வெளியிடப்பட்ட நேரம்: 22:58 (27/11/2017)

கடைசி தொடர்பு:12:46 (28/11/2017)

அன்புச்செழியனுக்கு எதிரான புகாரை வாபஸ் பெற்றார் தயாரிப்பாளர் சி.வி.குமார்!

சினிமா ஃபைனான்ஸியர் அன்புச்செழியனுக்கு எதிராக அளித்த புகாரை தயாரிப்பாளர் சி.வி.குமார் இன்று திடீரென திரும்பப் பெற்றுள்ளார்.
 

cv kumar


இயக்குநர் மற்றும் நடிகர் சசிகுமாரின் மைத்துனர் அசோக்குமார். இவர் சினிமா ஃபைனான்ஸியர் அன்புச்செழியனிடம் கடன் வாங்கி இருந்தார். கடனைத் திருப்பிக் கேட்டு அன்புச்செழியன் தரப்பில் இருந்து நெருக்கடி அதிகரித்தது. மன உளைச்சலுக்கு உள்ளான அசோக்குமார் தூக்குப்போட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இது சினிமாத் துறையில் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து, போலீஸார் கந்துவட்டிக் கேட்டு மிரட்டி தற்கொலைக்குத் தூண்டியதாக அன்புச்செழியன்மீது வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகிறார்கள். 

இதற்கிடையே, 'திருக்குமரன் என்டர்டயின்மென்ட்' என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்திவரும் சி.வி.குமார் அன்புச்செழியன் தரப்புமீது சென்னை காவல்துறை ஆணையரிடம் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில், தான் தயாரித்து இயக்கியுள்ள 'மாயவன்' திரைப்படத்தை வெளியிட அன்புச்செல்வனுக்குச் சொந்தமான கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் இருந்து தடையில்லாச் சான்று பெற்றுத்தர வேண்டும் என்றும் கோபுரம் பிலிம்ஸ் வசம் இருக்கும் தன்னுடைய நிதி ஆவணங்களைப் பெற்றுத்தர வேண்டும் என்றும் சி.வி.குமார் கோரியிருந்தார். இந்நிலையில், அவற்றை கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்தின் வழக்கறிஞர்கள் சி.வி.குமாரிடம் ஒப்படைத்துள்ளனர். இதையடுத்து வழக்கை வாபஸ் பெறுவதாக சி.வி.குமார் அறிவித்துள்ளார். மாயவன் திரைப்படம் விரைவில் வெளியாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.