிறார்கள். பிளாஸ்ட்டிக்குக்கு எதிரான புரட்சி கொஞ்சம் கொஞ்சமாக நீலகிரியில் வேர் பிடித்திருகிறது. 

பிளாஸ்டிக் இல்லாத நீலகிரி குறித்து நீலகிரி மாவட்ட ஆட்சியர் திருமதி ஜே. இன்னசன்ட் திவ்யா அவர்களைச் சந்தித்துப் பேசினோம்,

“நீலகிரி மாவட்டத்திலிருக்கிற பூமியின் ஆறு அடுக்குகளிலிருந்து எட்டு அடுக்குகள் வரை பிளாஸ்டிக் மண்ணில் புதைந்திருப்பதை பார்த்தபோது பகீரென இருந்தது. மாவட்டம் முழுமைக்கும் இதே நிலைதான். மண்ணில் புதைந்திருக்கிற எல்லாமே பிளாஸ்டிக்  கவர்கள்தான். பிளாஸ்டிக்கை அடியோடு ஒழித்தால் மட்டுமே நீலகிரியைப் பசுமையான மாவட்டமாக மாற்ற முடியும். பிளாஸ்டிக் இல்லாத நீலகிரியை உருவாக்குவதுதான் மாவட்ட நிர்வாகத்தின் முக்கிய கடமை. பல வருடங்களாக செயல்பாட்டில் இருக்கிற பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கையை இப்போது முழு வீச்சில் நடைமுறைபடுத்தியிருக்கிறோம். நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்த தடை விதித்துள்ளோம். நீலகிரி மக்களிடம்  பிளாஸ்டிக் டம்ளர்கள், தட்டுகள், கவர்கள் என எதற்கும் பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்தக் கூடாது என அறிவித்திருக்கிறோம்.

திருமண மண்டபங்கள், விழா நடைபெறும் இடங்கள் என எல்லா இடங்களிலும் கடுமையான விதிமுறைகளைப் பின்பற்றச் சொல்லியிருக்கிறோம். விதிமுறைகளை மீறி பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்துவோருக்கு 20ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும். உணவு விடுதிகளில் பார்சல் உணவுகளை இலைகளில் கட்டிக் கொடுக்க சொல்லியிருக்கிறோம். நீலகிரி மக்கள் பிளாஸ்டிக் இல்லாத மாவட்டத்திற்கு ஆதரவு அளிக்கிறார்கள். மக்கள் சிறிது சிறிதாக பிளாஸ்டிக்குக்கு எதிரான மனநிலைக்கு முழுமையாக வந்து விடுவார்கள் என நம்புகிறேன். மேலும், நீலகிரி மாவட்டத்திற்கு வருகிற சுற்றுலாப் பயணிகளுக்கு முக்கிய வேண்டுகோள் ஒன்றை முன்வைக்கிறோம். சுற்றுலா வருகிற மக்கள் முற்றிலும் பிளாஸ்டிக் பொருள்களைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் நீலகிரி மக்களால் மட்டுமே பிளாஸ்டிக் என்பதை ஒழித்துவிட முடியாது,. சுற்றுலாப் பயணிகளும் "நீலகிரி மாவட்டம் பிளாஸ்டிக் இல்லாத மாவட்டம்” என்பதை மனதில்வைத்து செயல்பட வேண்டும். உணவிற்காக எரிவாயு சிலிண்டர்கள் எடுத்துவரக் கூடாது.  பிளாஸ்டிக் கவர்களைப் பயன்படுத்தி நீலகிரி மாவட்டத்திற்கு கொண்டு வருகிற எந்தப் பொருளாக இருந்தாலும் மாவட்ட எல்லைகளில் பறிமுதல் செய்யப்படும். மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்” என்கிறார். 

இன்னொசன்ட் திவ்யா

மாவட்டத்தில் உள்ள நுழைவு வாயில், சுற்றுலா ஸ்தலங்கள், மக்கள் அதிகமாகக் கூடும் இடங்கள், கல்யாண மண்டபம், வியாபார நிறுவனங்கள் என அனைத்துப் பகுதிகளிலும், தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் குறித்த ஆய்வுகள் நடந்து வருகின்றன, மாவட்டத்தில் உள்ள அனைத்து உள்ளாட்சி நிர்வாகங்கள் சார்பில் கிராமங்கள், பள்ளிகள் உட்பட அனைத்துப் பகுதிகளிலும், போதிய விழிப்புஉணர்வு ஏற்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விழிப்புஉணர்வில், உள்ளாட்சி நிர்வாகத்துடன், தொண்டு நிறுவனங்களும் கைக்கோத்துள்ளன. மாவட்ட எல்லைப் பகுதிகளில், பிளாஸ்டிக் சேகரிப்பு மையம் அமைக்கப்பட்டு, மகளிர் குழுக்களின் மூலம் சுற்றுலாப் பயணிகளிடமிருந்து பிளாஸ்டிக் பைகள் பெறப்பட்டு வருகின்றன.

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்கை கொண்டு வரும் வாகனங்களுக்கும், மொத்தம் மற்றும் சில்லரை விற்பனையாளர்களுக்கும் அபராதம் விதிக்கவும் முடிவுசெய்யப்பட்டுள்ளது. அதன்படி, கடைகளில் அரை கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் கண்டறியப்பட்டால், சில்லரை விற்பனையாளர்களுக்க, 1,000 ரூபாய், மொத்த விற்பனையாளர்களுக்கு, 5,000 ரூபாய், திருமண மண்டபங்களுக்கு 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நீலகிரிக்குள் வரும் வாகனங்களில் பிளாஸ்டிக் பொருள்கள் கண்டறியப்பட்டால், சுற்றுலாப் பேருந்துக்கு 250 ரூபாய்; டெம்போ வாகனத்திற்கு 100 ரூபாய்; மற்ற வாகனங்களுக்கு 50 ரூபாய் அபராதம் விதிக்க மாவட்ட நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.

ஆட்சியரின் திடீர் கள ஆய்வுகள் அடிக்கடி நடைபெறுவதால் மாவட்டத்தில் பிளாஸ்டிக் கவர்களின் பயன்பாடு ஓரளவிற்கு குறைந்திருப்பதாக மக்கள் தெரிவிக்கிறார்கள். ஆட்சியர் மக்கள் என யார் முயற்சி செய்தாலும் சுற்றுலாப் பயணிகள் மனதுவைக்காமல் பிளாஸ்டிக் இல்லா நீலகிரியை உருவாக்குவது அவ்வளவு சாத்தியமானது அல்ல. நீலகிரிக்குச் சுற்றுலா கிளம்புகிற ஒவ்வொருவரும் மனதில் வைக்க வேண்டிய ஒரு வாசகம் 

"நீலகிரியில்  பிளாஸ்டிக் தடை செய்யப்பட்டுள்ளது"

ஒத்துழையுங்கள்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement