வெளியிடப்பட்ட நேரம்: 22:01 (27/11/2017)

கடைசி தொடர்பு:15:02 (28/11/2017)

அன்புச்செழியனை விஷால் எதிர்ப்பது ஏன்? - கொதிக்கும் சீமான்

சீமான்

மிழ்த் திரையுலகை ஆட்டிப் படைத்துக்கொண்டிருக்கிறது கந்துவட்டி விவகாரம். இயக்குநர் சசிகுமாரின் உறவினர் அசோக்கின் தற்கொலைக்குக் காரணமான அன்புச்செழியன் தலைமறைவாக இருக்கிறார். 'இன்றைக்கு அன்புச்செழியனுக்கு எதிராகப் பேசுகின்றவர்கள் எல்லாம், அவரிடம் கடன் பெற்றுள்ளனர். இந்தப் பணத்தைக் கொடுக்காமல் கடத்தி விடுவதற்கு அசோக் மரணத்தை முன்வைத்து ஒளிந்து கொள்கிறார்கள். வாங்கும்போது கடவுளாகத் தெரிந்த அன்பு, இப்போது வில்லனாகிவிட்டார்' எனக் கொந்தளிக்கிறார் சீமான். 

மதுரையைச் சேர்ந்த ஃபைனான்ஸ் அதிபர் அன்புச்செழியனிடம் வாங்கிய பணத்தைத் திருப்பித் தர முடியாததால், இயக்குநர் சசிகுமாரின் உறவினர் அசோக்குமார் தற்கொலை செய்து கொண்டார். இந்த விவகாரத்தில், காவல்துறை அதிகாரிகளிடம் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார் இயக்குநர் சசிகுமார். கந்துவட்டி விவகாரம் தொடர்பாக, தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் உள்பட பலரும் கொதித்தெழுந்தனர். ' அன்புச்செழியனுக்கு ஆதரவாக எந்த எம்.பி, எம்.எல்.ஏ வந்தாலும் விடமாட்டோம்' எனப் பேட்டியளித்தார் விஷால்.

அன்புச்செழியன் விவகாரம் குறித்து, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் பேசினோம். "இன்று அனைத்துத் துறைகளிலும் வட்டி வாங்கும் நிலை உள்ளது. சிறு குறு தொழில் உள்பட பெரும் தொழில்களை நடத்தும் அனைவரும் வட்டிக்குப் பணம் வாங்குகிறார்கள். அந்நிய நிறுவனங்களோடு நாம் போட்டி போட்டுத் தோற்றுப் போவதற்குக் காரணம், அவர்கள் நாட்டில் 3 சதவிகிதம் அளவுக்கு வட்டி வசூலிக்கிறார்கள். நாம் 13 சதவிகிதம் வட்டி செலுத்துகிறோம். அந்தப் பணத்தை வாங்கிக்கொண்டு தொழில் செய்யும்போது, தோற்றுப் போகிறோம். கல்வி, வேளாண்மை, வாகனம், வீடு, அத்தியாவசிய பொருள்கள் உள்பட அனைத்துக்கும் கடன் கொடுக்கிறார்கள். இந்தப் பணத்தை வசூல் செய்யும் முறைகள் மிகக் கொடுமையானவை. உழவுப் பணிகளுக்கு டிராக்டர் வாங்க ஒரத்தநாடு பாலா கடன் பெற்றார். அதனை வசூலிக்கச் சென்றபோது, பணம் கட்ட வசதியில்லாத நிலையை அறிந்து அவரை மரத்தில் கட்டி வைத்து அடித்தது தமிழ்நாடு காவல்துறை. திருவண்ணாமலையில் ஒரு உழவர், பொதுத்துறை வங்கியில் பெற்ற கடனுக்காகக் கொடுக்கப்பட்ட அழுத்தத்தால் தற்கொலை செய்து கொண்டு இறந்து போனார். அனைத்து வங்கிகளிலும் கடன் பெறும் வசதி உள்ளது. காரணம், நாட்டில் உள்ள 80 சதவிகித மக்களுக்குத் தாங்க முடியாத வறுமை பெரும் சுமையாக இருக்கிறது. கடன் பெறுவது தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது. லஞ்சமும் ஊழலும் எப்படி தேசிய மயமாக்கப்பட்டுவிட்டதோ அதைப் போலத்தான் கடன் பெறுவதும் தவிர்க்க முடியாததாகிவிட்டது. திரைத்துறையில் மட்டுமல்ல, அனைத்துத் துறைகளிலும் கடன் பெறுகிறோம். இந்தியா கடன்கார நாடாக இருக்கும்போது, நாம் கடன் பெறுவதில் என்ன தவறு இருக்க முடியும்? 

பன்னெடுங்காலமாக பெரு முதலாளிகளைச் சார்ந்துதான் திரைத்துறை உள்ளது. முன்பெல்லாம் மார்வாடிகளிடம் ஃபிலிம் நெகட்டிவ் எனப்படும் மூலப் பொருளை அடமானம் வைத்து கடன் பெற்றோம். இங்கு யாருமே சொந்தமாகப் பணம் போட்டு படம் எடுப்பதில்லை. போத்ரா, அன்புச்செழியன் போன்றவர்களிடம் பணம் பெறுவதைத் தவிர்க்க முடியாது. சினிமா மூலம் ஏராளமான வருமானத்தை ஈட்டும் அரசு, இந்தத் துறைக்காக ஏதேனும் செய்கிறதா. மத்திய, மாநில அரசுகள் எதுவும் செய்வதில்லை. கார்ப்பரேட் நிறுவனங்களின் கைகளுக்கு சினிமா சென்றுவிட்டது. இதற்கு மாற்று வழியில்லாத நிலையில் இருக்கிறோம். தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகம் போல, தமிழ்த் திரைப்பட வளர்ச்சிக் கழகம் என்ற ஒன்றை அரசு அமைக்க வேண்டும். சிறந்த படைப்பாளிகளிடம், 'உங்களது கதையைக் கொடுங்கள். நாங்கள் சினிமாவுக்குப் பணம் தருகிறோம்' என உத்தரவாதம் அளிக்க வேண்டும். பாகுபலி என்ற திரைப்படம் 1,700 கோடி ரூபாய் பணம் வசூலிக்கிறது. அப்படி எத்தனை பாகுபலிகளை நம்மால் எடுக்க முடியும். தீரன் சின்னமலை, பூலித்தேவன், மருதுபாண்டியர், வேலுநாச்சியார், அழகு முத்துக்கோன் ஆகியோரின் வரலாற்று ஆவணங்களை ஏன் திரைப்படமாக்க முடியாது? 

அசோக் குமாரின் மரணம் வேதனையை ஏற்படுத்தியதால் ஆதங்கப்படுகிறோம். இதற்கு முன்பு ஜீ.வி என்ற மனிதனின் மரணம் வட்டிப் பிரச்னையால் ஏற்பட்டது. இந்த இரண்டு மரணங்களும் அன்புச்செழியன் என்ற ஒரே மனிதனால் ஏற்படுத்தப்பட்டவை. இதற்கு மாற்று என்ன இருக்கிறது. பணத்தை வசூலிக்கும் முறைகளில் ஒவ்வொருவருக்கும் மாற்றுக் கருத்து இருக்கிறது. பொதுத்துறை வங்கியே தற்கொலை செய்யும் அளவுக்குத் தூண்டும்போது, தனிமனிதன் என்ன செய்வான். இதற்கு என்ன கட்டுப்பாடு விதிக்க முடியும். எந்த வீட்டு வாசலில் பணத்தோடு அன்புச்செழியன் காத்திருந்தார். அவர் மோசமானவர் என்றால், அவரிடம் செல்வதைத் தவிர்த்திருக்க வேண்டியதுதானே. இவ்வளவு பேசும் விஷாலும் ஞானவேல் ராஜாவும், இனி அன்புச்செழியனிடம் ஒரு பைசா வாங்க மாட்டோம் என முடிவெடுக்கட்டும். அவர்களால் சொல்ல முடியாது. ஏனென்றால், இதுபோன்ற முதலாளிகளை நம்பித்தான் சினிமா உலகம் இருக்கிறது. அந்த யதார்த்த நிலையிலிருந்து யோசிக்க வேண்டும். இதற்கான மாற்று வழியை சீமானோ அமீரோ சசிக்குமாரோ தர முடியாது. அதிகாரத்தில் உள்ளவர்கள்தான் மாற்றை யோசிக்க வேண்டும். சினிமாவைக் கேவலமாக நினைத்தால், அது கேவலமானது. நமது இனத்தின் கலைமுகமாக சினிமாவைப் பார்க்க வேண்டும். 

இயக்குநர் சசிகுமாரை அழைத்து இரண்டு மணி நேரம் விசாரிக்கும் காவல்துறை, அன்புச்செழியனை ஏன் அழைத்து விசாரிக்கவில்லை.  அவர் தலைமறைவாக இருக்கிறார் என்கிறார்கள். அவரைக் கண்டுபிடிக்க முடியாத கையாலாகாத்தனத்தில்தான் காவல்துறை இருக்கிறதா. இதற்காக அரசு மன்னிப்பு கேட்குமா. அன்புச்செழியன் கொடுக்கும் பணமே, அதிகாரத்தில் உள்ளவர்களின் பணம்தான். அன்புவுக்கு இவ்வளவு பணம் எப்படி வந்தது. நேரடியாக முதலீடு செய்ய முடியாமல், இப்படிப்பட்ட நபர்கள் மூலமாக பணத்தை வட்டிக்கு விடுகிறார்கள். அனைவர் வீடுகளிலும் ரெய்டு நடத்துகிறவர்கள், அன்பு வீட்டில் ரெய்டு நடத்த வேண்டியதுதானே. இங்கு அதிகாரங்கள் இல்லை. அநியாயங்கள்தான் இருக்கின்றன. பெரிய நடிகர்கள் 15 கோடி, 20 கோடி, 35 கோடி ரூபாய் எனச் சம்பளம் வாங்குகிறார்கள். இந்தப் பணத்தை எந்தத் தயாரிப்பாளர் ரொக்கமாக வைத்திருந்து கொடுக்கும் நிலையில் இருக்கிறார். விஷாலும் ஞானவேல் ராஜாவும் அன்புச்செழியனிடம் கடன் பெற்றுள்ளனர். இந்தப் பணத்தைக் கொடுக்காமல் கடத்தி விடுவதற்கு அசோக் மரணத்திலிருந்து மறைகிறார்கள். வாங்கும்போது கடவுளாகத் தெரிந்த அன்பு, இப்போது வில்லனாகிவிட்டாரா. வாங்கிய கடனுக்காகத்தான் மருது படத்தில் நடித்துக் கொடுத்தார் விஷால். ஜீ.வி மரணம் எச்சரிக்கை என்றால், அதன்பிறகு கடன் வாங்காமல் இருக்க வேண்டியதுதானே. தவறு இரண்டு பக்கமும் இருக்கிறது. கடன் கொடுத்தவன் குற்றவாளி என்றால், கடன் பெற்றவனும் குற்றவாளிதான். 

அசோக் குமார் தற்கொலை செய்யும் முடிவைத் தவிர்த்திருக்க வேண்டும். பணத்துக்காக உயிரைப் பலியாகக் கொடுத்துவிட்டானே என்ற ஆதங்கம் எனக்கும் இருக்கிறது. இப்படியொரு நெருக்கடியை சசிகுமாரிடம் கூறியிருந்தால், அசோக் இந்தநிலைக்குக் கட்டாயம் சென்றிருக்க மாட்டார். அன்புச்செழியனை அழைத்து முறைப்படி விசாரணையைக் கூட அரசு செய்யப் போவதில்லை. காரணம், அவரிடம் உள்ள பணம் யாருடையது என்பது அனைவருக்கும் தெரியும். எனக்கு அன்புச்செழியனால் ஆகப் போவது எதுவுமில்லை. நாம் நியாயத்தின் பக்கம் நின்று பேச வேண்டும். திரையுலகில் யாருமே இனி கடன் பெறப் போவதில்லை என முடிவெடுங்கள். அதன்பிறகு யார் படம் எடுக்கப் போகிறார்கள் என்பதைப் பார்ப்போம். தமிழன் காசு கொடுத்தால் மட்டும் அது கந்துவட்டியாக மாறிவிடுகிறது. வேற்று மாநிலத்தவன் கொடுத்தால் அது ஃபைனான்ஸ். எதுவும் பெறாமல் 20 கோடி, 30 கோடி ரூபாய் கடன் கொடுக்கும் நிலையில் அன்பு இருக்கிறார். அதைத் தெரிந்துதான் கடன் வாங்குகிறோம். பாதையில் பள்ளம், மேடு இருந்தால் வேறு பாதையில் செல்லுங்கள். அன்புச்செழியனால் வாழ்ந்தவர்களும் இருக்கிறார்கள். வீழ்ந்தவர்களும் இருக்கிறார்கள். 'அன்புச்செழியன் இல்லாவிட்டால், நான் தயாரிப்பாளராக ஆகியிருக்க முடியாது' என்கிறார் விஜய் ஆன்டணி. இதுபோல் நிறைய பேர் தயாரிப்பாளர் ஆகியுள்ளனர். குறை, நிறைகள் ஏராளம் இருக்கின்றன. அந்த நேரத்துக்கான தேவைகள்தான் அனைத்தையும் தீர்மானிக்கிறது. அசோக் மரணம் இறுதியாக இருக்க வேண்டும். 'இனி அநியாய வட்டி வாங்குகிறவர்களிடம் பணம் வாங்கக் கூடாது' என அனைவரும் ஒன்று சேர்ந்து முடிவெடுக்க வேண்டும்" என்றார் நிதானமாக.